குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், கணவன் மனைவிக்குள் நடக்கும் விவாகரத்து பிரச்னைகள் பற்றியும் காலங்காலமாக பேசிவரும் பல திரைப்படங்கள் உண்டு. சமீபகாலங்களில் பெண்கள் பார்வையில் கதை சொல்லும் படங்கள் அதிகரித்து வரும் வேளையில் ’ஆண்கள் தரப்பையும் கொஞ்சம் கேளுங்க பாஸ்…’ என வெளியாகி இருக்கிறது ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படம். கடந்த மாதம் அதிகம் வசூலித்த படமும் அதுதான். இதன் இயக்குநர் கலையரசன் தங்கவேலிடம் அந்திமழைக்காகப் பேசினோம்.
“சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் கனவு. முதலில் ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்த்தேன். ஆனால், குடும்ப சூழல் காரணமாகவும் பொருளாதார தேவைக்காகவும் சில காலம் ஐடி துறையில் பணிபுரிந்தேன். பின், குடும்பம் ஓரளவு செட்டில் ஆனதும் யூட்யூப் சானல் ஒன்றில் சேர்ந்தேன். அதில் இயக்கம், எழுத்து என நாலஞ்சு ஷோஸ் என் பொறுப்பில் எடுத்துக்கொண்டேன். என் தரப்பில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 18-21 வீடியோக்கள் மாதம்தோறும் வெளியாகும். இதுமட்டுமல்லாமல், ‘கனா காணும் காலங்கள்’ தொடரிலும் சில எபிசோடுகள் பணியாற்றி இருக்கிறேன். பிறகு விளம்பரத் துறையில் இயக்குநராகப் பணிபுரிந்தேன்.
யூட்யூப் காலத்திலேயே இரண்டு, மூன்று கதைகள் தயார் செய்திருந்தேன். ‘ஆண் பாவம் பொல்லாதது’ என் நண்பர் சிவக்குமாரின் கதை இது. அவரிடம் பேசி அனுமதி பெற்று கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கினோம். முதலில் வெப்சீரிஸாக செய்யலாம் என்றுதான் யோசித்தோம். ஆனால், அது சில காரணங்களால் நடக்கவில்லை. பின்பு 145 பக்கங்கள் கொண்ட கதையாக மாற்றினோம். படத்திற்காக கதை எழுதும்போதே ரியோ- விக்கி கதாபாத்திரங்களில் அவர்கள்தான் நடிக்க வேண்டும் முடிவு செய்துவிட்டோம். இந்தப் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு மறக்க முடியாது. கிட்டத்தட்ட 180 ஸ்கிரீனில் இருந்துதான் ஆரம்பித்தோம். ரிலீஸூக்கு முன்னே படம் பார்த்து பிடித்துபோய் ஹாட்ஸ்டார் வாங்கி விட்டார்கள். ஏஜிஎஸ் நிறுவனத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் படம் பார்த்து பாராட்டினார். இப்படி எங்களுக்கு படம் ரிலீஸூக்கு முன்னே எல்லாம் பாசிட்டிவாக நடந்தது. இருந்தாலும் படம் வெளியாகும் போது மக்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்ற பயமும் எதிர்பார்ப்பும் இருந்தது. இப்போது ரிசல்ட் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.
ஆணாதிக்கக் கருத்துகளே அதிகம் இருந்தது என படம் மீதான பலரின் விமர்சனம் குறித்து கேட்டபோது, “இந்தப் படம் சரியோ தவறோ நிச்சயம் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஆணாதிக்க கருத்துகள் நிறைந்திருக்கிறது என்பதை ஏற்கமாட்டேன். அந்த பெண்ணின் கேரக்டரை நான் சொல்ல வந்தது பார்வையாளர்கள் மத்தியில் சரியாக என்னால் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை என்று நினைக்கிறேன். மற்றபடி அந்தக் கதையில் கணவன், மனைவி இரண்டு பேரிடமும் நிறை, குறைகள் இருக்கதான் செய்கிறது. அதை ஏற்றுக்கொண்டு தவறுகளைப் புரிந்துகொண்டு எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் சொல்லியிருக்கிறேன். படத்தில் ஒரு வசனம் வரும். ‘பெண்ணாக இல்லாத வரைக்கும் ஆணுக்கு அவர்கள் நியாயம் புரியாது’ என்று! அதுதான் உண்மை. படத்தில் தீபாக்கா, சுவிட்சு போட்டா வேலை ஈஸியா நடக்கும்னு சொல்றீங்க. ஆனா, அந்த சுவிட்சு கூட ஒரு பெண் தான் போட வேண்டியிருக்கும்’ என்று சொல்லியிருப்பார். இந்த நிசர்சனத்தைத்தான் படத்தில் பேசியிருக்கிறேன். பெண்கள் என்றால் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தி படத்தில் சொல்லவில்லை. அந்த பெண்ணின் கேரக்டர் என்னவோ அதுதான் கதையில் பிரதிபலித்தது” என்றார்.
