‘பராசக்தி’ என்ற தலைப்பு - இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் - தணிக்கை வாரியத்தின் தாமதம்- இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்போடும் இழுத்தடிப்போடும் இன்று வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயனின் பராசக்தி.
‘தீ பரவட்டும்’ என்ற முழக்கத்துடன் விளம்பரப்படுத்தப்பட்ட பராசக்தி எதையாவது பற்ற வைத்திருக்கிறதா என்று பார்ப்போம்.
இந்தித் திணிப்புக்கு எதிராக ‘புறநானூறு’ என்ற பெயரில் மாணவர் படை நடத்திவரும் சிவகார்த்திகேயன் (செழியன்) ரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு, அதில் தனது உயிர் நண்பனை இழக்கிறார். இதனால், போராட்ட வாழ்க்கைக்கு விடை கொடுக்கிறார்.
சில ஆண்டுகள் கழித்து, அண்ணன் கைவிட்ட போராட்டத்தை அவரது தம்பி அதர்வா (சின்னத்துரை) கையிலெடுக்கிறார். இளம் ரத்தம், ஆவேசம், தளராத உறுதி எஸ்.கே.வுக்கு அச்சத்தைத் தர, அவரை அறவழியில் போராட அறிவுறுத்துகிறார். இதற்கிடையே, இந்தி தெரியாத காரணத்தால் எஸ்.கே.வுக்கு மத்திய அரசின் வேலை கிடைக்காமல் போகிறது. இதனால், தம்பியுடன் சேர்ந்து இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துகிறார். இந்தப் போராட்டத்தை ஒடுக்க அனுப்பப்படும் மத்திய காவல் அதிகாரியான ரவி மோகன், போராட்டக்காரர்களை எப்படி கையாண்டார்? மொழிப் போராட்டத்தால் நிகழ்ந்த மாற்றம் என்ன என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.
உலகம் முழுவதிலும் மொழித்திணிப்பால் எந்தெந்த நாடுகள் பிளவுற்றன என்பதை முதல் காட்சியிலேயே இயக்குநர் சுதா கொங்கரா அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.
“மொழி என்பது வெறும் பேசுவதற்கான விஷயம் மட்டுமல்ல, அது பல உரிமைகளைச் சுமந்திருக்கிறது” என்பதை தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தோடு தொடர்புபடுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடு ஒன்றிப்போன ஒரு நிகழ்வை, போலீஸ் உயர் அதிகாரியின் தனிப்பட்ட பகையாக சுருக்கியதிலேயே திரைக்கதையின் சறுக்கல் ஆரம்பிக்கிறது. தீவிரமான அரசியல் கதைக்கு சுவாரஸ்யம் இல்லாத காதல், தேவையில்லாத பாடல்கள் பெரும் சுமை.
மாநில அமைச்சரை ரப்பர் ஸ்டாம்பாகவும், மத்திய போலீஸ் உயர் அதிகாரியை சர்வ அதிகாரமும் பெற்றவராகக் காட்டுவது, பிரதமர் இந்திராகாந்தியை எஸ்.கே. நடுரோட்டில் வழிமறித்து நியாயம் பேசுவதெல்லாம் கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடுகிறது.
படத்தின் கதை மதுரை, சென்னை, பொள்ளாச்சி, டெல்லி போன்ற இடங்களில் நிகழ்வதாகக் காட்டினாலும், காட்சிகள் அந்தந்த நிலப்பரப்பைப் பிரதிபலிப்பதாக இல்லை.
இடைவேளைக்கு முன்னர், அண்ணா, கலைஞர் கருணாநிதி வரும் காட்சிகள், பொள்ளாச்சியில் ரவிமோகன் நிகழ்த்தும் வன்முறை காட்சிகள் மட்டும் ரத்தத்தைச் சூடேற்றுகின்றன.
செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.கே.வின் தோற்றம், நடிப்பு 1960களை நினைவுபடுத்துவதாக இல்லை. அவர் தன் சமகால பாணியிலேயே நடித்திருக்கிறார்.
ரவிமோகன் கொடூரமான அதிகாரியாக மிரட்டுகிறார். “எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை” என்கிற அவரது அணுகுமுறை, ஒவ்வொரு காட்சியிலும் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.
மாணவர் போராட்டத்தை முன்னெடுக்கும் இளம் போராளியாக அதர்வா நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஆனாலும், அவரின் கதாபாத்திர உருவாக்கம் அந்த அளவுக்கு முழுமை பெறவில்லை. தான்தோன்றித்தனம் இருக்கும் ஒருவர் மொழிப்போராட்டத்தைப் புரிந்துகொண்டு எப்படி தலைமையேற்றார் என்று கேள்வி எழுகிறது.
ஸ்ரீலீலா, இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். அவரது நடிப்பு இயல்பாக இருந்தாலும், முதல் பாதியில் இடம்பெறும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா காதல் காட்சிகள், உண்மையிலேயே பொறுமையைச் சோதிக்கின்றன. ஆனால், இரண்டாம் பாதி, கிளைமாக்ஸில் கவனிக்க வைக்கிறார்.
நடிகர் பாசில் ஜோசப் கிளைமாக்ஸில் வருகையில் கூஸ்பம்ப்ஸ்!. அண்ணாவாக சேத்தன், கலைஞர் கருணாநிதியாக குரு சோமசுந்தரம் கண்முன் நிற்கின்றனர். இந்திரா காந்தியாக நடித்திருப்பவர் அப்படியே நிஜ இந்திரா போன்றே உள்ளார்.
படம் முழுவதும் “இது இந்திக்கு எதிரான படம் அல்ல… இந்தித் திணிப்புக்கு எதிரான படம்” என்ற தெளிவுடன் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல வரலாற்று சம்பவங்கள் “கற்பனை, சித்தரிப்பு” என்று குறிப்பிடப்படுகிறன. கட் செய்யப்பட்ட காட்சிகள், மியூட் செய்யப்பட்ட வசனங்கள் இருப்பதையும் ரசிகர்கள் உணர்கிறார்கள்.
இந்த படத்தின் வசனங்கள் கவனமாக எழுதப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. “இந்தித் திணிப்புக்கு தான் எதிரி… இந்திக்கு இல்லை”, “எனக்கு தேசபக்தி க்ளாஸ் எடுக்காதே” போன்ற வசனங்கள், தியேட்டரை அதிர வைக்கின்றன.
கலை இயக்கம் 1960-களை ஓரளவு பிரதிபலித்தாலும். மதுரை தொடர்பான காட்சிகளை செட்டுக்குள்ளே எடுத்திருப்பது பளிச்செனத் தெரிகிறது. ஆனாலும் செட், ஆடை வடிவமைப்பில் அந்தக் காலகட்டத்தின் வாசனை வீசத்தான் செய்கிறது.
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்தாலும் பாடல்கள் எதுவும் அசைபோட வைக்கவில்லை. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.
தமிழில் முக்கியமானவொரு அரசியல் திரைப்படமாக வந்திருக்க வேண்டிய பராசக்தி, முதல் பார்வையில் ஜஸ்ட் மிஸ் ஆனதைப் போல் தோன்றுகிறது!