‘நான் வேணும்னே குப்பைப் படங்கள்ல நடிக்கலை…
களை எடுத்துக்கிட்டு இருக்கேன்…
லெஜெண்ட்ஸ்னு சொல்லி ஊரை ஏமாத்திக்கிட்டு உழைக்காமலே வேலை செய்யிற இவங்கள மாதிரி ஆளுங்களை…
தமிழ் சினிமாவை விட்டே துரத்தியடிக்கிற வேலையைதான்
இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கேன்…
இது இனியும் தொடரும்…’
வர்ம மூவ்மெண்ட் போஸ் ஒன்றுடன் இந்தியன் தாத்தா கமல் கோபாவேசமாக நிற்கும் இந்த மீம்ஸ் ‘தக் லைஃப்’ படம் குறித்து வந்த லட்சத்து சொச்சங்களில் ஒன்று.
இது சும்மா நகைச்சுவைக்காகப் போடப்பட்ட ஒன்றுதான் என்றாலும் முகத்தில் அறைகிற கசப்பான உண்மையும் இதில் இருக்கவே செய்கிறது என்பதை தமிழ் சினிமா ரசிகன் மறுக்க முடியாது.
முன்பெல்லாம் முன்னணி இயக்குநர் என்கிற பட்டம் நல்ல படம் கொடுப்பவர்களுக்கு இருந்தது. படங்களில் சண்டைக்காட்சியே வைக்காத இன்னும் சொல்லப்போனால் வில்லன்களே இல்லாமல் படமெடுத்த மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலசந்தர், பாரதி, பாக்ய ராஜாக்கள் முன்னணி இயக்குநர்களாக இருந்தார்கள். நடிகர்களின் பின்னால் வாலாட்டி சினிமாவை நாசம் செய்யாமல், கதைகளை நம்பிப் படம் எடுத்தார்கள்.
ஆனால் இன்றைய முன்னணி இயக்குநர்கள் என்பவர்கள் அவர்கள் எடுக்கும் பெரும் பட்ஜெட்டுகளால் அளக்கப்படுகிறார்கள். 50 கோடிக்குப் படம் எடுத்து ஹிட் கொடுக்கிற இன்றைய இயக்குநர்களின் அடுத்தடுத்த படங்கள் 150, 300, 500 கோடிகள் என்று ஜம்ப் ஆகின்றன. சின்ன பட்ஜெட்டில் நல்ல படம் எடுக்கிற முதல் பட இயக்குநர்கள் அந்த படவெற்றிக்குப் பின் ஒன்று அவர்களே நடிகர்களின் பின்னால் ஓடிவிடுகிறார்கள் அல்லது நடிகர்களே அவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். ‘ஜெய் பீம்’ கொடுத்த ஞானவேலை ரஜினி தூக்கிக்கொண்டு போய் ‘வேட்டையன்’ கொடுத்தது போல.
‘மாநகரம்’ என்று, அவ்வளவாக அறியப்படாத முகங்களை வைத்து நல்ல படம் எடுத்த லோகேஷ் கனகராஜ் என்கிற இயக்குநர் அடுத்து கார்த்தியை வைத்து ‘கைதி’ விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’, ‘லியோ,’ கமலை வைத்து ‘விக்ரம்’ ரஜினியை வைத்து ‘கூலி’ என்று தனது கூலியை பல கோடிகள் ஏற்றிக்கொண்டு நட்சத்திர நடிகர்களை வைத்து மசாலாக்களை வரிசையாக கொட்டுகிறார். அத்தனையும் மக்காத மசாலாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வகையறா குப்பைகளைக் கொட்டுகிற அட்லி, சுந்தர்.சி, ஆதிக் ரவிச்சந்திரன் போன்றவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்.
தமிழ் சினிமாவின் டாப் 10 டைரக்டர்கள் என்று கூகுளில் தேடினால் ‘கடைசி விவசாயி’ மணிகண்டனோ, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ லெனின் பாரதியோ, ’ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜாவோ தென்படுவதே இல்லை. அங்கே காஸ்ட்லி சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள் மேற்படி மசாலா இயக்குநர்களே. அதிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் லெஜண்ட்ஸ் என்று இரும்பு ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்கள் ஷங்கரும் மணிரத்னமும்.
அது என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை. அவ்வப்போது தோல்விப் படங்கள் கொடுத்தாலும் அந்த லெஜண்ட்ஸ் பட்டம் மட்டும் இவர்களை விட்டுப் போவதேயில்லை. மணிரத்னத்துக்காவது காலத்துக்கும் சொல்லிக்கொள்ள ஒரு காட்ஃபாதர்... ஸாரி ‘நாயகன்’ இருக்க ஷங்கரோ காஸ்ட்லியான சில படங்கள் எடுத்தது தவிர்த்து சொல்லிக்கொள்ள உருப்படியான ஒரு படமாவது இருக்கிறதா என்பது தெரியவில்லை.
