மாயபிம்பம் திரைப்படம் 
சினிமா

'மாயபிம்பம்’- எல்லாக் காலத்திற்குமான ஒரு காதல் கதை!

பேரா. மு.இராமசுவாமி

`பிரபலம்’/ ‘பின்புலம்’ என்கிற தனித்த முத்திரை குத்தாது, தன் சொந்தப் படைப்பின் முகத்தை-கதையை-மட்டுமே நம்பி, வேறெந்தப் பெரிய அடையாளமுமின்றி வெளிவருகின்ற எளிய திரைப்படங்களுக்கு, முன்னுரிமை கொடுக்கிற என் இயல்பினால், நண்பர் ஒருவர், குறிப்புக் காட்ட, 15-01-2018 இல் தணிக்கைச் சான்று பெற்று, சரியாக எட்டு ஆண்டுக் காத்திருப்புச் சுமைக்குப்பின், 23-01-2026 இல், திரையில் இறக்கிவைக்கப் பட்டிருக்கிற, ’செல்ஃப் ஸ்டார்ட் புரொடக் ‌ஷ’னின் ’மாயபிம்பம்’ திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க முடிந்தது. தலைப்பை, அடிக்கோடிட்டு, அதன்கீழ், ’2005 லவ் ஸ்டோரி’ என்கிற உரை விளக்கமும் தரப் பெற்றிருந்தது. 2005 இல், நிறைவேறிய காதல்/ நிறைவேறாக் காதல் என்று காதலைப் பலபடப் பேசுகிற பல படங்களின் வரிசையில், ’நிறைவேறிய-நிறைவேறா’க் காதலாய், பாவஜீவன்களாய்க் கவலைக்குள் எவரையும் தள்ளுகிற, பச்சாதாபமாய் எவரையும் பார்க்கத் தூண்டுகிற, காதலின் இன்னொரு கனத்தை இலக்கியமாய்ச் சொல்கிற படம் இது! அதைவிட, என்னைப் பரிதாபப்பட வைத்தது, சரியாக, 8 ஆண்டுகளாய்- படம் தொடங்கியதிலிருந்து என்று கொண்டால், 9,10 ஆண்டுகளாய்-அதில் பங்கேற்ற நடிக, நடிகையர், தொழில்நுணுக்கர்கள் அத்தனைப் பேரையுமே, குடத்தினுள் இட்ட விளக்காக மட்டுமே, இதுவரையும் வைத்திருந்தமைக்கு! செய்நேர்த்தியில், அனுபவ முத்துகளாய் முகிழ்த்து, ஆச்சரியப் படவைத்த இவர்கள் அனைவரின் முகங்களும், இன்றைக்குப் புதுமுகங்களாய்த்தான் தெரியவருகின்றன. எத்தனையெத்தனை உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர்கள் இவர்கள்? கதைப் பாத்திரங்களாய்த் திரையில் அவர்கள் படைத்துத் தந்திருக்கிற வலியோடு, அதை, இத்தனை ஆண்டுகள் எதார்த்தத்தில், பூட்டித் தூக்கிச்சுமந்து கொண்டிருந்தது, இன்னொரு வலியாக, நெஞ்சத்தை அழுத்துகிறது. அவர்கள் அனைவரும், தங்கள் வயதின் வசந்தங்களை எப்படியோ தொலைத்து, 8-10 ஆண்டுகளின் படைப்பு அவதியோடு, இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றனர். இதில் பங்குபெற்றிருக்கிற அனைவருமே, இன்னமும், தாங்கள் விரும்பி வந்திருந்த திரைத்துறையில் இருக்கின்றனரா என்பது தெரியவில்லை. இதுதான் எளிய படங்களின் நிலையாயிருக்கிறது இங்கு, என்பது வருந்தச் செய்கிறது!

