விமர்சனம்

சர்தார் 2 – விமர்சனம்

மிஸ்டர் முள்

சமீபத்தில் வெளியான ‘டாக்ஸிக்’ படத்தைக் கண்டு ரசித்து தூக்கம் தொலைத்தவர்களுக்கு ‘இந்தா பிடி…அதைவிட ஒரு ஃபெண்டாக்ஸிக்’ படம் ‘என்று இயக்குநர் பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணி கொடுத்திருக்கும் படம் தான் இந்த ‘சர்தார் 2’.

படத்துக்கு ‘சர்வநாசம் 2’ என்று தலைப்பு வைத்திருந்தால் இன்னும் பல வழிகளில் பொருத்தமாக இருந்திருக்கும். காரணம் இந்தியாவை சர்வநாசம் செய்யத்துடிக்கும் வில்லனின் நோக்கத்தை ஹீரோ சர்தாரும் அவரது தாடி டாடி மூத்த சர்தாரும் எப்படி முறியடித்தார்கள், படம் பார்க்க வந்தவர்களை உறியடித்தார்கள் என்பதுதான் கதை.

நிகழ்காலத்தில் துவங்கும் கதை, 1981க்குப் பின்னோக்கிப் பயணித்து, பிறகு மறுபடியும் நிகழ்காலத்துக்கு வந்து இந்தியாவின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று நம்மையெல்லாம் பயமுறுத்தி ஒரு வழியாய் மூன்று மணி நேரத்துக்குப் பின் மூச்சு அடங்குகிறது. தியேட்டருக்குள் அமர்ந்த சில நிமிடங்களிலேயே போன மூச்சு அப்போதுதான் நமக்கு திரும்ப வருகிறது.

இதற்கு மேல் கதையைப் பற்றி எழுதி படிக்கிற வாசகர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதால் மேற்படி எழுதியதை வைத்து கதையை குத்துமதிப்பாய் புரிந்துகொள்ளவும்.

அப்பா, மகனாக இரட்டை வேடத்தில் கார்த்தி. சர்தார் முதல் பாகத்தில் வைத்த ஒட்டு தாடியை ஒட்டுமொத்த சமூகமும் எள்ளிநகையாடியதை மீறி அதே ஸ்கூல் நாடக தாடி. நடிப்பும் வழக்கம்போல் படு செயற்கை.

படம் முழுக்க இரு கார்த்திகள் மட்டுமே ஆக்கிரமித்திருப்பதால், ஆஷிகா ரெங்கநாத், ரஜிஷா விஜயன், நாசர், யோகிபாபு, நிழல்கள் ரவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் ஜூனியர் ஆர்டிஸ்டுகளாக வருகிறார்கள். அதிலும் சின்னி ஜெயந்த் எல்லாம் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக வந்துபோவது காலக்கொடுமை.

இவர்களைத்தாண்டி அட்டகாசம் செய்கிறேன் என்கிற பெயரில் கெட்ட ஆட்டம் போடுகிறார் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா. இந்த நடிப்புக் கொடுமையை விட இவரது டைரக்‌ஷனே தேவலாம்.

ஜார்ஜ்.சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு மட்டும் தான் படத்தின் ஒரே ஆறுதல் சமாச்சாரம்.

இசை சாம்.சி. எஸ். சும்மாவே என் மியூசிக் சுமாராத்தான் இருக்கும். படமே சுமாரா இருந்தா நான் என்னதான் பண்ணுறது என்று ஃபன் பண்ணி வைத்திருக்கிறார்.

இயக்கம் பி.எஸ். மித்ரன். படத்தில் காட்டப்படுகிற பயோ வெப்பனை விட ஆபத்தானவரோ இவர் எனத் தோன்றிவிட்டது!

சர்தார்-2... ஜாக்கிரதை!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram