போர் தொழில் ஹிட் அடித்தவுடன் இயக்குநர் விக்னேஷ் ராஜாவை தமிழ் சினிமாவின் அத்துனை ஹீரோக்களும் அள்ளிக் கொண்டு போகக்காத்திருந்த நிலையில் தரதரவென அவரை தள்ளிக் கொண்டு போன தனுஷ் பரபரவென நடித்துக் கொடுத்த படம் இந்த கர' .
கதை வறண்ட விவசாய பூமியான ராமநாதபுரத்தில், 90களில் நடக்கிறது.
கதைப்படி தனுஷ் மிகவும் நல்ல திருடன்.. ஸாரி.. நல்ல திருடர். தேவைக்கு மீறி ஒரு ரூபாயும் திருடமாட்டார். போலீசுடன் பஞ்சாயத்தாகி காதலி மம்தா பைஜுவுடன் ஊரைவிட்டுப் போகிறார். போன இடத்தில் பொருளாதாரப்பிரச்னை. ஓட்டல் வைத்து நடத்தமுடியவில்லை. ஊரில் இருக்கும் எட்டு ஏக்கர்நிலத்தை விற்று காசு சேர்க்கலாம் என்று திரும்பிவருகிறார்.
வந்த இடத்தில்தான் தெரிகிறது, ஊரில் உள்ள நிலங்களெல்லாம் ட்ராக்டர் வாங்கிய வகையில் ஒரு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருப்பது! அப்பாவாக வரும் கே எஸ்.ரவிகுமார்,மகன் தன்னைப் பார்க்கவரவில்லை.. நிலத்துக்காக வந்திருக்கிறான் என தெரிந்து ஆற்றாமையில் இறக்கிறார். அவர் உடலைக் கூட சொந்த இடத்தில் புதைக்க வங்கிக் காரர்கள் விடுவதில்லை. பழையபடி, தன் திருட்டு ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார். அதே வங்கியில் திருடுகிறார்.. கடனை அடைத்தாரா என்பதுதான் கதை.
தனுஷ் நடிப்பில் பின்னி இருக்கிறார். ஒவ்வொருமுறை திருட்டின்போதும் கருப்பண்ணசாமியை இரண்டாவது அக்யூஸ்டாக கூட்டிப்போகும் டீல் சுவாரஸ்யம்! கே எஸ் ரவிகுமாருக்கு நல்ல ரோல். மம்தா பைஜு மேல் இயக்குநருக்கு என்ன கோபமோ? சாதாரணமான பாத்திரத்தைக் கொடுத்து இருக்கிறார். கண்டுபிடிக்க முடியாத வயதான கெட் அப்பில் வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மா ரோலில் ஸ்ரீஜா ரவி, போல பலர் நடித்துள்ளனர்.
ராமநாதபுரத்தின் வெயிகை திரையில் கொண்டுவந்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். பாடல்களில் கவனிக்க வைக்கும் ஜீவி பிரகாஷ், பின்னணி இசையில் தேறவில்லையே...
இவ்வளவு நல்ல நடிகர் பட்டாளம் இருந்தும் இயக்குநர் விக்னேஷ் ராஜா,, தன் போர்த்தொழில் மேஜிக்கை இங்கே தவறவிட்டுள்ளார்.டிராக்டர் லோன் கொடுத்து விவசாயிகளை சித்ரவதை செய்கிற ஜெயராமன் அதே டிராக்டர் அடிபட்டு சாவதெல்லாம் கதை நடக்கிற 90 காலத்து பழைய உத்தி.
படம் அங்கங்கே கரை சேர முடியாமல் தத்தளிக்கிறது!