அஜித்குமார் - இளையராஜா 
சினிமா

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை!

Staff Writer

‘குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தில், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களைப் படத்திலிருந்து நீக்கவும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தனது அனுமதியில்லாமல் பாடல்களைப் பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குட் பேட் அக்லி படத்தில், மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மனு குறித்துப் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.