விஜய் முதல்வர் நாற்காலியில் அமர இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் அந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு சைட் டிஷ்ஷாக ஜனநாயகன் படமும் ரிலீஸாகிவிடவேண்டும் என்பது விஜய் ஆதரவாளர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் இருக்கிற பரபரப்புகளுக்கு மத்தியில் இப்போதைக்கு யாரும் ஜனநாயகன் ரிலீஸ் குறித்து பேசக்கூடாது என்று விஜய் திட்டவட்டமான முடிவில் இருப்பதாக தகவல்.
ஜனநாயகன் படம் மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராகி, பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக்கப்பட்டு ரிலீஸாகாமல் முடங்கிக்கிடப்பது பழைய கதை. ஆனால் இப்போது விஜய்க்கு அரசியல் ரீதியாகக் கிடைத்திருக்கும் க்ரீன் சிக்னலால் ‘ஐயா அம்மா வாங்க… சேதாரம் எதுவும் இல்லாம சென்சார் சர்டிபிகேட்டை வாங்கிட்டுப் போங்க’ என்கிற நிலை உருவாகிவிட்டது.
அரசியல் கொண்டாட்டத்தோடு ஜனநாயகன் வெற்றியையும் சேர்த்து கொண்டாடிவிடலாம் என்பது விஜய் ஆதரவாளர்களின் விருப்பமும் கூட. இன்னொரு பக்கம் படம் திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்யப்பட்டதால் தியேட்டர் கலெக்ஷன் டல்லடிக்குமோ என்கிற கவலையும் தயாரிப்பு தரப்புக்கு இருக்கிறது. படத்தை 50 கோடிக்கு வாங்கியுள்ள தனியார் ஓ.டி.டி தளமும் சீக்கிரம் ரிலீஸ் பண்ணி எங்களுக்கு வழி விடுங்க என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை சுடச்சுட இப்போதே ரிலீஸ் செய்தால் ஓரளவாவது வசூல் பார்த்துவிடலாம் என்று தயாரிப்பு தரப்பு நினைத்து விஜய்யைத் தொடர்பு கொண்டால் அவர்களோடு பேசக்கூட தயாராக இல்லையாம் விஜய்.
படத்தை இன்னும் 4 வாரங்கள் தள்ளி, அதாவது அரசியல் பரபரப்புகள் அடங்கி, சில நலத்திட்டங்களில் கையெழுத்திட்ட பிறகே ரிலீஸ் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் விஜய். இடையில் மே 14 அன்று சூர்யாவுக்கு ஜோடியாக ‘சவுத் குவீன்’ த்ரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ படம் ரிலீஸாவதும் குறிப்பிடத்தக்கது.