சக்தித் திருமகன் 
விமர்சனம்

சக்தித் திருமகன்: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

வழக்கமான தமிழ் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு ‘அருவி’, ’வாழ்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அருண் பிரபுவின் அடுத்த படம்தான் இந்த ’சக்தித் திருமகன்.’

விஜய் ஆண்டனி நடிப்பில், சுவாரஸ்யமான அரசியல் த்ரில்லர் படமாக வெளிவந்துள்ள சக்தித் திருமகனில், விவாதிப்பதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. எதிர்பார்ப்புகளை தாண்டி நம்மை யோசிக்கவும் வைக்கிறது..!

1989-இல் மயிலாடுதுறையில் கதை தொடங்குகிறது. மடத்தில் வேலைப் பார்க்கும் பழங்குடிப் பெண் கொலை செய்யப்பட, போலீசார் விசாரணையை தொடங்குகின்றனர். அப்போது தொழிலதிபரின் அழுத்தம் வருகிறது. அதனால், அந்தப் பெண்ணின் குழந்தை குப்பையில் வீசப்பட, வழக்கு திசைமாறுகிறது. அதன்பிறகு எண்ட்ரி ஆகும் ஹீரோவுக்கும் குப்பையில் வீசப்பட்ட குழந்தைக்கும் என்ன தொடர்பு? பழங்குடி பெண்ணின் கொலையில் தலையிட்ட அந்த தொழிலதிபர் யார்?என்பதற்கு விடை சொல்கிறது படத்தின் மீதிக்கதை.

சமகால அரசியல் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் தமிழில் மிக சொற்பம் என்றாலும் அவை ஊழல் மட்டுமே ஒரே பிரச்னை என்கின்றன. ஆனால், இதிலிருந்து மாறுபட்ட திரைப்படமாக சக்தித் திருமகன் உள்ளது.

சமஸ்கிருத மந்திரத்தை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அரசியல் ஆலோசகரான அபயங்கர் சீனிவாசனையும் (காதல் ஓவியம் கண்ணன்), பழங்குடி சமூக இளைஞரான கிட்டுவையும் (விஜய் ஆண்டனி) எதிரும் புதிருமாக நிறுத்தி, இன்றைய சீரழிந்த அரசியலுக்கான காரணத்தை கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு.

படத்தின் முதல் பாதி, ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பையும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்கும் விஜய் ஆண்டனி அரசு ஊழியர்கள் பணியிடை மாற்றம், ரியல் எஸ்டேட், அரசியல்வாதிகளுக்கான அந்தரங்கப் பணிகள் போன்றவற்றை எப்படி கச்சிதமாக செய்கிறார் என்பதை விறுவிறுப்பாகப் பேசுகிறது.

இரண்டாம் பாதி, இன்றைய சமகால அரசியலின் உண்மை முகம் என்ன என்பதையும், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதையும் பேசுகிறது.

மக்களுக்கு தேவையான இந்த கதையைத் தேர்ந்தெடுத்ததிலேயே விஜய் ஆண்டனி வெற்றி பெற்று விட்டார். பெரிய வேலை தேவைப்படாத மாஸ்டர் மைண்ட் கதாநாயகனாக வந்து, ஆங்காங்கே ஆக்‌ஷனில் கலக்கி இருக்கிறார் அவர்.

அரசியல் நரித்தனம், திமிரான உடல்மொழி, ஆங்கில உச்சரிப்பு, சமஸ்கிருத மந்திரம் என அபயங்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வில்லனாக மின்னுகிறார் காதல் ஓவியம் கண்ணன்.

பெரியார் தொண்டராக வரும் வாகை சந்திரசேகர் கதாபாத்திரம் நிச்சயம் கவனம் ஈர்க்கும். விஜய் ஆண்டனியின் வலது கையாக செல் முருகன், என்.ஐ.ஏ. அதிகாரியாக கிரண் குமார், மத்திய அமைச்சராக ஷோபா விஷ்வநாத், அதிகம் பேசாத கதாநாயகியாக த்ருப்தி ரவிந்த்ரா ஆகியோர் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

சிறு வயது விஜய் ஆண்டனி – வாகை சந்திரசேகர் இடையேயான காட்சிகளைக் அழகாக கொண்டு வந்ததன் மூலம் மனதில் பதிகிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர். காலிஸ்ட்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்புக்கு ரேமண்ட் க்ராஸ்டா,தின்ஸா கூட்டணியின் படத்தொகுப்பு பலம்.

நடிப்போடு இசையிலும் கவனம் ஈர்க்கின்றார் விஜய் ஆண்டனி. கொஞ்சம் நீளமான படத்துக்கு சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது பின்னணி இசை. பாடல்கள் கதைக்கு வலுசேர்ப்பதாக உள்ளன.

சர்வ பலமும் பெற்ற தேசிய புலனாய்வு அதிகாரிகள் விஜய் ஆண்டனியை பிடிக்க தடுமாறுவது, எந்த பின்புலமும் இல்லாமல் அதிகாரங்களுக்கு எதிரான காரியங்களை நாயகன் கச்சிதமாக முடிப்பது, அளவுக்கு அதிகமான தகவல்கள் போன்றவற்றை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

கோடிக்கணக்கான பணம், பிட் காயின், என்.எப்.டி. போன்ற விவகாரங்கள் ஓவர் டோசாக உள்ளன.

”பலவீனமான ஆடு பலியாவதில் தப்பில்லை’ என அபயங்கர் பேசுவதும்,”நாம பகை வெச்சா சண்டை செய்வோம்… அவன் பகை வெச்சா சதி செய்வான்” என வாகை சந்திரசேகர் பேசும் வசனமும், ”ரோட்ல நிக்குறவனுக்குத்தான்டா டெவலப்மெண்ட்னா என்னனு தெரியும்” என்று விஜய் ஆண்டனி பேசுவதும் கனகச்சிதம்.

பரபரப்பாக செல்லும் இந்த ‘சக்தித் திருமகன்’ உண்மையில் ’கலகக்கார திருமகனாக’ கவனம் ஈர்க்கிறார்!