சினிமா

கார்த்தியின் 18 கதை விஞ்ஞானிகளும் சர்தார்2’வும்…பாக்ஸ் ஆபிஸில் சர்தாரை திண்டாட வைத்த மண்டாடி !

மிஸ்டர் முள்

முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவின் டாப் டென் ஹீரோக்களில் ஒருவராக இருந்த கார்த்தியை மூன்றே படங்களில் முட்டித்தூக்கியிருக்கிறார் நடிகர் சூரி. மண்டாடியில் பாய்மரக் கப்பல் போட்டியில் வென்ற சூரி பாக்ஸ் ஆபிஸ் போட்டியிலும் முன்னணிக்கு வந்திருப்பதுதான் சென்னை வெயிலைத் தாண்டிய ஹாட்.

கடந்த வியாழனன்று சுமார் 80 கோடி பட்ஜெட்டில் தயாரான கார்த்தியின் ‘சர்தார்2’வும் சுமார் 30 கோடியில் தயாரான சூரியின் மண்டாடியும் களத்தில் மோதின. சர்தாரை, அனுபவம் வாய்ந்த பி.எஸ். மித்ரன் இயக்க, மண்டாடியை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். இரு படங்களுக்குமே சரிசமமான திரையரங்குகள் கிடைத்திருந்தன.

ஆனால் பட ரிலீஸுக்குப் பின்னர் சர்தார் ஒரு குப்பை எனவும் ‘மண்டாடி’ அபவ் ஆவரேஜ் எனவும் எனவும் ரிசல்ட்கள் வரவே ஜனங்கள் மண்டாடியைக் கொண்டாடத் துவங்கினார்கள். எனவே ரிலீஸுக்கு மறுநாளான வெள்ளியன்றே பெரும் சரிவைச் சந்தித்த சர்தார் சூரியின் மண்டாடிக்கு முன்னர் மண்டியிட்டது.

தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி நான்கு நாட்களில் மண்டாடி சுமார் 35 கோடியும் சர்தார் 10 கோடிக்கும் கீழ்தான் வசூல் செய்துள்ளன.

ஹீரோக்கள் தங்களுக்கு என மார்க்கெட் வந்தபின்னர் ஆடுகிற ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக கதைகளை தேர்வு செய்வதில் அவர்கள் காட்டுகிற மெத்தனம்தான் அவர்களை பாதாளத்தில் கொண்டுபோய் தள்ளுகிறது.

இந்த கார்த்தி தனக்கான கதையை முடிவு செய்வதற்கு 18 பேர் கொண்ட கதை தேர்வுக்குழு ஒன்றை வைத்துக்கொண்டு இயக்குநர்களைப் பாடாய்ப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்த 18 கதை விஞ்ஞானிகள் நியமிக்கப்பட்ட பிற்குதான் ‘ஜப்பான்’, ‘வா வாத்தியார்’, ‘சர்தார்2’ என்று தொடர்ந்து மூன்று முத்தான படங்களை அடுத்தடுத்து கார்த்தி வழங்கியிருக்கிறார்.

பி.கு: கார்த்தி வகையறாவின் மனம் புண்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக ‘மண்டாடி’ வெற்றி தொடர்பான பார்ட்டிகள் எதையும் கொண்டாட வேண்டாம் என தனது பாய்மர வகையறாக்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சூரி.