கடந்த இரு வாரங்களாய் சமூக வலைதளங்களில் சரித்திரம் காணாத சலசலப்பு.
‘யாரோ இளையாராஜான்னு புது மியூசிக் டைரக்டராம்பா. பின்னிப்பெடலெடுத்திருக்கார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு பேசிக்கிறாங்க’ என்று ‘மொழி’ படத்து எம்.எஸ். பாஸ்கர்களாய் மாறி விதவிதமான உருட்டல்கள்,உருகல்கள், அவற்றுக்கு மத்தியில் சில கருகல்கள்.
சம்பவத்துக்குக் காரணம் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், ராஜா இசையில் அடுத்தடுத்து ரிலீஸாகியிருக்கும் இரு பாடல்கள். அதில் முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ எட்டு மில்லியன் பார்வையாளர்களையும் அடுத்த பாடலான ‘முத்து மணி’ வெளியான 24 மணி நேரத்திலேயே 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளையும் கடந்திருப்பது உள்ளபடியே பலரை மூர்ச்சையடைய வைத்திருக்கிறது.
இந்த இரு பாடல்களையுமே கன்டென்ட் ஆக்கி பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் உருவாக்கி பகிரப்படும் நிலையில் சில வெள்ளைக்கார துரைகளும் ராஜா குறித்து தங்கள் மழலைத் தமிழில் யூடியூப்களில் சிலாகிப்பதைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
கமல் தொடங்கி தியாகராஜன் குமாரராஜா, வெற்றிமாறன் என்று பலரும் ‘இன்றைய தலைமுறை இயக்குநர்கள் ஒரே ஒரு படமாவது ராஜாவுடன் பணியாற்றிப் பாருங்கள் ‘ என்று சிபாரிசு செய்து வந்த நிலையில் இன்று பல முன்னணி இயக்குநர்கள் ராஜாவுடன் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
அப்பட்டியலில் தனது 11 வது படத்துக்காக ராஜாவுடன் கைகோர்த்துக்கொண்டவர் கார்த்திக் சுப்பாராஜ். சுப்பாராஜாவுக்கு 11 வது படமான இந்த ‘டோரதி’ இளையராஜாவுக்கு 1500 ஐ நெருங்கும் படம்.
யோசித்துப் பார்த்தால் ’வாட் எ ஹிஸ்டாரிக்கல் மியூசிக்கல் மிராக்கிள் ’ இது ? 76ல் 50 ஆண்டுகளுக்கு முன்பு இசைக்கத் துவங்கியவர் இன்று தனது 84 வது வயதில் இளைய சமூகத்துடன் அதே உத்வேகத்துடன் இயங்கி வருவதை, அதுவும் முழுமுனைப்புடன் இயங்கிவருவதை என்ன மாதிரியான வார்த்தைகளில் விவரிக்க முடியும் ?
சரித்திரத்தில் இளையராஜா பற்றிய குறிப்பு இப்படித்தான் இருக்க முடியும். இந்த 50 ஆண்டுகளில் இளையராஜாவுக்கு எதிர் திசையில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் இளையராஜா என்கிற பெயருக்குப் பக்கத்தில் ஒருவருமே நெருங்க முடிந்ததில்லை.
காரணம் இசைக்கு அவர் கொடுக்கும் மரியாதை. தனது 50 வது ஆண்டு திரைப்பயண கொண்டாட்டத்தை ஒட்டி உலகம் முழுக்க இசைக்கச்சேரிகள் நடத்தி வரும் ராஜா, எந்தக் கச்சேரியிலும் ஒரு நிமிடம் கூட அமர்வதில்லை என்பதை இன்று அவருடன் பயணிக்கும் சக இசைக்கலைஞர்களே வியப்பதைப் பார்க்க முடிகிறது.
முன்னர் கொஞ்சம் தயங்கி, பின்னர் ஒரு கட்டத்தில் அவருடன் பணியாற்றத் தொடங்கும் ஒவ்வொரு இயக்குநருமே அது குறித்துப் பதிவிடும்போது அதில் கண்ணீர் துளிர்க்காமல் இருந்ததேயில்லை.
இதோ லேட்டஸ்டாய் பணிபுரிந்த கார்த்திக் சுப்பாராஜின் இன்றைய எக்ஸ் தளப் பதிவு ஒரு சாம்பிள்…
…மேஸ்ட்ரோ ராஜா சாருடன் #டோரதி’ படத்திற்காக எனது முதல் நாள் வேலை, அவர் தனது மந்திரக் கரங்களால் அந்த மாயாஜால ஹார்மோனியத்தில் #முத்துமணி பாடலுக்கு இசையமைத்தபோது தொடங்கியது. நான் ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டிருந்தேன், அந்தத் தருணத்தைக் காண்பது ஒரு கனவு போல இருந்தது. ராஜா சார் 'வனக்கிளியே' பாடலைப் பாடத்தொடங்கியபோது...... அந்தத் தருணத்தில் என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.... நான் கண்ணீர் சிந்தினேன், மிதந்தேன், வேறொரு பிரபஞ்சத்திற்குள் சென்றேன், குணமடைந்தேன்... அனைத்தும் ஒரே நேரத்தில்.... இப்போது உங்கள் அனைவரிடமிருந்தும் அந்தப் பாடலுக்கு இதே போன்ற எதிர்வினைகளைக் காணும்போது நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போகிறேன்..... ஆம்... ராஜா சார் எங்கள் இசைக் கடவுள், அவருடைய குரல் கடவுள் நம்மிடம் பேசும் ஒரு வழி என்பதைத் தவிர வேறில்லை...
என்று நெகிழ்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ் குறிப்பிடும் அந்த எதிர்வினைகள் குறித்து கொஞ்சம் மகிழ்ச்சிதான் என்றாலும் குறுக்கே மறுக்கே பதிவுபோடும் சில ஜென் ஸி கிட்ஸ்கள், ராஜா அனிருத்துக்கே டஃப் கொடுக்கிறார். சாய் அபயங்கருக்கு தண்ணி காட்டுகிறார், ராஜா கம்பேக் என்கிற அல்ப கமெண்டுகளையும் பார்க்க நேர்கிறது.
சிலர் போல் கம் பேக் கொடுக்க ராஜா எப்போது ஓய்விலிருந்தார்? டோரதியின் இரு பாடல்களைப் பற்றிப் பேசித் தீர்க்கும் முன்னரே இதோ அடுத்த தடாலடியாக ‘லெனின் பாண்டியன்’ படத்தின் ‘பாண்டி முனி’ சிலிர்க்க வைக்கிறதே?
ராஜாவிடமிருந்து இன்னும் கேட்கக் காத்திருங்கள்… ஆயிரம் தாமரை மெட்டுக்களே…