தக் லைஃப் திரைப்படம் 
விமர்சனம்

தக் லைஃப்: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி, இதுவரை இல்லாத அளவுக்கு விளம்பரம், முத்த மழை பாடல், மொழி சர்ச்சை என தொடர் கவனம் பெற்ற ‘தக் லைஃப்’, கர்நாடகா தவிர்த்து 2200க்கும் அதிகமான தியேட்டரில் வெளியாகியுள்ளது. படம் எப்படி வந்துள்ளது என்று பார்ப்போம்.

டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), காவல் துறைக்கும் இடையே நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் தந்தையை இழக்கிறான் சிறுவன் அமரன் (சிம்பு). அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனைத் தத்தெடுத்து வளர்க்கும் கமல்ஹாசன், ஒரு கொலை குற்றத்துக்காக ஜெயிலுக்கு போகிறார். இதனால், அவரின் தொழில் சாம்ராஜ்ஜியம் சிம்புவின் கைக்கு வருகிறது. இதற்கிடையே கமல் விடுதலையாக, அவரின் விசுவாசிகளே, அவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். இந்த சதித் திட்டத்தில் இருந்து கமல் தப்பித்தாரா? இல்ல அனைவரையும் எப்படிப் பழிவாங்கினார் என்பதே படத்தின் கதை.

எதிர்பாராத ஒரு கொலையில் ஆரம்பித்து, ‘நீ பெரியவனா, நான் பெரியவனா?' என்ற ஈகோவால் துரோகம், பழி தீர்த்தல், காதல் ( நல்ல காதல்னும் சொல்ல முடியாது, கள்ளக்காதல்னும் சொல்ல முடியாது) என ஒரு கேங்ஸ்டர் படமாக வந்துள்ளது தக் லைஃப்.

இருபெரும் ஆளுமைகளான கமல்ஹாசனும் - மணிரத்னமும் சேர்ந்து எழுதியுள்ள திரைக்கதை பிரமிப்புக்குள் ஆழ்த்தவில்லை என்றாலும் ஏமாற்றவில்லை. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், படம் முழுவதும் பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் ஒருவித சோகத்தை ஏற்படுத்துகிறது. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சரியம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது.

கமல் – த்ரிஷா இடையேயான (கள்ள?!)காதல் காட்சிகள் ஒருவித கிளர்ச்சியையும், கமல் – அபிராமி இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கவும் வைக்கின்றன. வழக்கம்போல் மணிரத்னம் காதல் காட்சிகளில் கலக்கிவிட்டார் என்றே சொல்லலாம். க்ளைமாக்ஸில் சிம்புவுக்கும் - ஐஸ்வர்யா லட்சுமிக்குமான காட்சி, மனதை பிசைகிறது.

மணிரத்னம் எல்லா காட்சிகளையும் வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். ஒரு காட்சியில், டெல்லிக் குறித்து கமல் சொல்கையில், “முகலாயர் காலத்திலிருந்து அண்ணன் தம்பியை சாய்ப்பதும், பிள்ளை தந்தையை சாய்ப்பதும் இந்த மண்ணோட சாபம்” என்பார்.

கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் இருக்கும் பகை ஆகியவற்றை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டுப் போகிறார்கள். அதனால், கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை

கமல் குண்டடி பட்டும் சாகாமல் இருப்பது, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து வருவது போன்ற காட்சிகளை கொஞ்சம் நம்பும்படி சொல்லியிருக்கலாம். இரண்டாம் பாதியில் தற்காப்பு உடையோடு சுற்றும் கமல், இந்தியன் தாத்தாவை நினைவுபடுத்துகிறார். ஓ...மை காட்!

கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் என திரைமுழுக்க பெரிய பெரிய நடிகர்கள்.

‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதைத் தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ கடைசியில் வருகிறது.

ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம். தொண்ணூறுகளின் நடுப்பகுதியை கறுப்பு வெள்ளையிலும், டெல்லியின் செங்கல் நிறத்தையும், சண்டை காட்சிகளையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். திருச்செந்தூரில் கமல் –அபிராமி இடையேயான காட்சி, கமல் – சிம்பு இடையேயான சண்டை காட்சிகளை ஸ்ரீகர் பிரசாத் இன்னும் கச்சிதமாக வெட்டியிருக்கலாம்.படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அட்டகாசம்.

தொழில்நுட்ப ரீதியாக பெரிய படமாக தக் லைஃப் வந்திருந்தாலும், கதை மற்றும் திரைக்கதையில் ஒரு சிறிய படமாகவே மனதில் பதிகிறது.

தக் லைஃப்பில் தக் மட்டும் மிஸ்ஸிங் ஆண்டவரே!