விடாமுயற்சி திரைப்படம் 
விமர்சனம்

விடாமுயற்சி: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

பொங்கல் ரேஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ பலநாட்கள் தாமதமாகி வெளியாகியிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கி, வெளியீடு வரை பலசோதனைகளைத் தாண்டி வந்திருக்கும் இப்படம் எப்படி உள்ளது என பார்ப்போம்.

பார்த்ததும் பிடித்துப்போய், காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் அஜித் குமாரும் (அர்ஜுன்), த்ரிஷாவும் (கயல்). பன்னிரண்டு வருட திருமண வாழ்வுக்குப் பிறகு, திடீரென மனக்கசப்புக்குள்ளாகும் த்ரிஷா அஜித்தை பிரிய நினைக்கிறார். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற, கடைசியாக ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார் அஜித். இந்த பயணத்தில், த்ரிஷா திடீரென மாயமாக, இவரைக் கண்டுபிடிக்க அஜித் எடுக்கும் விடாமுயற்சியே படத்தின் மீதிக்கதை.

ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகம். சீண்டினாலும் பணிந்து போகும் குணம். துரோகம் செய்த மனைவியையும் விட்டுக்கொடுக்காத ஜென்டில்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித்குமார். ஒன் மேன் ஆர்மியாக கதையைத் தாங்கி இருக்கிறார். மனைவியைத் தொலைத்து விட்டு தேடும் காட்சிகளில், அவரின் முகத்தில் உள்ள பதற்றம் நம்மிடம் தொற்றிக் கொள்கிறது.

த்ரிஷாவுக்கு படத்தில் வேலையே இல்லை. அர்ஜுன், ரெஜினா, ஆரவ் நன்றாக நடித்திருந்தாலும், அவர்களின் கதாபாத்திர அமைப்பு பயங்கர வீக். ரெஜினாவுக்கான பின்கதை எல்லாம் தேவையில்லாத ஆணி.

காதல் காட்சி, குத்துப்பாட்டு என படம் தொடங்கினாலும், அஜித்தை த்ரிஷா டைவர்ஸ் பண்ணப்போகிறார் என்று தெரிந்ததுமே, தியேட்டர் சைலண்ட்டாகி விடுகிறது. இரண்டாம் பாதியில் நிறைய ஆக்‌ஷன், த்ரில்லர் இருந்தாலும், திரைக்கதையில் அதற்குரிய வேகமும் திருப்பங்களும் இல்லை.

திரைக்கதையிலும் கதாபாத்திரங்களுக்கான எழுத்திலும் இயக்குநர் மகிழ் திருமேனி, இன்னும் பலமடங்கு மெனக்கெட்டிருக்கலாம்.

அனிருத்தின் இசை வழக்கம் போல் டமால் டுமீல்தான். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டலாக உள்ளன. பரபரப்பான, திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் படத்தின் பலம்.

”நாம சின்ன புள்ளயா இருந்தப்ப… வாட்ச் கெட்டுப்போச்சுனா… அதை ரிப்பேர் பண்ணுவோம்… தூக்கிப்போட மாட்டோம்” என்ற ஒரு வசனம்தான் முழு படம்.

அஜித்துக்கு நன்றாகக் கார் ஓட்ட தெரியும் என்பதற்காகவே பல சண்டைக் காட்சிகள் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அஜித் - திரிஷாவின் பிரிவுக்கான காரணத்தை இன்னும் வலுவாக சொல்லி இருக்கலாம். ஹீரோவை தவிர மற்ற எல்லோரும் ஏதோவொரு விதத்தில் கெட்டவர்கள் என்ற சித்தரிப்பைப் படம் உண்டாக்குகிறது.

முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே எடுத்துள்ளார்கள். ஓசியிலேயே அந்நாட்டின் நிலப்பரப்பின் ஒரு பகுதியை கண்முன் நிறுத்தியதற்கு நன்றி சொல்லலாம்!

விடாமுயற்சி அஜித் படமாகவும் இல்லாமல் மகிழ்திருமேனி படமாகவும் இல்லாமல் நம்மை சோதித்துப் பார்க்கிறது. இப்படி எழுதாமல் இருக்க முயற்சி செய்துதான் பார்த்தோம்... விடாமுயற்சி ஆயிற்றே... விடவே இல்லை!