மிர்ச்சி சிவா - சூது கவ்வும் 2 
விமர்சனம்

சூது கவ்வும் 2: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ’சூது கவ்வும்’ சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம். அந்த படத்தில் நடித்த அனைவருமே இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக உள்ளனர். முதல் பாகத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக மிர்ச்சி சிவா நடிப்பில் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது சூது கவ்வும் - 2.

2013ஆம் ஆண்டு ஆள்கடத்தல் செய்த தாஸ் (விஜய் சேதுபதி) கேங்கிற்கு முன்னோடியாக இருந்தது குருவின் (சிவா) கேங். சட்டச் சிக்கலால் பணத்தைக் கொள்ளையடித்து சிறை செல்கிறார் குரு. நிகழ்காலத்தில் அவர் சிறையிலிருந்து வெளியே வர, மீண்டும் தன் கேங்குடன் ஆள்கடத்தல் செய்யத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் நிதியமைச்சராக இருக்கும் அருமை பிரகாசத்தை (கருணாகரன்) கடத்த நினைக்கிறார் குரு. அதற்கேற்றவாறு அருமை பிரகாசம் ஒரு பெரிய அரசியல் சிக்கலில் மாட்டிக்கொள்ள, அவரே தானாக வந்து குருவின் வலையில் விழுகிறார். அதன்பிறகு நடக்கும் கியா மியாவே சூது கவ்வும் - 2.

டார்க் ஹ்யூமர், திரைக்கதை, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்திலும் வித்தியாசம் காட்டிய படம் சூது கவ்வும். இது அனைத்தும் இரண்டாம் பாகத்தில் வந்திருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் முந்தைய பாகத்தின் ஜெராக்ஸ் போல் இருந்தாலும், அதிலிருந்த சுவாரஸ்யம் இதில் மிஸ்ஸிங். சுமாரான திரைக்கதையும் பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தலாம்.

டார்க் ஹ்யூமர் என்று நினைத்து வைக்கப்பட்ட வசனங்கள் ‘யப்பா ஆள விடுங்கடா...’ என கதற வைக்கிறது. கதைக்கும் அவற்றால் எந்த பலனும் இல்லை. படத்தில் உருப்படியான விஷயம் என்றால் அது கருணாகரன் கதாபாத்திரம் மட்டுமே. அவர் வரும் காட்சிகள் மட்டுமே ஓரளவு ரசிக்கும்படி உள்ளன. மற்றபடி விஜய் சேதுபதிக்கும் சிவாவுக்குமான தொடர்பு, நாயகனின் கற்பனை காதலி போன்ற விஷயங்கள் துருத்திக் கொண்டு இருக்கின்றன. போதை குறைந்தால் தெரியும் பாம்பு, மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாத காதலி, புதிதாகக் காட்டப்படும் மூர்க்கமான வில்லன் என எந்த விஷயங்களும் படத்தின் சுவாரஸ்யத்தை உயர்த்தவில்லை. சமகால அரசியலைப் பகடி செய்யும் காமெடிகள் மட்டுமே கொஞ்சம் ஆறுதல்.

ஹீரோவாக மிர்ச்சி சிவா. வழக்கமாக தனக்கு எது வருமோ அதை மட்டுமே செய்ய முயற்சித்திருக்கிறார். எனினும் அவருடைய வழக்கமான டைமிங் கவுன்ட்டர்கள் கூட இந்த படத்தில் எடுபடவில்லை. எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதா ரவிக்கு எல்லாம் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.

அரசியலை பகடி செய்கிறோம் என்ற பெயரில் முழு படத்தையும் மக்களுக்குக் கொடுக்கப்படும் விலையில்லா பொருள்களை கிண்டல் செய்வதாக எடுத்துள்ளனர். இலவசத் திட்டங்கள் மீது இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏன் இவ்வளவு ஒவ்வாமையோ?

படத்தில் குடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ‘மது அருந்துவது உடல் நலத்துக்கு தீங்கு விளைக்கும்’ என்பது எச்சரிக்கை அறிவிப்பா… சப்டைட்டிலா…? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு படம் முழுக்க திரையில் வந்துகொண்டே இருக்கிறது. பார்த்து முடிக்கையில் நமக்கே போதை ஏறிவிடும் போல...