‘சீதா ராமம்’, ’லக்கி பாஸ்கர்’ என தொடர் வெற்றிகளை ருசித்து வரும் நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படம் ‘காந்தா’. முந்தைய படங்களின் வெற்றியை இந்தப் படத்தில் தக்க வைத்திருக்கிறாரா துல்கர்? தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படும் தியாகராஜ பாகவதரின் கதை என்ற சர்ச்சையும் பட வெளியீட்டிற்கு முன்னால் சுற்றி வந்தது. இதை எல்லாம் இந்தப் பட விமர்சனத்தில் பார்க்கலாம்.
மேடை நாடகங்களில் நடித்து வந்த யாரும் ஆதரவில்லாத டி.கே. மகாதேவனின் நடிப்பு திறன் கண்டு அவனுக்கு ஆதரவும் சினிமாவில் நடிகனாக வாய்ப்பும் தருகிறார் இயக்குநர் ‘அய்யா’ (சமுத்திரக்கனி). சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள், பணம், புகழ் என முன்னணி நட்சத்திரமாக வளரும் துல்கருக்கும் அவரை வளர்த்துவிட்ட சமுத்திரக்கனிக்கும் இடையில் ஒருகட்டத்தில் ஈகோ மோதல் வெடிக்கிறது.
சமுத்திரக்கனியின் மனதுக்கு நெருக்கமான கதை ஒன்றில் சந்தர்ப்ப சூழ்நிலையால் துல்கர் நடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக சமுத்திரக்கனி அறிமுகப்படுத்தும் குமாரி (பாக்கியஸ்ரீ போர்ஸ்) நடிக்கிறார். பாக்கியஸ்ரீக்கும் துல்கருக்கும் இடையில் மலரும் காதல், விஷயம் தெரிந்ததும் சமுத்திரக்கனியின் கோபம், கடைசியில் துல்கர் எடுக்கும் அதிர்ச்சிகரமான முடிவு இவை எல்லாம்தான் ‘காந்தா’ படத்தின் கதை.
ஐம்பதுகளின் சினிமா, நடிகர்களின் ஒப்பனை, கலை இயக்கம், இசை, ஒளிப்பதிவு என தொழில்நுட்ப ரீதியாக அனைத்தையும் குறையில்லாமல் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது ‘காந்தா’. இவை அனைத்திற்கும் நியாயம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது நடிகர்களின் நடிப்பு. டி.கே. மகாலிங்கமாக ரசிகர்களின் கைத்தட்டலில் பெருமை கொள்வது, ஈகோவோடு சமுத்திரக்கனியிடம் மோதுவது, பாக்கியஸ்ரீயிடம் காதலில் உருகுவது என சிறப்பாக நடித்திருக்கிறார் துல்கர்.
குறிப்பாக, கதாநாயகி குமாரியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் அசத்தியிருக்கிறார். பயம், அழுகை, கோபம் என திரையில் கதாநாயகியாக ஜொலிப்பது நிஜத்தில் அப்பாவியாக வலம் வருவது என இவர் காட்சிகள் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் திரையில் வராதா என ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார். ’கதாநாயகிக்கு க்ளோஸ் ஷாட் வை’ என சமுத்திரக்கனி சொல்லும் முன்பே நாம் முந்திக் கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு அழகு நடிப்பு என இரண்டும் பார்க்க பார்க்க திகட்டாத அளவில் கொடுத்திருக்கிறார். அங்கங்கே சமந்தா, ராஷ்மிகா முகச்சாயல் அவரிடம் தென்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவருக்கு அடுத்து அந்த கதாபாத்திரமாக மிளிர்வது சமுத்திரக்கனி. கோபம், ஈகோ, இயலாமை என அனைத்தையும் சரியான மீட்டரில் பிரதிபலித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் ராணா நடிப்பில் அட்டகாசம் செய்திருக்கிறார். இவர்கள் தவிர நிழல்கள் ரவி, ‘மாடர்ன் ஸ்டுடியோஸ்’ மார்ட்டின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர், நிழல்கள் ரவி, காயத்ரி என அனைத்து கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
சினிமா கலையை தன் உயிரினும் மேலாக நேசிக்கும் இயக்குநர், தன் பெயரையும் புகழையும் காக்க விரும்பும் கதாநாயகன், சினிமாவில் அடையாளம் தேடும் கதாநாயகி என இவர்கள் மூவர்களின் மோதல்-காதலோடு முதல் பாதி விறுவிறுப்பாக நகர, இரண்டாம் பாதி இதற்கும் சற்றும் தொய்வில்லாமல் பரபர இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் களமாக மாறுகிறது. இரண்டரை மணி நேரத்துக்கும் மேலான கதையை எந்தவித அலுப்பும் இல்லாமல் பார்வையாளர்களை கதையோடு ஒன்றச் செய்த அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜூக்கும் திரைக்கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!
கதை இறுதியில் துல்கர் எடுக்கும் முடிவு ஒரு பக்கம் நெகிழ்வாகவும் இன்னொரு பக்கம் சினிமா மாயை ஒருவனை எப்படி மாற்றுகிறது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல சொல்கிறது. அதேபோல, தியாகராஜ பாகவதர் கதைதான் இது என்றில்லாமல் அதில் இருந்து இன்ஸ்பையர் ஆகி ஐம்பதுகள், எழுபதுகள் மற்றும் அதற்கு பின்னான சினிமா காலக்கட்டங்களில் நடந்த பல முக்கிய சம்பவங்களையும் இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு படமாக்கியிருக்கிறார்கள்.
சமுத்திரக்கனி தன் வாழ்வையே முடித்துக் கொள்ளும் அளவிற்கு குமாரிக்கும் அவருக்கும் இடையிலான பாசப்பிணைப்பு, குமாரி மீது பட செட்டில் உள்ள பலரும் காட்டும் அக்கறை இவற்றை இன்னும் ஆழமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். சமுத்திரக்கனிக்கு எதிரான துருப்பு சீட்டாகவே குமாரியை துல்கர் பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகமே படம் முழுக்க நிறைந்திருக்கிறது. இந்த சில குறைகள் தவிர்த்து ‘காந்தா’ திரைப்படம் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக நிச்சயம் துல்கருக்கும் ராணாவுக்கும் வெற்றிக்கனிதான்!