”இந்தப் படத்திற்காக நிறைய விவாகரத்து கேஸ் தேடிப் படித்தேன். சம்பந்தப்பட்ட சிலரிடமும் பேசினேன். கணவர் பதிலுக்கு சண்டை போடாமல் அமைதியாக போவதால் வாழ்வில் சலிப்படைந்த பெண் விவாகரத்து கோரினார். பிரபல புட்ஃபால் பிளேயர் ஒருவர் ‘பர்ஃபெக்ட்’ கணவராக இருக்கிறார் என்று அவர் மனைவி விவாகரத்து கோரினார். இதுபோன்ற விசித்திரமான காரணங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தது. இப்படி பல சம்பவங்களையும் கதையில் சேர்த்திருக்கிறோம். மற்றபடி டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறவர்களுக்கு அது அவர்களின் பொருள். அதை விமர்சனம் செய்யவும் கருத்துகளை முன்வைக்கவும் எல்லா உரிமையும் அவர்களுக்கு உண்டு”.
படத்திற்கு வந்த நெகிழ்ச்சியான பாராட்டு, மறக்க முடியாத திட்டு குறித்தும் பகிர்ந்தார், “நீண்ட காலம் கழித்து வன்முறைகள் இல்லாமல் சிரித்து மகிழ்ந்து பார்த்த படம் என 70 வயது பாட்டி ஒருவர் சொன்னார். அதேபோல, தன் கணவர் இறந்து மூன்று வருடங்கள் கழித்து படம் பார்க்க வேண்டும் என மகனிடம் கேட்டு ஒரு அம்மா படத்திற்கு வந்தார். இவர்கள் இருவரும் கொடுத்த பாராட்டு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பாராட்டுகள் போலவே நிறைய திட்டும் வந்தது. குறிப்பாக, நான் முன் பணிபுரிந்த பத்திரிகையில் வந்த விமர்சனம் என் தலையில் குட்டு வைத்தது போல இருந்தது. என்னுடைய ஊரான ஒட்டன்சத்திரத்தில் படத்தை திரையிட்டோம். அம்மா, அப்பா, அண்ணன் என குடும்பம் ஊர் மக்களும் படம் பார்த்து மகிழ்ந்தது என் வாழ்வில் மறக்க முடியாதது” என்றார் நெகிழ்ச்சியாக.
அடுத்த படம் குறித்து அப்டேட் கேட்டோம். “சமீபத்தில் நான் பார்த்த படங்களில் ‘லப்பர் பந்து’ ஸ்கிரிப்ட் எனக்குப் பிடித்தது. இது ஏன் எனக்கு இயக்க வரவில்லை என்று வருந்தினேன். ‘குடும்பஸ்தன்’ படமும் பிடித்திருந்தது. பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, ‘டிராகன்’ படங்களும் விரும்பி பார்த்தேன். இவை தவிர ‘விக்ரம்’, ‘கூலி’, விஜய் சார் படங்களும் வந்தால் நண்பர்களாக சேர்ந்து மாஸாக கொண்டாடுவோம். இவர்கள் படங்களில் அதீத வன்முறை என்கிறார்கள். அதீத வன்முறைகள் ஒரு செட் ஆஃப் ஆடியன்ஸ்க்கான படங்கள் அது. அந்த வகையில், நல்ல படம் கெட்ட படம் என்பது இல்லை. யாருக்கு எது பிடித்திருக்கிறது என்பதுதான் விஷயம். இப்போது அடுத்த கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.