வயதுக்கு வந்தவர்களுக்கான ஒரு தேவதைக்கதை என்று ஓவர் பில்ட் அப் பண்ணப்பட்ட பான் இந்தியப் படம் டாக்ஸிக்.
கேஜிஎஃப் மாதிரி எந்த லாஜிக்கும் இல்லாத ஒரு படம் மேஜிக்கலாக ஓடியவுடன் இனி நாம் எப்படி நடித்தாலும் மக்கள் பார்ப்பார்கள் என்கிற கண்மூடித்தனமான முடிவுக்கு வந்திருக்கிறார் யஷ் என்பதற்கு சாட்சி இந்த டாக்ஸிக் என்கிற கரப்பான் பூச்சி.
சில படங்களுக்கு படத்தலைப்பிலேயே மறைமுக எச்சரிக்கை இருக்கும். நமக்கு நேரம் சரியில்லாதபோது மூளை சொல்வதை சில சமயங்களில் இதயம் கேட்பது கிடையாது அல்லவா ?
அப்படிப்பட்ட ஒரு துரதிர்ஷ்ட சம்பவம் தான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. அடி ரொம்ப பலமா இருக்கும் போலயே என்று மைண்ட்வாய்சில் நினைப்பவர்களுக்காக கதையையும் கொஞ்சம் சொல்லிவிடலாம்.
1947ல் கோவாவில் போதை சாம்ராஜ்யத்தில் நடக்கிற கதையில், யஷ்ஷும் நயனும் அக்கா தம்பிகள். இளம் வயதிலேயே தம்பிக்காக தனது கற்பைக்கூட விலைபேசுகிற நயன், தம்பி வாட்டசாட்டமான வாலிபனானவுடன் அவர் மொத்த உலகத்தையும் ஆளவேண்டும் என்று கூடவே அலைகிறார். எப்போதும் குடி, பெண்களின் மடி என்று திரிகிற யஷ்ஷுக்கு போதை உலக தாதா ஒருவனின் மகளுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது.
இந்த மூன்று வரி கதையைப் புரிந்துகொள்வதற்குள் சுமார் 500 பேரைக் கொன்று தீர்க்கிறார் யஷ். அப்புறம் இடைவேளைக்குப் பின் நடக்கிற புரியாத குழப்பங்களுக்குள் இன்னொரு ஆயிரம் பேரைக் கொல்கிறார் யஷ்.
அடுத்த டார்கெட் நாம் தான் என்று புரிகிறபோது தியேட்டரை விட்டு ஓட்டம் எடுக்கவேண்டிய கட்டாயம்.
ஒளிப்பதிவு ராஜீவ் ரவியும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரும் இயக்குநரின் கொலைபாதகச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்த பாவத்தைச் செய்திருக்கிறார்கள்.
கெட்ட வார்த்தைகள், கெட்ட காட்சிகள், மனித உடல் உறுப்புகளை வெட்டி எரியும் படுகொடூரமான வயலன்ஸ் காட்சிகள் படம் முழுக்க கோரதாண்டவம் ஆடுகின்றன.
மூன்றே கால் மணி நேரம் ஓடுகிற இப்படத்தைப் பார்க்கும்போது, அந்த மூன்றே கால் மணி நேரமும் சென்சார் சார்கள் குறட்டை விட்டுத் தூங்கியிருந்தால் ஒழிய இப்படி ஒரு படத்தைப் பார்க்கும் துரதிர்ஷ்டம் ஜனங்களுக்கு வாய்த்திருக்காது.
மூத்தோன் என்கிற படுசுமாரான மலையாளப்படத்தை இயக்கிய கீது மோகன் தாஸின் இந்த படு டுபாக்கூர் கதையை தயாரிப்பாளர் வெங்கட நாராயணா, நாயகன் யஷ், உள்ளிட்ட தயாரிப்பு நிர்வாகிகள் எப்படி ஓ.கே.செய்தார்கள் என்பதை யோசித்தால் நமக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது.
அதையும் மீறி, நம்ம நயன்தாரா இருக்காக, கியாரா அத்வானி இருக்காக, ஹுமா குரேசி இருக்காக, அதுக்கும் மேல ருக்மணி வசந்த் இருக்காக என்று ஆளுக்குக் கொஞ்சம் சில்லரையை சிதறவிட்டு வரலாம் என்று போனால் ஸ்ட்ரெயிட்டாக நம்மை கல்லறைக்கு அனுப்பும் வேலையை மிக்க்கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குநர் கீது மோகன் தாஸ்.
டாக்ஸிக் தண்டாக்சிக்.