ஆனால் எல்லா சம்பவங்களுக்கும் எண்ட் என்று ஒன்று இருந்துதானே ஆகவேண்டும்? தற்போது மணிரத்னமும் ஷங்கரும் அந்த எண்ட் கார்டு அருகே வந்து நிற்பதுதான் அவர்களது டஃப் லைஃப்.
மணிரத்னத்தை எடுத்துக்கொண்டால் அவரது 40 வருட சினிமா பயணத்தில் ஆரம்பத்தில் கே.ரங்கராஜ், ஆர்.சுந்தர்ராஜன் ஸ்டைலில் இளையராஜாவின் பாடல்கள் தயவில் நான்கு படங்கள் கொடுத்து ஐந்தாவது படமான படமான நாயகனில் வயசுக்கு வருகிறார். அந்த ஒரே படத்தில் லெஜண்ட் ஆகிவிடுகிறவருக்கு அப்புறம் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் அசைக்க முடியாத லெஜண்டாகவே நீடிக்கிறார். இத்தனைக்கும் அடுத்தடுத்து கணிசமான தோல்விப்படங்கள் கொடுத்தவர். அவரது ’இருவர்’ படத்தின் முதல் நாளிலேயே கோவை தியேட்டர் வாசலில் ‘படம் சுமாராத்தான் இருக்கும். அதுக்காக தியேட்டர் சீட்டையெல்லாம் கிழிக்காதீங்க பாஸ் ’ என்று போர்டு வைக்கப்பட்டதெல்லாம் பிளாக் ஹிஸ்டரி.
ஆனால் அந்தத் தோல்விகளெல்லாம் மணியின் ‘Money' + பட வரவைப் பாதித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், கவர்ச்சியான காம்பினேஷன்கள் மூலம் அவரது அடுத்தடுத்த படங்களின் பட்ஜெட்டை இரட்டிப்பாக்குவதை அவர் ஒரு தந்திரமாகவே வைத்திருந்தார். காரணம் அவர் சிறந்த இயக்குநர் என்பதை விட சிறந்த வியாபாரி. விக்ரம் மார்க்கெட்டில் இருந்தால் ‘ராவணன்’ எடுப்பார். சிம்புவுக்கும் விஜய் சேதுபதிக்கும் மார்க்கெட் இருந்தால் ‘செக்கச் சிவந்த வானம்’ எடுப்பார். சூர்யாவுக்கும், மாதவனுக்கும் மார்க்கெட் இருந்தால் ‘ஆயுத எழுத்து’ எடுப்பார். அதே வரிசையில் ‘விக்ரம்’ அடைந்த மெகா வெற்றிதான் அவரை கமலுடன் கைகோக்கச் செய்து அது ’37 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அற்புத காம்பினேஷன் ஆக்கப்பட்டது.
இந்த காம்பினேஷனில் நல்ல படம் எடுப்பதைத் தாண்டி கமலும் மணியும் பெருத்த துட்டு சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார்கள் என்பதை அவர்களது ஒவ்வொரு விளம்பரமும் விளம்பிக்கொண்டே இருந்தது. பட ரிலீஸுக்கு பல நாட்கள் முன்பிருந்தே பேய் பிடித்தது போல் ஃப்ளைட் பிடித்து ஊர் ஊராய் ‘இந்தப் படம் 40 நாயகனாய் வந்திருக்கு’ என்று வாய் கூசாமல் கூவினார்கள். மவுனத்துக்குப் பேர் போன மணிரத்தினமே இம்முறை படம் குறித்து ரொம்ப ரொம்பப் பேசினார். ஆல் இந்தியா ஊடகங்களுக்கு விருந்து வைத்து அவர்களுக்கு அவரே மொய்யும் வைத்தார்.
ஆனால் ரிசல்ட்.? ‘நீலச் சாயம் கரைஞ்சு போச்சி…ராஜா வேஷம் கலைஞ்சி போச்சி டும்டும்டும்’ கதைதான்.
‘டேக்கிங், மேக்கிங் ஸ்டைல்ல இனியும் எங்களை ஏமாத்த முடியாது. ஒரே ஒரு வாட்டியாவது இந்த மண்ணோட கதையோட எங்ககிட்ட வாங்க மணி சார்’ என்பதுதான் ‘தக் லைஃப்’ படத்தின் ரிசல்ட் மூலம் தமிழ் ரசிகன் மணிரத்னத்துக்கு சொல்லும் மெசேஜ்.
