தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை தயாரிக்க எத்தனையோ முன்னணி தயாரிப்பாளர்கள் கடுமையாக முயன்றும் கூட முடியாத நிலையில் தன்னுடைய 21 வயதிலேயே செய்து சாதனை படைத்துள்ளார் இன்பன் உதயநிதி...
இதைப்படிக்கும்போது,... இந்தியாவிலேயே கார் வச்சிருக்க கரகாட்டக்கோஷ்டின்னா அது நாம மட்டும்தான் என்று கவுண்டர் பாணியில் யோசித்தால் நீங்கள் ரொம்ப நக்கலான ஆள்தான்.
ஆனால் சட்டை கிழியும், உக்கிரமான அரசியல் பதிவுகளுக்கு மத்தியில் கடந்த ஒரு வாரமாக திமுக ஐ.டி விங்கரர்கள் இன்பன் குறித்து இன்பம் பொங்க ஷேர் பண்ணி வருவது ‘இந்தியாவிலேயே இன்பநிதி’ துதிதான். பாவம் அது அவர்கள் விதி.
நாம் ரஜினி, கமல் படக் கதைக்கு வருவோம்.
‘கமல் நம்மை விட எவ்வளவு பெரிய கலைஞன். ஒரு ‘சலங்கை ஒலி’, ஒரு மகாநதி’ போன்ற படத்தை நம்மால் கனவில் கூட செய்ய முடியுமா ? ஆனாலும் மார்க்கெட்டில் எத்தனையோ வருடங்களாக நமக்கு அடுத்த இடத்தில்தானே இருக்கிறார் என்கிற எண்ணம், சுயபரிசோதனை ரஜினியிடம் எப்போதும் உண்டு. அதற்கு சிறு பிராயச்சித்தம் செய்ய விரும்பியதுதான் அவரது நிறுவனத்துக்கு நடித்துக்கொடுக்க விரும்பிய படம்.
இந்த எண்ணமும் பகிர்வும் இருவருக்கும் இடையே நடந்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். அநேகமாக ‘விஸ்வரூபம்’ எடுத்து கமல் சிக்கலில் சிக்கிக்கொண்டிருந்த சமயம்.
ரஜினியின் அந்த வரம் பழம் நழுவி பக்கத்து வீட்டு பக்கெட்டில் விழுந்த கதையாக உதயநிதிக்குப் போயிருக்கிறது.
இயக்குநர் விசயத்தில் ரஜினியின் சிபாரிசை முழுமனதோடு ஏற்றுக்கொள்வது என்கிற அடிப்படையில்தான் ஏகமனதாக நெல்சன் உள்ளே வந்தார். ஜெயிலர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே ரஜினி கேட்டு கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று சில கதைகளையும், பல உலக சினிமா டிவிடிகளையும் ரஜினிக்கு பகிர்ந்திருக்கிறார் நெல்சன். அவற்றில் ஒன்றை தேர்வு செய்வதில் ரஜினிக்குக் குழப்பமே இருக்கவில்லை.
லேட்டஸ்ட் ட்ரெண்டில் நாம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதில் கவுரவம் எல்லாம் பார்க்கக்கூடாது என்று எப்போதும் நினைக்கிற ரகம் ரஜினி. நெல்சன் தொடங்கி அனிருத் வழியாக இப்படத்தில் இடம் பெறப்போகும் அனைத்து டெக்னீஷியன்களுமே அவ்வாறு தேர்வானவர்கள்தான். படத்தில் இடம்பெறப்போகும் நட்சத்திரங்களும் இந்தியா முழுக்க பிரபலமானவர்களாகவே இருப்பார்கள்.
சினிமா ஜாம்பவான்களான் கமலும் ரஜினியும் இணையும்போது மேடைதோறும் இவர்களால் போற்றிப்பாடப்படுகிற இளையராஜாவை இசையமைப்பாளராகப் போடாமல் அனிருத்தைப் போட்டது ஏன் என்றொரு சர்ச்சை இப்போது தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இது போன்ற மெகா படங்களை பண்ணுவதற்கு ஆசைப்படுகிறவரல்ல ராஜா என்பது ரஜினி, கமல் இருவருக்குமே தெரியும்.
இப்படத்தின் கதை மிக மெல்லிய சரடுகளுடன் ஆரம்பப்புள்ளிகளோடுதான் இருக்கிறது என்பதால் கதை இதுதான் என்று கப்ஸா விடுவது உகந்ததல்ல. ஆனால் மிக நிச்சயமாக இருவருமே வில்லன்களாகவே வருகிறார்கள். அதை திசை திருப்புவதற்காக முன்னோட்டத்தில் வைக்கப்பட்ட வசனம்தான் ‘யாரு ஹீரோ?’ என்பது.
படத்தின் இப்போதைய நிலவர பட்ஜெட் சுமார் 600 கோடி. ரஜினிக்கு சம்பளம் 150 கோடி. வரி விவகாரங்களை நிறுவனமே செலுத்திக்கொள்ளும். கமலுக்கும் ஏறத்தாழ இதே சம்பளம் என்றாலும் தனது நிறுவனப்படத்தை தாரை வார்த்ததால் சென்னை உரிமை அல்லது லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் என்கிற போனஸ் பாயிண்ட் உண்டு. வழக்கம்போல் ஆயிரம் கோடி வசூலாக ஆசைப்படுகிறார்கள்.
‘கல்கி 2’, இரட்டையர்கள் அன்பறிவ் இயக்கும் படம் ஆகிய இரண்டும் கமல் முடிக்க, ஜெயிலர் 2’ முடித்து, சிபி சக்ரவர்த்தி படம் முடித்து ரஜினி ஒரு நீண்ட ஓய்வெடுக்க 2027 ஜூன், ஜூலைகளில்தான் இதன் படப்பிடிப்பு தொடங்கும். இரண்டே ஷெட்யூல்களில் படப்பிடிப்பை முடித்து ’28 பொங்கலுக்கு வந்துவிட ஆசைப்படுகிறார்கள்.
ரஜினி அநேகமாக இத்தோடு தனது ஓய்வை அறிவித்துவிடுவார். கமலும் அடுத்து வருடத்துக்கு ஒரு படத்துக்கு மேல் நிச்சயம் பண்ணமாட்டார்.
’26 ஜூனுக்கே இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. ’27 ஜூனில் ஆரம்பிக்கவிருக்கிற படத்துக்கு இப்பவே என்னத்துக்கு இப்படி ஒரு முன்னோட்டம்?
சோஷியல் மீடியாவாலாக்கள், ஐ.டி விங்கரர்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள், சதா செய்திப்பசியோடு அலையும் யூடியூபர்களுக்கு தீனி போடும் ஒரு நல்ல எண்ணம்தான். ரிலீஸ்வரை இப்படம் குறித்து என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் அல்லவா?
அப்பட்டியலில் நம்மையும் நம் வாசகர்கள் இணைத்து விடாமலிருக்க நன்றி கூறி விடைபெறும் முன் இப்படம் தொடர்பாக இணையத்தில் கண்ட ஒரு சுவாரசியமான கருத்து…
‘மச்சி... நெல்சன் பட ட்ரெயிலர்ல வர்ற பொண்ணுங்கள்லாம் அல்டிமேட். அவங்க காஸ்ட்யூம்ஸை வச்சகண்ணு வாங்காம பார்க்கலாம். ஆனா அதை டிஸ்டர்ப் பண்ணுற ரெண்டு பெருசுங்க குறுக்கமறுக்க நடந்து டார்ச்சர் பண்றதைத்தான் சகிச்சுக்க முடியலை”.