திரிஷா, மன்சூர் அலிகான்
திரிஷா, மன்சூர் அலிகான்  
சினிமா

மன்சூர் வழக்கு: திரிஷாவிடம் விளக்கம் கேட்கும் காவல்துறை!

Staff Writer

நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரியவகையில் பேசிய வழக்கில், நடிகை திரிஷா தரப்பு விளக்கத்தைக் கேட்டு சென்னை ஆயிரம்விளக்கு மகளிர் காவல்நிலையத்தினர் அவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.

அதன்படி, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் இந்திய தண்டனைச் சட்டம் 509 – பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல், இந்திய தண்டனைச் சட்டம் 354(A) – பெண்ணின் நற்பெயருக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளில் ஆஜராகி வந்த நடிகர் மன்சூர் அலிகான், “திரை நாயகி திரிஷாவே மன்னித்துவிடு” என அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதற்கு, திரிஷா அவரது ட்வீட்டர் பக்கத்தில் ‘தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என்று பதிவிட்டார்.

இந்த நிலையில், மன்சூர் அலிகான் மீதான வழக்கில் திரிஷாவிடம் விசாரணை நடத்தி, அவர் அளிக்கும் பதில்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இது தொடர்பாக திரிஷா தரப்பு விளக்கத்தைக் கேட்டு, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் திரிஷாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க அவருக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.