அடுத்த லெஜெண்ட் ‘ஜென்டில் மேன்’ மிஸ்டர் ஷங்கர். அடுத்தடுத்து பெரும்பட்ஜெட் படங்களை மட்டுமே எடுப்பேன் என்று அடம்பிடித்து சினிமா இண்டஸ்ட்ரியை ஒருவழி ஆக்கியதில் முதன்மையானவர் ஷங்கர். அடுத்து ரிலீஸாகுமோ ஆகாதோ என்கிற சந்தேகப் பட்டியலில் இருக்கிற ‘இந்தியன் 3’ வரை இவர் இயக்கியிருக்கிற 16 படங்களுமே பிரம்மாண்டங்கள். ஆனால் கலைப்படைப்பாகப் பார்த்தால் தண்டங்களே. சினிமாவில் வெற்றியில் இருக்கும்போது சம்பந்தப்பட்டவர் எவ்வளவு பெரிய க்ரைம் செய்தாலும் அதுவும் அவரது சாதனைகளில் ஒன்றாகவே பார்க்கப்படும். அப்படி மேலும் மேலும் தனது பட்ஜெட்டை உயர்த்தி, சிறு பட்ஜெட் படங்களின் ஜன்ம விரோதியாகப் பார்க்கப்பட்டவர் ஷங்கர்.
ஏவிஎம் நிறுவனத்துக்காக ரஜினியை வைத்து இவர் இயக்கிய ‘சிவாஜி’ படத்துக்கு அடுத்து இவரை வைத்து படம் தயாரித்த எந்த நிறுவனமும் தப்பிப் பிழைத்ததில்லை. காரணம் இவர் இயக்கும் படத்தின் பட்ஜெட் 300 கோடி என்றால் இவரே தனது சம்பளமாக ஒரு 60 கோடியை எடுத்துக்கொள்வார். அடுத்து நட்சத்திர, டெக்னீஷியன்கள் சம்பளம், படப்பிடிப்புச் செலவுகள் எல்லாம் போக படம் எடுத்த தயாரிப்பாளர் வெறும் கையை நக்கிக்கொண்டு போவதுதான் தொடர்ந்து நிகழ்வது. அதிலும் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ தெலுங்கு தமிழில் இவர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ போன்றவை இதுபோன்ற செயல்களின் உச்சம்.
‘கேம் சேஞ்சர்’ குறித்து ஒரு பேட்டியில் பேசிய அப்பட எடிட்டர் ஷமீர் முகம்மது, ‘ஷங்கர் அப்படத்தை எனக்கு எடிட் செய்யக் கொடுத்தபோது அது ஏழரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருந்தது. படத்தின் நீளத்தை மூன்று மணி நேரமாகக் குறைக்க ஒரு வருடத்துக்கும் மேலாக உழைத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். நல்லவேளையாக கடைசி நேரத்தில் அவர் இன்னொரு எடிட்டரைக் கொண்டு வந்ததால் அப்படத்திலிருந்து உயிர்தப்பி ஓடி வந்தேன்’ என்கிறார்.
இப்படியாக ஷங்கர் இயக்கிய கடைசி மூன்று படங்களின் நஷ்டம் மட்டுமே சுமார் 1000 கோடியை எட்டும் என்கிறார்கள். இந்த இமாலய தோல்விகளால் அடுத்து 1000 கோடியில் எடுக்கவிருந்த ‘வேள்பாரி’ டிராப் ஆகி, தனது வீட்டு மொட்டை மாடியில் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ எழுதின வைரமுத்து ஸ்டைலில் வாக்கிங் போய்க்கொண்டிருப்பதாக தகவல்.
ஸோ இந்த வாக்கிங் இன்னும் பல காலத்துக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என்பதால் மலைகளுக்கு பெயிண்ட் அடிப்பது, சூரினைச் சுற்றி லைட்டிங் வைப்பது, சந்திரன் நெற்றியில் சாந்துப் பொட்டு வைப்பது போன்ற மெகா பட்ஜெட் காமெடிகளை திரையில் பார்க்கவேண்டிய துரதிர்ஷ்டம் நமக்கு இல்லை.
பி.கு : ரெண்டு பேரையும் இவ்வளவு உற்சாகமா வழியனுப்ப முடிவு பண்ணிட்டு அப்புறம் என்னத்துக்கு கட்டுரைக்கு ‘இன்னும் கொஞ்ச காலம் இருந்தாதான் என்ன?’ன்னு டைட்டில்?
‘அட ஆமால்ல… அப்ப டைட்டிலை இப்பிடி மாத்துவோம்’
‘எப்புடி?’
‘கிளம்புங்க காத்து வரட்டும்’