பறந்து போ 
விமர்சனம்

பறந்து போ: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

நம்மை பிய்த்துத் தின்னும் பெருநகர வாழ்விலிருந்து கொஞ்சம் இளைப்பாறுங்கள் என்கிறது ராமின் ’பறந்து போ’ திரைப்படம்.

சென்னை புறநகரில் வசிக்கும் கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) தம்பதியினர் சொந்தமாக தொழில் செய்வதால், தங்களுடைய எட்டு வயது பிள்ளையை (அன்பு) வீட்டிலேயே பூட்டி வைக்கின்றனர். அவனுக்கு எல்லாம் விரல் நுனியில் கிடைத்தாலும், யாரும் உடன் இல்லாத வாழ்க்கை மீது அவனுக்கு ஒருவித வெறுப்பும் விரக்தியும் ஏற்படுகிறது. ஒருநாள் தன்னுடைய அப்பாவை வலுக்கட்டாயமாக வெளியே போகலாம் என்று அழைக்கிறான். அப்படி வெளியே செல்லும் தந்தையும் மகனும் எதிர்கொள்ளும் நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான சம்பவங்களின் தொகுப்பே ’பறந்து போ’.

பெரியவர்கள் ஒருபோதும் குழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்வதே இல்லை என்பதைப் படம் பேசுவதுபோல் தெரிந்தாலும், இயந்திரத்தனமான வாழ்க்கையையும் இயந்திரங்களோடு என்றாகிவிட்ட வாழ்க்கையையும் படம் கேள்விக்குட்படுத்துகிறது. ஆனாலும் இந்த கேள்வியை கற்றது தமிழ் ஜீவா பாணியில் இல்லாமல்; கலகலப்பான சிவா பாணியில் கேட்டிருக்கிறார் இயக்குநர் ராம். அதோடு, தன் மீதான பிம்பத்தையும் உடைத்திருக்கிறார் அவர்.

அப்பா – மகனின் பயணத்தை சுவாரஸ்யமான திரைக்கதையாலும், சிரிக்க வைக்கும் வசனங்களாலும், வலுவான கதாபாத்திர வார்ப்பாலும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

அன்புவின் உலகம் எப்படியானதாக இருக்கிறது என்பதில் தொடங்கும் படத்தின் கதை, அஞ்சலி வரும்போது சூடுபிடிக்கிறது. கொஞ்சம் தவறி இருந்தாலும் அவரின் கதாபாத்திரம் வேறு ஒன்றாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். ஓடிக் கொண்டே இருக்கும் மகனை நாலு சாத்து சாத்தி, உட்காருடா என சொல்வதுக்கு பதிலாக, அவனைப் பார்த்து ‘I am proud of you my son' என ஒவ்வொரு முறையும் சிவா சொல்லும்போது நம்மால் சிரிக்காமல் இருக்காமல் இருக்க முடியாது. இடைவேளைக்குப் பிறகு சிறு தொய்வு இருந்தாலும் முழுப்படமும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து அனுப்புகிறது.

ராம் எடுக்கும் படத்தில் சிவா என்கிற கோமாளித்தனம் மிகுந்த நடிகரா? ராம் உக்கிரமா இருப்பாரே? சாவு வீட்டில் கூட சிவா காமெடி பண்ணுவாரே என சற்று அச்சமாகத்தான் இருந்தது. ராமுக்கு அதுதான் தேவைப்பட்டிருக்கிறது. கோகுல் என்ற கதாபாத்திரத்துக்கு சிவா தவிர வேறு யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. அவரின் அசால்ட்டான உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்துக்குப் பொருந்திப் போகிறது. கலகலப்புக்கு பிறகு சிவா இதில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

கிரேஸ் ஆண்டனி அம்மாவாகவே வாழ்ந்துள்ளார். மிகை இல்லாத நடிப்பால் கவர்கிறார். கணவனிடம் பேசினால் மகிழ்ச்சி அடைவது, பிள்ளையின் தவிப்பை கேள்விப்படும் போது தானும் தவிப்பது என ஒரு பொறுப்புள்ள கதாபாத்திரமாக மிளிர்கிறார் கிரேஸ்.

அன்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிதுல் ரியான் படத்துக்கு பெரும் பலம். முழுப்படத்தையும் அவனே தாங்கி செல்கிறான். ‘தங்கமீன்கள்’ சாதனா போன்று ’பறந்து போ’ மிதுல் ரியான் நிச்சயம் கவனிக்கப்படுவார். இவர்களுடன் அஞ்சலி, பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், ஸ்ரீஜா ரவி ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

“சின்ன வயசுல இருந்து இதான் பிரச்னை…நான் எது சொன்னாலும் உனக்கு புரியாது.” என மகனிடம் அப்பா சொல்ல, அதற்கு மகன், “சின்ன வயசுல இருந்து இதான் பிரச்னை… எனக்கு புரியுற மாதிரி உனக்கு சொல்லவேத் தெரியாது..” என்பார். இப்படியான வார்த்தை விளையாட்டு வசனங்கள் படம் முழுக்க சிரிக்க வைக்கிறது.

தெருக்கூத்து போன்று கதை பாடலாகவே பாடப்படுகிறது. படம் முழுக்க பாடல்கள். கதைக்கேற்ற பாடலை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. சந்தோஷ் தயாநிதியின் இசையும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் சிறப்பே.

இயக்குநருக்கு அடுத்தபடியாக பாராட்டப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்தான். கதையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது அவரின் ஒளிப்பதிவு. ட்ரோன் காட்சிகளைத் தேவையான இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். மதியின் படத்தொகுப்பும் கச்சிதம்.

பெற்றோர்களிடமிருந்து குழைந்தைகளை அந்நியப்படுத்தியுள்ள நகரமயமாதல், தலைமுறைகளுக்கு இடையேயான முரண்பாடு, மாறிவரும் ஆண் - பெண் உறவு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என பல விஷயங்கள் பேசப்பட்டாலும், ‘பறந்து போ’ குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க வேண்டிய ஜாலியான படம்.

ராம், நீங்க இனி இந்த மாதிரி படங்களே கொஞ்சம் ரெண்டு மூணு எடுங்க.. எப்பயும் டெரர் மூடுலயே படம் எடுத்தா எப்படி?