ராஜபுத்திரன் திரைப்படம் 
விமர்சனம்

ராஜபுத்திரன்: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

பிரபு – வெற்றி கூட்டணியில் அறிமுக இயக்குநர் மகா கந்தன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது ராஜபுத்திரன் திரைப்படம்.

தென்மாவட்ட கிராமம் ஒன்றில் நன்மதிப்புடையவராக இருக்கிறார் செல்லையா (பிரபு). தன் மகன் பட்ட முத்துவை (வெற்றி) வேலைவெட்டிக்கு கூட அனுப்பாமல் தன் கண் பார்வையிலேயே வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் விவசாயம் பொய்த்துப்போக, தந்தை படும் கஷ்டத்தை பார்த்து, அவருக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார் வெற்றி. வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை யாருக்கும் தெரியாமல் ஊரிலிருக்கும் சொந்தக்காரர்களிடம் கொண்டு சேர்க்கும் சட்டவிரோத செயலை (வரியைத் தவிர்க்க) செய்யும் லிங்காவிடம் (கோமல் குமார்) பணிக்குச் சேர்கிறார். அங்கு நடக்கும் ஒரு பிரச்னையால் வெற்றியின் வாழ்க்கையில் பெரியதொரு சிக்கல் ஏற்படுகிறது. அதை அவர் சமாளித்தாரா? அப்பா - மகன் பாசம் என்னவானது? என்பதைச் சொல்கிறது அறிமுக இயக்குநர் மகா கந்தன் இயக்கியிருக்கும் ராஜபுத்திரன்.

அப்பா – மகன் பாசக்கதையை காதல், சண்டை, நகைச்சுவை கலந்த ஒரு கமர்சியல் படமாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், பெரும்பாலான காட்சிகள் பார்த்துச் சலித்த பழைய பல்லவியாகவும், ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதையும் ஏமாற்றமே.

90களில் நடக்கும் கதை என்பதால், லாஜிக் பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால்கூட, வில்லன் பற்றிய சித்தரிப்பு, வழக்கொழிந்துபோன காதல் காட்சிகள், அபத்தமான உருவக்கேலி காமெடிகள், கள்ளுக்கடை கவர்ச்சிப் பாடல் எனச் சுவாரஸ்யமற்ற தொகுப்பாகவே நகர்கிறது படம்.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடிக்கும் வெற்றி, இந்த முறை குடும்ப ஆடியன்ஸை குறி வைத்து கதை தேர்வு செய்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அடித்து ஆடியிருந்தாலும் அப்பா - மகன் பாசம், காதலியுடனான ரொமான்ஸ் என இரண்டும் டொக்கு வைத்து ஆடியிருக்கிறார். நாயகியாக கிருஷ்ண பிரியா, காதல் காட்சிகளில் நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். வில்லனை கொலை செய்யும் காட்சியில் மிரட்டி எடுத்திருக்கிறார்.

செல்லையா கதாபாத்திரத்தில் கச்சி்தமாக பொருந்தியிருக்கிறார் பிரபு. யதார்த்தமான நடிப்பால் படத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.

காமெடிக்கு என தங்கதுரை, இமான் அண்ணாச்சி இருவரும். ‘என்னப்பா… ஜோக்ல ஜோக்கே இல்லை’ என்ற ரகத்தில் உள்ளது காமெடிகள். வடிவேலுவின் துபாய் ரிட்டர்ன் காமெடியை அப்படி காபி அடித்திருக்கிறார்கள்.

முக்கிய வில்லனாக கோமல் குமாருக்கு நாயகனைவிடவும் ஏகப்பட்ட பில்டப் காட்சிகள். அவர் பிடிக்கும் சுருட்டுக்கே, படத்தின் பாதி பட்ஜெட் செலவாகியிருக்கும் போல. அடிப்பொடி வில்லன்களாக லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான். இவர்களில் லிவிங்ஸ்டனின் பாத்திரம் மட்டும் சற்றே ஆறுதலாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதையும் துருத்திக் கொண்டு தெரியும் ஒட்டு மீசை மூலமாக காலி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி, செங்காட்டு பூமியை அதற்கேற்ற தாக்கத்துடன் திரையில் ஏற்றியிருக்கிறார். ராகேஷ் ராக்கியின் சண்டைக் காட்சிகளுக்குப் பக்கபலமாக நிற்கிறது. விறுவிறுப்புக்காகப் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் கமலக்கண்ணன்.

வில்லன் கூடாரம், சந்தை செட்டப், அந்தக் கால பேருந்து, வீடுகள் எனக் கலை இயக்குநர் அய்யப்பனின் உழைப்பு பாராட்டத்தக்கது. நௌஃபல் ராஜாவின் பின்னணி இசையும் பாடலும் ஓகே ரகம்.

அதீத செயற்கைத்தனமும், புதிதாக எதுவுமில்லாத திரைக்கதையும் ஏமாற்றம் தருவதால் ராஜபுத்திரன், ஏழைபுத்திரனாகி விட்டதே....