ராம் அண்ட் லீலா 
விமர்சனம்

ராம் அண்ட் லீலா -விமர்சனம்

மிஸ்டர் முள்

ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வெர்த்திகா ஜெயின் நடித்திருக்கும் படம் 'ராம் அண்ட் லீலா'.

'ராம் அண்ட் லீலா' என்றவுடன், இது ஒரு பக்தி படமாக இருக்குமோ என்று யாரும் குழப்பமடைய வேண்டாம். இது ஒரு வினோதமான காதல் கதை.

இந்தக் கதையை சொல்லும்போதே, உங்களுக்கு ஒரு மூன்று மாதத்திற்கு முன்பு ரிலீசான, குஷ்பூ மகள் தயாரித்த 'டபுள் ஆக்குபன்சி' படம் ஞாபகத்திற்கு வரும்.

இந்தப் படத்தின் கதாநாயகன் பெயர் ரகுராம், கதாநாயகி பெயர் லீலா.

இந்தப் படத்தின் கதையில், கதாநாயகன் ரியோவுக்கு கல்யாணமே செட் ஆகவில்லை. 'தம்பி வயசாயிடுச்சு, காலாவதி ஆயிட்டே வர்ற... சீக்கிரம் ஒரு கலாவதிய கண்டுபிடி' என்று வீட்டில் வழக்கம் போல நச்சரிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் தன் நண்பர் கொடுக்கும் ஐடியாவை வைத்து லோக்கல் டிரெயினில் தனக்கு பெண் தேட ஆரம்பிக்கிறார் ரியோ. அப்போது, அவர் வலையில் சிக்குகிறார் ஹீரோயின் வெர்த்திகா ஜெயின்.

பிறகு இருவரும் காதலிக்கிறார்கள். அப்போது, ஒரே ஒரு கண்டிஷனில் ரொம்ப கறாரா இருக்காங்க ஹீரோயின் வெர்த்திகா. அது என்னவென்றால், மாலை 6 மணிக்கு மேல், அதிகாலை 6 மணிக்கு முன்னால் அவரை சந்திக்க டிரை பண்ணவே கூடாது. இது இந்தப் படத்திற்கு ஒரு சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

கவுண்டமணி ஸ்டைல்ல, 'ஒருவேளை அந்தப் பொண்ணுக்கு மாலைக்கண் இருக்குமோ?' என்ற மாதிரி எல்லாம் டவுட் வருகிறது.

இத்தனை டிவிஸ்ட் கொடுத்துவிட்டு, கடைசியா இந்தப் பொண்ணு வந்து ஒரு வேற்றுக்கிரகவாசி என்று சொல்கிறார்கள். அதனால், மாலை 6 மணிக்கு மேல் இந்த பெண் ஆணாக மாறிவிடுகிறார்.

கதாநாயகனுடைய நண்பர் ஒருவர்தான் அந்த ஆண், அவர் பெயரும் ராம்தான். அவர்தான் இந்தப் பெண்ணாக மாறுகிறார். இந்தப் பெண்தான் அவராக மாறுகிறார். இந்த ராம் கதாநாயகனுடைய தங்கையை காதலிக்கிறாங்க.

அந்தப் பெண் லவ் செய்யும் பையனைதான் கதாநாயகன் காதலிக்கிறார்.

கதையை கேட்கும்போதே இவ்வளவு குழப்பமாகிறதே, கதையைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!

புதுமுகம் வெர்த்திகா ஜெயின்... அழகா இருக்கிறார். ஆனால், 'நடிப்புன்னா எத்தனை கிலோ, என்ன விலை?' என்று கேட்கிறார்.

விஜய் டிவி மாகாபா ஆனந்த் ஒரு கேரக்டரில் வருகிறார். மா கா பாவும், கதாநாயகியை போல், 6 மணிக்கு மேல் ஒரு ஆன்டியாக மாறிவிடுகிறார்.

கதாநாயகியின் குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மா கா பா என்று அனைவரும் 6 மணிக்கு மேல் ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறிவிடுகிறார்கள். ஏனெனில், எல்லாருமே வேற்றுக்கிரகத்தைச் சேர்ந்தவர்கள்... அதாவது ஏலியன்ஸ்!

இதுபோன்று ஒரு கதைக்குள், பல்வேறு உள் கதைகளை வைத்துக்கொண்டே போகிறார் டைரக்டர்.

நமக்கு படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் லைட்டா பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆகிறது.

இப்படியொரு சுவாரசியமில்லாத காப்பி அடித்த கதையில், டெக்னிக்கலாக ரொம்ப இம்ப்ரஸ்ஸிவாக எதுவும் இல்லை. ஒளிப்பதிவும் சரி, இசையும் சரி எல்லாமே சுமார் ரகம்தான்.

மொத்தத்தில் நீங்கள் படம் பார்க்க சென்றால், "கன்வின்ஸ் ஆக மாட்டீங்க, ரொம்ப கன்ஃபியூஸ் ஆயிடுவீங்க."

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram