தலைவன் - தலைவி திரைப்படம் 
விமர்சனம்

தலைவன் தலைவி: திரைவிமர்சனம்

தா.பிரகாஷ்

கணவன் – மனைவி இடையேயான காதல் – மோதலில் குடும்பத்தினர் தலையிட்டால் என்ன நடக்கும் என்பதே இந்த தலைவன் – தலைவி திரைப்படம்!

மதுரை ஒத்தக்கடையில் குடும்பத்தினருடன் சேர்ந்து உணவகம் நடத்திவருகிறார் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவர் மனைவி பேரரசி (நித்யா மேனன்). இவர்கள் இருவருக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளில் இருவீட்டாரும் தலையிட, பிரிவின் எல்லைக்குப் போய் நிற்கிறது கணவன் - மனைவி உறவு. அதன் பிறகு ஆகாச வீரனுக்கு அறிவிக்காமல் அவர் மகளுக்கு மொட்டையடிக்க கோயிலில் கூடுகிறது பேரரசியின் குடும்பம். விஷயம் அறிந்து களமிறங்குகிறது ஆகாச வீரன் குடும்பம். அவர்கள் ஏன் பிரிந்தார்கள், என்ன சண்டை, இருவீட்டாரின் பஞ்சாயத்து எங்கே போய் முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கம் போல் இயக்குநர் பாண்டிராஜ் குடும்ப பாங்கான கதையை கலகலப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் என்றே சொல்லலாம். பஞ்சமில்லாத நகைச்சுவை காட்சிகளும், பார்க்கும் போது பசி எடுக்க வைக்கும் நாயகனின் ஹோட்டல் கடை சித்தரிப்புகளும் ‘ஆஹா’ போட வைக்கின்றன.

ஆகாச வீரனாக நடித்துள்ள விஜய்சேதுபதி, தன் மனையிடம் வீராப்பு காட்டுவதாகட்டும், அவர் கோபித்துக் கொண்டு போகும்போது கெஞ்சுவதாகட்டும், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நிற்பதாகட்டும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

“இந்த பரோட்டா டேஸ்டுக்கு டபுள் எம்.ஏ. படிச்சா என்ன… ஃபெயில் ஆனா என்ன?” என விஜய் சேதுபதியிடம் விழுவதில் தொடங்கி, கோபத்தில் கட்டைப் பையை எடுத்துக்கொண்டு அடிக்கடி கிளம்பிசெல்வது வரை நடிப்பில் பேரரசியாக பின்னுகிறார் நித்யா மேனன். திருச்சிற்றம்பலம் படத்தின் சாயல் அவரிடம் தென்பட்டாலும் அது அழகாகவே உள்ளது.

திருடனாக வரும் யோகி பாபு குறைந்த காட்சிகளில் வந்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்துள்ளார் தீபா. தன்னுடைய மருமகள் குறித்து அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் சரவெடி.

இவர்கள் தவிர சரவணன், செம்பன் வினோத், காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி, ரோஷினி ஹரிப்ரியன், சென்றாயன் எனப் படம் முழுக்க அத்தனை கதாபாத்திரங்கள். அனைவரும் தங்களுக்குக் கொடுத்த பாத்திரத்தைச் செய்திருக்கிறார்கள்.

கருப்பசாமி கோயில், ஹோட்டல், கல்குவாரி எனக் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிக்கும் கதையில், அனைத்து ஏரியாவிலும் தனது ஒளிப்பதிவைச் செவ்வனே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார். கல்யாணம், சண்டை, குழந்தை என ஒவ்வொரு தளங்களில் நடக்கும் பிளாஷ்பேக் கதை சொல்லலுக்குத் தன்னால் இயன்ற ஒத்துழைப்பைக் கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்.

‘ஆகாச வீரன்', ‘பொட்டல மிட்டாய் பாடல்களில் சந்தோஷ் நாராயணின் முத்திரை தெரிகிறது. பின்னணி இசையில் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்.

”லவ் பண்றதே சண்டை போடுற மாதிரி பண்ணுவாங்க... சண்டை போடுறத லவ் பண்ற மாதிரி பண்ணுவங்க” - படத்தின் சாரத்துக்கு ஏற்ப பாண்டியராஜ் வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் வரும் குழந்தைகள் கூட தொண்டை கிழியும் அளவுக்குத்தான் பேசுகின்றனர். அப்படியெனில் மற்றவர்கள் பேசுவதை யோசித்துப்பாருங்கள்…!

படம் முழுக்க வீம்படியாக மாமியார் வீட்டுடன் சண்டியர்தன் செய்துக் கொண்டிருக்கும் வி.சே. இறுதியில் ‘கணவன் – மனைவி உறவுனா என்னனு தெரியுமானு’ பாடம் எடுப்பது ‘ஓவர் யுவர் ஆனர்!’

இறுதிவரை வி.சே. - அவர் மச்சான் ஆர்.கே. சுரேஷ் இடையேயான மோதல் போக்கு ஏன் என்ற சொல்லவில்லை. ஒருவேளை இரண்டாம் பாதி வருமோ... பார்ப்போம்!

விவாகரத்து நார்மலைஸ் ஆகிக் கொண்டிருக்கும் காலத்தில் தலைவன் – தலைவி மண் மணத்தோடு வந்திருக்கும் குடும்பப்படம்!