‘மாயபிம்பம்’ எதைக் குறிக்கிறது? மாயம், ’இல்லாதது இருப்பதாகத் தெரியும் தோற்றம்’-பொய்த் தோற்றம்- illusion! பிம்பம்’, ’ஒருவரைப் பற்றிப் பிறரிடம் ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த எண்ணம்’-படிமம் -Image! ’மாயபிம்பம்’- ஒருவரைப் பற்றிப் பிறரிடம் ஏற்பட்டிருக்கும் பிறழ் எண்ணம் என்பதைக் குறிக்கிறது. தவறான எண்ணமான ‘தோற்றப் பிழை’ மாதிரி இது ’படிமப் பிழை’! ஏன் ’2005 லவ் ஸ்டோரி’ என்று ஒரு குறிப்பிட்ட காலத்தை இதில் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

2005 ஆம் ஆண்டிற்கு என்ன தனித்த விசேடம்? அது, குறிப்பாகக் கூட, மனதிற்குள் வட்டமடிக்க வேண்டிய, அக்காலத்தின் பின்புலத்தை நினைவுபடுத்தவில்லை- இன்றைக்கான/என்றைக்குமான படமாகவேதான் இருக்கிறது. இப்போதுள்ளதுபோல் ஸ்மார்ட் செல்பேசித் தொடர்புகள் இல்லாதிருக்கிறது என்பதைக் காட்டவா? அல்லது. ‘அது ஒரு கனாக் காலம்’ படம் வந்த ஆண்டு என்பதற்காகவா? இசையில் எடுத்தாளும் பாடல் சந்த ஓசைகள் 2005 காலத்தின் படப் பாடல்களாயிருப்பதற்காகவா? அந்தக்கால எல்லைக்குள் மட்டும்தான், இப்படியான காதல் ’படிமப் பிழை’ இளைஞர்களிடம் இருந்ததா? இப்போதும் ஊடகங்கள்/ சமூக ஊடகங்கள், இதையே-பொய்களை ஆற்றி ஊற்றித் தருவதை-தங்கள் வாழ்வியலாகவே ஆக்கி வைத்திருக்கின்றனவே! இது, தீவிரமாக உள்வாங்கப்படாத காலத்தில், தனிநபர்கள்/ நண்பர்கள், அதே காரியத்தைத்தான் செய்து கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுவதற்காகவா, அந்த 2005 ஆம் ஆண்டு என்பது? படத்திலும், உள்ளூரில் ’cable connection’ எனும் ஊடகத் தொடர்பை (தவறை) ஏற்படுத்திக் கொடுக்கும் நபராக, ’மோகன்’ என்கிற கதாபாத்திரம் வருகிறது. ‘ஒலகத்லெயே ரொம்பக் கஷ்டமான விசயமும், ரொம்ப ஈசியான விசயமும், ஃபிகரெ மடிக்கிறதுதான்’ எனும் சமூகத் தத்துவவியல் பாடத்தில் வித்தகர் அவர் என்பதாக அவர் நண்பர்களால் சொல்லப்படுகிறது. அந்த நால்வர் குழுவிலேயே, பொண்ணுங்களெப் பத்தி, பிஎச்டி முடிச்சவராகக் கொண்டாடப்படுபவர் அவராயிருக்கிறார். அந்த முறையியலை, நடை முறையில் நிகழ்த்திக்காட்டி, மற்றைய மூவரையும்-ஜீவா, முரளி, ரமேஷ்-அந்த உலகின் மாய வளையத்திற்குள் ஜொள்ளுவிடப் பண்ணுபவர் அவர். வாயைப் பிளந்தபடிக் கேட்டு, அந்த பிம்பத்தில் வகையாகச் சிக்கிச் சீரழிந்த ஒரு ஜீவாவின் கதை இது!- மாயபிம்பங்களை உருவாக்கி, உலவ விட்டுக் கொண்டிருந்த ஒரு மோகனை, தன் எண்ணங்களை மாற்ற வைத்திருக்கிற கதையும் இது! அதன் பாதிப்பால், பிம்பம் சிதைந்துபோன-தன்னையும் சிதைத்துக்கொண்ட, ஒரு சுமதியின் கதையும்தாம், இந்த மாயபிம்பம்!

ஆண்-பெண் காதல் என்பது, திரையின் முதல் பாதியில், நண்பர்கள் நால்வரின் வயதுக் கோளாறுப் ’பாடம்-படிப்பு’ என்பதாய்க் கல்லூரி ஆண் மாணவர் பார்வையிலிருந்தும், இரண்டாம் பாதி, முதற்பாதிக்கான வயதுக் கோளாறுப் பாடத்திற்கான புதிய பதிலாகப் பெண்களின் பார்வையிலிருந்தும், காதலின் வாழ்க்கைப் பொருள் விளக்கப்ப டுகின்றது. ஒரு பாதி, ஜீவாவின் பார்வையில் நகர்ந்த அந்தக் காதல் கதை, பிற்பாதி, சுமதியின் டைரி மூலம், சுமதியின் பார்வையில் அந்தக் காதல் விளக்கப்பட்டுப் புதிர்கள் விடுவிக்கப்படுகின்றன-உண்மைக் காதலின் துடிப்பும், கண் கட்டுக் குருட்டுத்தனமும், அதுதரும் வலியும், நம்மைப் பயப்படுத்தத் தொடங் குகின்றன.

பள்ளியிலிருந்தே நண்பர்களாய் இருக்கும்-ஜீவா, கதை ஆரம்பிக்கும் 2005 இல், சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் முன்றாமாண்டு மாணவர், ரமேஷ், முரளி இருவரும், கடலூர் கலைக் கல்லூரி மாணவர்கள், மோகன் சொந்தக் கேபிள் டிவி வைத்திருப்பவர்/ அலைபாயும் பெண்களுக்குத் தூண்டில் போடுபவர்!-நால்வர் கூட்டணியினரின், விடுமுறை நாட்களின் வெட்டி அரட்டையிலிருந்து, ’மாயபிம்பம்’ கதை, ஜீவாவின் பார்வையில் தொடங்குகிறது. அவர்களின் அரட்டையில், அரசியலோ, நாடோ, எதிர்காலமோ இடம்பெறுவதில்லை. ‘X’ ரக அரட்டை அது! பெண்களை எப்படி மடக்குவது என்பதற்கான, செய்முறையுடன் கூடிய பாடவகுப்பாய், அவர்களுக்குள் அது விரிகிறது. ரமேஷ், யாரையும் எளிதில் நம்பிவிடாது, ’காதலுக்கு அப்பங்காரங்களும், கள்ளக் காதலுக்கு புருஷங் காரங்களும் விடமாட்டேங்றாங்க’ன்னு, புலம்பிப் பொருமித் தீர்க்கிற ரகம்! முரளி- மோகன்போல் தூண்டில் போடுபவராய் ஆகணும்னு ஆசைப்படுபவர்- கிடைத்ததை அனுபவித்துவிடுகிற ரகம்! காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்- எப்படி இவருக்கும் மருத்துவமனை உதவியாளருக்கும், அவர்களுக்குள், காதல் பசக்கென்று பற்களின் வெண்மையாய் ஒட்டிக்கொள்வதாய்க் காட்டு வது சிறப்பு! கதையே, தனக்காகத் தேர்வுசெய்த முகங்களாயிருக்கின்றன அவை! அவரின் அந்த நீட்டிய பல்லுக்குள் ஒளிந்திருக்கும் பூரிப்பு, அத்தனை அழகு!

அவர்களின் உரையாடலும்கூட, போகிற போக்கில் கடந்து போய்விடுகிற ஒன்றாக இல்லாமல், கேள்வியாய்க் கேட்க வைத்து, அதைக் காட்சியாய் விளக்குகிற விதமாக, படத்தின் போக்கு அமைக்கப்பட்டிருப்பது, ரசிக்கும்படி இருக்கிறது. அதுதான் படம் முழுக்கவும்-முற்பகுதியில் ஜீவாவின் மனசில் தங்கியிருந்த கேள்விகளுக்கான பதிலாகத்தான், பிற்பகுதியில் சுமதியின் வாழ்க்கை, விடை சொல்லப் பார்த்திருக்கிறது. படத்தின் மொத்தப் பாணியுமே, கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களைக் கண்டடைவதாய்த்தான் இருக்கிறது. நண்பர்களின் அரட்டைகளுக்கு அடிநாதமாயிருப்பதும், அந்தக் கேள்வி–விளக்கப் பதில் என்கிற நக்கல் பாணிதான்! இது ரசிக்கும்படிப் புதியதாயிருக்கிறது. கேள்வி-பதில் பாணிக்குள் ஒளிந்துகொண்டே கதையின் விறுவிறுப்பு உள்ளமிழ்ந்து நகர்ந்து, உச்சத்தைத் தொடுகிறது. அப்படிச் செதுக்கியிருக்கிற உங்கள் முயற்சிக்கு, வாழ்த்துகள் சுரேந்திரன்!

