சினிமா

இத்தோட முடிச்சிக்கலாம் லாலேட்டன் –’திரிஷ்யம் 3’ விமர்சனம்

மிஸ்டர் முள்

ஓடாத படங்களுக்கே கூட பார்ட் 2’ பார்ட்3 எடுக்கிற வியாதி இந்திய சினிமாவையே தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில் ரீமேக் செய்யப்பட்ட அத்தனை மொழிகளிலும் ஜாக்பாட் அடித்த திரிஷ்யத்தை அவ்வளவு லேசில் விட்டுவிடுவார்களா ? இதோ திரிஷ்யம் பார்ட்3.

கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து, அடுத்த பார்ட்டில் தியேட்டர் ஓனராக முன்னேறியிருந்த ஜார்ஜ்குட்டி மோகன்லால் இந்த பார்ட்டில் தயாரிப்பாளராக புரமோஷன் ஆகி ஒரு ஹிட் படத்தையும் எடுத்துவிடுகிறார்.

அந்த சந்தோஷம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. முதல் பாகத்தில் ஜார்ஜ்குட்டியால் மகனை இழந்த உயரதிகாரிகள் தம்பதி வன்மம் கொஞ்சமும் குறையாமல் ஜார்ஜ்குட்டியை துரத்தத் துவங்குகிறார்கள். இம்முறை அவர்களது மெயின் டார்கெட் திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ஜார்ஜ்குட்டியின் மூத்த மகள்.

’ஜார்ஜ்குட்டி அவ்வளவு பெரிய புத்திசாலி ஒண்ணும் இல்ல. அதிர்ஷ்டத்தாலதான் ரெண்டுமுறை தப்பிச்சான். இந்த முறை அவன் தப்பவே முடியாது’ என்று எதிரிகள் கோஷ்டி இன்னும் பயங்கரமான சூழ்ச்சிகளில் இறங்க, ‘என் உயிர் இருக்கிறவரைக்கும் என் மகள்களை எப்படியாவது காப்பாத்துவேன்’ என்று சூளுரைக்கும் முரட்டுப்பிடிவாத ஜார்ஜ்குட்டி எப்படி வில்லன்களை எதிர்கொண்டார் என்கிற அதே டெம்ப்ளேட்.

இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் ‘மெல்ல எஸ்கேப் ஆகிவிடலாமா ? என்று யோசிக்கிற அளவுக்கு அவ்வளவு சுமார். அதுவும் 100 கோடி வசூலித்த படத்தை கையில் வைத்துக்கொண்டு மோகன்லால் பேசுகிற சினிமா வியாக்கியானங்கள் டல் மொமண்ட்ஸ். அதேபோல் கல்யாண புரோக்கர்களை வைத்துக்கொண்டு மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிற காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு ஒவ்வொரு எதிரியாய் எக்ஸ்போஸ் ஆக ஆக கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது. ஆனால் ‘அட’ மொமண்ட்கள் என்று எங்கேயும் இல்லாதது பெரும் ஏமாற்றம்.

இயக்குநர் ஜீத்து ஜோஸப், மோகன்லால் காம்போ முதல் இரு பாகங்களில் காட்டிய மேஜிக் இந்த மூன்றாவது பாகத்தில் முற்றிலும் மிஸ்ஸிங். லாலுக்கு ஜோடியாக அதே நம்ம மீனா. மகள்களாக வரும் அன்சிபா ஹாசனும் எஸ்தர் அனிலும் ஆறு வருட வளர்ச்சியுடன் இன்னும் கொஞ்சம் தேர்ந்த நடிப்புடன் வந்து நிற்கிறார்கள்.

ஏற்கனவே வந்த பாகங்களின் பாப்புலாரிட்டியை இன்னுமொருமுறை காசாக்கிவிடலாம் என்கிற சபலம் மட்டுமே மேலோங்கி நிற்க ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று சகல தொழில் நுட்பங்களும் டிட்டோ சுமார்தான்.

சரி நம்ம லாலேட்டனுக்காக சகித்துக்கொண்டு படம் ஓ.கேதான் என்று சொல்லலாமென்று பார்த்தால் க்ளைமேக்ஸில் அடுத்த பார்ட் எடுக்கப்போவதற்கான பஞ்ச் டயலாக்கோடு படத்தை முடித்திருக்கிறார்கள்.

நம்மளை முடிச்சி விடாம அவங்க முடிக்க மாட்டாங்க போலருக்கு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram