படையாண்ட மாவீரா 
விமர்சனம்

படையாண்ட மாவீரா: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

பாமகவில் முன்னணித் தலைவராகவும் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்து மறைந்த காடுவெட்டி குரு என்கிற குருநாதனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது ‘படையாண்ட மாவீரா.’

ஏற்கெனவே ’காடுவெட்டி’ திரைப்படம் குருவின் வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்ட நிலையில், ’படையாண்ட மாவீரன்’ எப்படி வந்துள்ளது என்று பார்ப்போம்.

இந்த படம், காடுவெட்டி குரு மீதிருந்த தவறான கண்ணோட்டங்களை உடைத்து, அவர் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடியதையும், சாதி பாகுபாடுகளை எதிர்த்ததையும் படம் பேசுகிறது.

மேலும், குருவின் தாத்தாவான ரத்தினசாமி படையாட்சி, அவரின் மகனான ஜெயராமன் (குருவின் தந்தை) ஆகியோர் தலித் மக்களின் உரிமைக்காகப் போராடியதையும் படம் பதிவு செய்கிறது. இதனால், ஜெயராமன் சொந்த சாதிக்குள்ளேயே எதிர்ப்பை சம்பாதித்துக் கொலையுண்டதையும் படம் பேசுகிறது.

காடுவெட்டி குருவின் வாழ்க்கை சம்பவங்களோடு கொஞ்சம் கற்பனையையும் கலந்து எடுத்திருக்கிறார் இயக்குநர்.

பெண்கள் மீது கை வைப்பவர்களை வெளுத்துவாங்கும் காடுவெட்டி குரு, பெரும்பாலும் காவல் துறையோடும், மாவட்ட ஆட்சியர்களோடும் அதிகம் மல்லுக்கட்டியிருக்கிறார். அதோடு, வீரப்பனை நேரில் சென்று சந்தித்தது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தது, அம்பேத்கர் சிலை திறந்து தலித் – வன்னியர் ஒற்றுமைக்குப் பாடுபட்டது என பல சுவராஸ்யமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

சேகுவாரா, பெரியார் புத்தகங்களை குரு ஆர்வமாகப் படிப்பது வியப்பளிக்கிறது. அதேபோல், அவரின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் படம் பேசுகிறதா என்றால் இல்லை. மாநாட்டு மேடைகளில் அவர் ஆற்றிய ஆக்ரோஷமான உரைகள், அவரின் அரசியல் வாழ்க்கை திமுகவில் தொடங்கியதையும் படம் பதிவு செய்யவில்லை.

காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், விஜயகாந்த் சாயல் இருப்பதால், சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்து ஏரியாவிலும் அவரைப் போலவே நடித்திருக்கிறார். உணர்ச்சிகரமான வசனங்கள் பேசும் காட்சிகளில் நெருப்பாக நடித்திருக்கிறார். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு ஒரு நடிகராக நியாயம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பூஜிதாவுக்குப் பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் தலை காட்டுவதோடு சரி. காடுவெட்டி குருவின் தந்தை ஜெயராமன் கதாபாத்திரத்தில் தோன்றும் சமுத்திரக்கனி பொருத்தமான தெரிவு. இளம் வயது காடுவெட்டி குருவாக திரையில் தோன்றும் அறிமுக நடிகர் தமிழ் கௌதமனின் நடிப்பும் சிறப்பு. காடுவெட்டி குருவின் அரசியல் வாழ்க்கை தொடர்பான இந்த படைப்பில் அவர் சார்ந்த அரசியல் கட்சியின் தலைவர் இரண்டே காட்சியில் மட்டுமே வருகிறார்.

ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் ஒகே ரகம். சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசையில் சில இடங்களில் கவனம் ஈர்த்தாலும், பெரும்பாலான இடங்களில் பழைய படங்களை நினைவுபடுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ராஜா முகமது பணியிலும் குறையில்லை.

“நெருப்பு சட்டியிலிருந்து பிறந்த கூட்டம் இல்லடா… நெருப்பாகவே பிறந்த கூட்டம்டா…” என்பது போன்ற பஞ்ச் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். சாதியை இனம் என்று கூறும் வசங்களை தவிர்த்திருக்கலாம்.

படையாண்ட மாவீரா- குருவின் நன்முகத்தைப் பதிவு செய்கிறது.!