parimala & co poster 
விமர்சனம்

’என்னாங்கோ, இப்பிடி பண்றீங்கோ…பரிமளா அன் கோ

மிஸ்டர் முள்

2009ல் ‘பசங்க’ என்கிற தரமான படத்துடன் அறிமுகமான பாண்டிராஜ் இந்த 17 ஆண்டுகளில் 11 படங்களை இயக்கியிருக்கிறார். இந்த பரிமளா அன் கோ அவருக்கு 12 வது படம். ’கடைக்குட்டி சிங்கம்’, ‘தலைவன் தலைவி’ போல் பெரும்பாலும் குடும்பப் படங்களை இயக்குபவர் என்று பெயரெடுத்த அவர் தனது முத்திரையை இன்னும் கொஞ்சம் சற்று அழுத்தமாக பதித்துக்கொள்ள பரிமளா மற்றும் குடும்பத்தினரோடு வந்திருக்கிறார்.

இந்த குடும்பம் எப்படிப்பட்டது… இவர்களுக்கு என்னதான் பிரச்சினை என்பதுதான் இரண்டேகால் மணிநேரக் கதை.

சென்டிமெண்டாக பாட்டி பெயரைச் சூட்டினார்கள் என்கிற வகையில் குடும்பத்தலைவரான ஜெயராம்தான் பரிமளா. சுதந்திர தினத்தன்று பிறந்ததால் ஊர்வசியின் பெயர் சுதந்திரம். இவர்களுக்கு சஞ்சனா, அனந்திகா என்கிற இரு வாலிப வயது மகள்கள். இளையமகள் சஞ்சனாவுக்கு ஏரியா ரவுடி சாண்டி லவ் டார்ச்சர் கொடுக்கிறான். ‘இளையவளைக் கட்டிக்கொடுக்கலைன்னா மூத்தவளையும் சேர்த்துத் தூக்கிட்டுப்போயிருவேன்’ என்கிற அளவுக்கு அவனது அட்ராசிட்டி அதிகரிக்கிறபோது ‘த்ரிஷ்யம்’ கமல் ஸ்டைல்ல அவனைப் போட்டுத்தள்ளிருவோமா என்று குடும்பம் திட்டம் தீட்டிக்கொண்டிருக்க, அடுத்த சில மணி நேரங்களில் சாண்டி கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறான்.

அந்தக் கொலையை செய்தது யார் என்று குடும்பத்துக்குள்ளேயே ஒருவர் மேல் மற்றவருக்கு சந்தேகம் இருக்க, அக்குடும்பத்தின் மாமா, சித்தப்பா, சாண்டியின் அம்மா, சஞ்சனாவின் காதலர், ஹவுஸ் ஓனர் யோகிபாபு, அவரது தொழில் விரோதிகள் என்று கதையில் வருகிற சுமார் ஒரு டஜன் சந்தேகப் பேர்வழிகளை இணைத்து முடிச்சு மேல் முடிச்சாகப்போடுகிறார் இயக்குநர். அவரது சந்தேகப் பட்டியலில் இடம் பெறாமல் போனவர்கள், ’ ஒருவழியா நம்மளை முடிச்சுவிட்டுட்டீங்க போங்க’ என்று மைண்ட்வாய்ஸில் கதறும் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மட்டுமே.

நாயகிகள் சஞ்சனாவும், அனந்திகாவும் சமர்த்தாக நடித்திருக்க, ஜெயராம், ஊர்வசி ஜோடி கதையின் சுவாரசியம் போதாமையால் போரடிக்கிறார்கள். காவல்துறை உயர் அதிகாரியாக வரும் மிஷ்கின் தனது தெனாவெட்டான நடிப்பால் படத்தை அவ்வப்போது காப்பாற்றுகிறார். யோகிபாபு, சாண்டிமாஸ்டர் இருவரும் தண்டத்துக்கு வந்துபோகிறார்கள். தயாரிப்பாளர் தமிழ்குமரனும் ஒரு கான்ஸ்டபிள் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட நடிப்பு வராமல் துடியாய் துடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இப்படி ஒருவர் இருக்கிறாரா அல்லது கற்பனை ஏ ஐ கேரக்டரா என்று சந்தேகம் வருமளவுக்கு இசையமைப்பாளர் என்று டைட்டில் கார்டு வருகிற இடத்தில் ஃபாக்ஸ்என் என்றொரு பெயர் போடுகிறார்கள். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே காதுகள் பத்திரம் ரகமே. ஒளிப்பதிவு குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை.

முன்னொரு காலத்தில் சந்தானம், நாயகன், தேவர் மகன் போன்ற சில படங்களை எடுத்துக்கொண்டு விஜய் டிவியில் ஸ்பூப் காமெடி பண்ணுவார் அல்லவா ? அதுபோன்று த்ரிஷ்யம் படத்தை வைத்து ஸ்பூப் காமெடி பண்ணுகிறாரோ என்று சந்தேகம் வருமளவுக்கு அவ்வளவு அலட்சியமான திரைக்கதை.

துவக்கத்தில் இரண்டேகால் மணிநேரக் கதை என்று சொன்னேன் அல்லவா ? அதை இரண்டேகால் மணிநேர வதை என்று சொன்னாலும் தப்பில்லை.

ஆக பரிமளா அன் கோ என்னாங்கோ இப்பிடி சித்ரவதை பண்றீங்கோ…

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram