டபுள் ஆக்ட் கதை என்றாலே ஒரு ஹீரோ அனாதையாக இருக்க வேண்டும் என்பது திரைக்கதை விதிகளில் ஒன்றுதானே ?
யெஸ் இந்த ரெட்டதலைகளில் ஒரு தல அனாதை. தாய், தந்தையர் என்றாலே என்னவென்று அறியாத அனாதையான முதல் அருண் விஜய்க்கு பதின்ம வயதிலேயே இன்னொரு அனாதையே நாயகியாகக் கிடைத்து இருவரும் கடற்கரையோரங்களில் பரஸ்பரம் பன், டீ சாப்பிட்டு தங்களையும் காதலையும் வளர்க்கிறார்கள்.
அந்த ஏழை நாயகிக்கு கோடிப் பணங்களில் புரள ஆசை. ஆனால் வழி ? அவர்கள் வழியில் இரண்டாவது அருண் விஜய் வருகிறார். அவரோ மில்லியனர்.
அந்த மில்லியனரைப் போட்டுத் தள்ளிவிட்டு அவரது சொத்துக்களை முதலாமவர் சுருட்டிக்கொள்ள முயல, பணம் வந்ததும் ஏழை நாயகி காதலனை விட பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க, இந்த டெம்ப்ளேட் காட்சிகளை வைத்துக்கொண்டு இயக்குநர் நம் உயிரை எடுக்க என்று போகிறது கதை.
அருண் விஜய் சண்டைக் காட்சிகளில் மெனக்கெட்ட அளவுக்கு இரட்டை வேடங்களுக்கு கிஞ்சித்தும் மெனக்கெடவில்லை. ஆனால் நடிப்பில் படத்துக்குப் படம் சென்டி மீட்டர்களில் முன்னேறிக்கொண்டிருக்கிறார் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.
இரட்டை நாயகிகளில் அனாதையாக வருகிற சிட்தி இட்னானிக்கு வாய்ப்புகள் அதிகம். படம் முழுக்க முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நம்மை சோதிக்கிறார். தான்யா ரவிச்சந்திரனும் நானும் படத்துல இருக்கிறேன்தான்யா என்று ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறார். இவர் வில்லியாம். இவருக்கு அடுத்து ஹரிஷ் பேரடி, ஜான் விஜய் தொடங்கி எண்ணிலடங்கா வில்லன்கள். மலையாளம், தெலுங்கு கலந்த வசனங்களை இவர்கள் மென்று துப்புவதை என்னவென்று சொல்ல ? ஒரே மிம்மல்னு சம்பேஸ்தானுரா…
ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி தனது பணியில் குறை வைக்கவில்லை. ஆனால் எடிட்டர் ஆண்டனி ஷார்ப்பாக கட் பண்ணுகிறேன் என்கிற பெயரில் கதை புரிய விடாமல் பல இடங்களில் காயப்படுத்தியிருகிறார். போலவே சாம். சி எஸ்சும் பின்னணி இசை என்கிற பெயரில் காதை பஞ்சர் ஆக்குகிறார்.
‘மான் கராத்தே’, ‘கெத்து’ ஆகிய படங்களை இயக்கியிருந்த கிரிஷ் திருக்குமரனுக்கு இது மூன்றாவது படம். இன்னொரு மூன்று நான்கு படங்களுக்குள் சுவாரசியமாக படங்களை இயக்குவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வார் என்பதற்கான அறிகுறிகள் இப்படத்தில் சிற்சில இடங்களில் தென்படுகின்றன.
ரெட்ட தல… சுவாரசியம் பத்தல.