எல்லாக் காலத்தும், உடலின் தணிப்பு என்பது, ஆதிக்கக் குண விடலைகள் பலரிடமும் இருந்து கொண்டிருப்பதுதான். இல்லாமலா, ‘நாடகக் காதல்’ எனும் சிந்தனை, இப்பொழுதும், ஆதிக்கச் சாதியினர் தலைக்குள் குடிபுகுந்திருக்கிறது? என்ன ஒன்று, படத்தில், யாரின் சாதியும் குறிப்பாகவும் காட்டப்படவில்லை. ஓடிப்போன ஒரு காதலர் கதை போகிற போக்கில் நம் மண்டைக்குள் கடத்தப் படுகிறது-அவ்வளவே! அதற்குப் பதில், நல்ல குடும்பத்துப் பையன், தூண்டிவிடப்பட்ட ஒரு சூழலால், தவறான எண்ணத்தில் (காதலில், எது சரி, எது தவறு?) விழுவதும், தவறான குடும்ப முத்திரை குத்தப்பட்ட பெண், ’காதல்’ பற்றி உயர் எண்ணம் (காதலில், எது நல்லது, எது கெட்டது?) கொண்டிருப்பதும்-அதனால் வந்துபோன சிக்கலும்தான் கதை! தன் சொந்த அண்ணியைக்கூட, அண்ணி என்று அழைக்க மருகுகிற ஜீவா, காதலை வெறும் உடல் கவர்ச்சி எனும் பிம்பமாய்ப் பார்த்து, அதற்காக விபத்தில் காயம்பட்டு, திட்டம் சமர்ப்பிப்பு என்று பொய்க்குப் பழக்கப்பட்டு, மாயபிம்பத்திற்கு வாக்குப்பட்டு, அதனால், மனது உடைந்து நொறுங்கிக் கிடக்கிற கதையும்! உண்மைக் காதலானது, ’உள்ளத்தைப் புரிதல்’ என்பதைச் சோகத்தில் குழைத்துச் சொல்லப் பார்த்திருக்கிறது ‘மாயபிம்பம்’ படம்!

