விமர்சனம்

பாரிஸ் கஃபே - விமர்சனம்

மிஸ்டர் முள்

ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ இன்றைய தேதிக்கு தமிழ்சினிமா இயக்குநர்களின் மூன்று மனம் கவர்ந்த கன்டென்டுகள் 1. ஆணவக்கொலை. 2. சைல்ட் அபியூஸ். 3. மலைஜாதி மக்களுக்கு நடக்கும் அநீதி. சமீபகாலமாக இந்த மூன்று டீக்களைத்தான் நம்ம ஆட்கள் ஆத்து ஆத்து என்று ஆத்துகிறார்கள்.

இந்த பாரிஸ் கஃபேயில் அவ்வாறு ஆத்தப்படுவது ஆணவக்கொலை.

மருத்துவரான குரு சோமசுந்தரமும் அவரது மனைவி அனுமோலும் மனமொத்த தம்பதிகள். அவர்களுக்கு அர்ச்சனா என்றொரு மகள். வெளிநாட்டில் வேலையில் சேரப்போகும் மகளுக்கு அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டார்கள் என்றொரு தகவல் தெரியவே, அவர்களை சேர்த்து வைப்பதற்காக நாடு திரும்புகிறார்.

வந்து விசாரிக்கும்போதுதான் தெரிகிறது. ஒரு ஆணவக்கொலையை மறைப்பதற்கு உதவியிருக்கிறார் டாக்டர் அப்பா என்பது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் மனைவி கணவனைப் பிரிந்திருக்கிறார். ஸோ மனைவியுடன் இணைய சம்மதிக்கும் டாக்டர் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக கோர்ட்டில் சரணடைய நடந்த ஆணவக்கொலைக்கு தண்டனை வாங்கித்தருகிறார்கள்.

நம்மூரில் நடந்த ஆணவக்கொலைக்கும் பாரிஸ் கஃபேக்கும் என்னய்யா சம்பந்தம் ? என்று கொதிக்கிறீர்களா? சும்மா படித்ததற்கே கொதிப்பு வந்தால் அனுபவித்த எமக்கு எப்படி வலித்திருக்கும்?

குரு சோமசுந்தரம், அனுமோல், அவர்களது மகள் காதலன், சம்பந்தப்பட்ட ஆணவக்கொலை காதலர்கள் என்று மூன்று ஜோடிகளின் வழியாக இக்கதையை ஜோடித்திருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.

குடும்பத்துக்காக பயந்து ஆணவக்கொலைக்கு ஆதரவாக செயல்பட்ட குரு சோமசுந்தரம் பின்னர் அதே குடும்பத்துக்காக ஜகா வாங்கி கோர்ட்டுக்குப் போவது தொடங்கி மொத்தப்படமே ‘அதுல ஒண்ணுமில்லை. கிழிச்சுப்போட்டுரு’ ரகம்தான்.

மற்றபடி குரு சோ. நடிப்பில் வழக்கம்போல் மிளிர்கிறார். அனுமோலும்தான்.

இந்த இருவரின் நடிப்பு தவிர்த்து படத்தில் இசை, ஒளிப்பதிவு போன்ற எது குறித்தும் சொல்லிக்கொள்ள எதுவுமில்லை.

படம் குறித்து உண்மையை சொல்வதானால் ஒரு ஆச்சாரமான மனிதர், தன் கைப் பக்குவத்தோடு பீப் பிரியாணி செய்ய ஆசைப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

பாரிஸ் கஃபே ரசிகர்களுக்கு பெப்பே…

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram