‘மாணிக்கம்’ என்ற நபர் எப்படி ‘திரு. மாணிக்கம்’ ஆகிறார் என்பதுதான் படத்தின் மையக்கதை.
தமிழக எல்லையில் அமைந்துள்ள குமுளியில் லாட்டரிக் கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி (மாணிக்கம்). மனைவி அனன்யா, இரு பெண் குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் இளைய மகளுக்கு பேச்சு சரியாக வராது. அதை சரி செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவை. இந்தச் சூழலில், இவரை விட அதிக பணத்தேவை கொண்ட பாரதிராஜா லாட்டரிச் சீட்டு வாங்க வருகிறார். அவர் சமுத்திரக்கனியிடம் வாங்கிய சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது. ஆனால் பாரதிராஜா வாங்கிய சீட்டு சமுத்திரக்கனியிடம் இருக்கிறது. அது ஏன்? அடுத்தடுத்து நடந்தது என்ன? என்பதே படத்தின் கதை.
சமுத்திரக்கனியின் மகள் குரலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்படுகிறது. ‘அடடா…’ ஓப்பனிங் நல்ல இருக்கே என நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்தடுத்து வரும் காட்சிகள் தேய்வழக்காக உள்ளன. இரண்டாம் பாதி சமுத்திரக்கனியை துரத்திப் பிடிப்பதிலே மையம் கொள்கிறது.
சமுத்திரக்கனியின் ப்ளாஷ் பேக், வரதட்சணைக் கொடுக்க முடியாத பாரதிராஜாவின் கையறு நிலை, இக்கட்டான சூழலில் சமுத்திரக்கனி மகளுக்கு வாய் பேச வருவது போன்ற ஒரு சில காட்சிகள் மனதை பாரமாக்குகிறது.
ஒருவன் நேர்மையாக இருப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை சொல்லவந்த இயக்குநர், அதை ரசிக்கும்படி சொல்லி இருக்கலாம். கதாபாத்திரங்களுக்கான எழுத்திலும் அவ்வளவு பலவீனம். அனன்யா சமுத்திரக்கனிக்குத் தெரியாமல் ஏன் மூன்று லட்சம் கடன் வாங்கினார்? அதுவும் காவலரிடம் வாங்க என்ன காரணம்? வாங்கிய பணத்தை வைத்து தம்பியை ஏன் உடனே வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை? என பல கேள்விகள் எழுகின்றன.
லாட்டரி சீட்டு பற்றி ஏற்கெனவே பம்பர் படம் வந்துள்ள நிலையில், அதேயே திரு.மாணிக்கமாக எடுத்து வைத்துள்ளார் இயக்குநர் நந்தா பெரியசாமி.
கதையின் நாயகன் நேர்மையின் உச்சமாக வாழ்பவன் என்பதால், சமுத்திரக்கனியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போல. அவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். பாரதிராஜா பல இடங்களில் ஓவர் டோஸ் ஏற்றுகிறார். அனன்யா கேரக்டர் அழுத்தமாக எழுதப்படவில்லை. நாசர், இளவரசு, கருணாகரன், உட்பட பலர் தங்கள் வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். தம்பி ராமையா தனக்கு வரும் கதாபாத்திரங்களைக் கொஞ்சம் பார்த்து தேர்வு செய்யலாம்.
குமுளிதான் கதைக்களம் என்பதால் சுகுமாரின் கேமரா கோணங்கள் ரசிக்க வைக்கின்றன. காட்சிகள் அவ்வளவு ரம்மியம். இதற்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை. பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன.
‘மனுசங்களை ஒதுக்குறோம்… இன்பத்தை கொண்டாடுறோம்’, நேர்மையை தொலைச்சிட்டோம்’ – இப்படி கதைக்கு ஏற்ற வசனங்கள் படத்துக்கு ப்ளஸ்.
நேர்மையா இருந்தால் ஒருவனுக்கு எல்லாம் கிடைக்கும் என்பதைப் பேச வந்த திரு. மாணிக்கம் இன்னும் மின்னியிருக்கலாம்!