காதலில் உடலை முன்னிலைப்படுத்தாமல், உள்ளத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிறது மாயபிம்பம்! ’உடல் தேவை’ என்கிற தன் மாயபிம்பம்-கனப்பு உள்ளவரை-அது, வாழ்வின் கூடவே, வரமுடியாதது. ’உள்ளத் தேவை’ என்பதே, அன்பின் பிம்பம்-மனசு உள்ளவரை-அது, வாழ்வின் கூடவே, வரக்கூடியது. அதை, இந்தப் படம், இளசுகளின் பட்டாம்பூச்சியாய், மனசுகளுக்குள், பயப்படுத்திச் சொல்லப் பார்த்திருக்கிறது, படத்தின் தொடக்கம், பின்னோக்கு உத்தியில் கதை நகரப் போகிறது என்கிறதை உணர்த்தும் வகையில், கடலூர் மத்திய சிறைச்சாலை காட்டப்படுகி றது. அதிகாரி வண்டியிலிருந்து இறங்கி, ஒவ்வொரு அசைவிலும், அதிகாரத்தைத் தூள் பரத்தியபடி, கைதிகளுக்கு முடிவெட்டும் இடத்திற்குப் போய் அமர்ந்து, கண்களில் குரூரம் கொப்பளிக்க, பிரியாணி பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிடுவதைப் பார்க்கையில், ஏதோவொன்று அங்கு நிகழப் போகின்றது என்னும் திகில், நம்மைப் பற்றிக் கொள்ளத் தொடங்குகிறது. நம் எதிர்பார்ப்பையும் மீறி, வேறொன்று அங்கு நிகழ, நாம் எதிர்பார்த்தது மாதிரியே இன்னொன்றும் அங்கு நிகழ்கிறது. மூச்சுக் குழாயில், பிரியாணிப் புரையேறி, அதி காரி உயிருக்குப் போராடுகையில், தண்ணீர் எடுக்கப்போன கைதி எண் 501 (இவர் மட்டுமே முகம் தெரிந்தவராய் இருக்கிறார். அவருக்கும் ஒரு கதை இரு ந்து அது காணாமல் போன மாதிரியிருக்கிறது) தண்ணீரைக் கீழே வடிக்க, இன்னொரு கைதி எண் 531, எழுந்து வேகமாக ஓடிவந்து, சவரம் செய்துகொண் டிருப்பவரின் சவரக் கத்தியை வெடுக்கெனப் பிடுங்கி, அந்த அதிகாரியின் கழுத்தில் குத்துகிற வரையும், படம், வித்தியாசமான ஒரு திகில் படத்தைப் பார்க்கிற பிரமையைத் தருகின்ற விறுவிறுப்பில்-இசையும், படத் தொகுப்பும், படமாக்கலும்-நம்மை நிமிர்த்தி உட்கார வைக்கின்றன. யார் அது? எதற்கிந்தக் கொலை? என்று நம் கண்களையும் காதுகளையும் கூர்மைப்படுத்துகையில், ஆம்புலன்ஸ் வண்டியின் அலறலில், மருத்துவமனையில் ஜெயிலர் சந்திரசேகரனுக்குச் சிகிச்சைப் பரபரப்பு நிகழ்கிறது. அங்கேயே, கதையில் ஒரு திருப்பமாக, கதை நாயகப் பாத்திர அறிமுகமும் நிகழ்கிறது-கொலை என்று கருதியிருந்த நிலையில், அது ஒரு மருத்துவச், சிகிச்சைக் கலை என்றும், ஜெயிலரைக் காப்பாற்றியவர், மருத்துவ அறிவைப் பெற்றவர் என்பதும் தெரியவர, அவர்மேலான சித்திரவதை, சிறையில் நிறுத்தப்பட, ’சேது’ பட விக்ரம்போல் அவரைக் கொண்டுவந்து, கொட்டடியில் காவல்துறையினர் போட, இசை, ஒளிப்பதிவு, கலை, மூன்றும் இதமாய்க் கலந்து, கரிக்கோடுகளால் வரையப்பட்டுப் பழமை மாறாதிருக்கும் அந்தச் சிறைச் சுவர்களுக்குள் நம்மைக் கூட்டிச் செல்லுகின்றது-அது, கைதி, ஜீவாவின் கதையாய் விரிகிறது. சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிற மாணவர்! கல்லூரியில் கற்றது சரியாகச் செய்யப்பட்டு, அது, மற்றவர்களால் தவறாகப் புரியப்பட்டு, அடி/ உதை பட்ட வலியைவிடவும், சரியாகச் செய்யவேண்டியதை, மோகனிடம் கற்றுச் செய்ததால் தவறாகி, உண்டாகியிருக்கிற இன்னொரு வலிதான் அவரை இன்னமும் வருத்துவதாய்க் கூறி, அவரின் இன்னொரு வலிக் கீற்றின் கதைக்குரிய அந்த எதிர்பார்ப்பை நம்மிடம் ஏற்படுத்தி விடுகிறார் நெறியாளுநர் ஜெ.எஸ். சுரேந்திரன்-நம்மைக் கதைக்குள் காட்சியாய் ஆர அமர்த்தி, அதுதொடர்பாய் யோசிக்கவும் வழிசொல்லிக் கொடுக்கிறார். சிறப்பு! அவரின் இந்த மருத்துவப் படிப்பு,, இப்படியாக ஓர் உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கிறது போலவே, ஓர் உயிரை அமைதிப்படுத்தவும் உதவியிருக்கிறது என்பதனால் உண்டான வலி தான் அது- அதுதான் ‘மாயபிம்பம்’ சொல்லும் கதை!

அங்கொன்றும் இங்கொன்றுமாக, சிறு நெருடலும் இல்லாமல் இல்லை. படத்தின் கதை நாயகன் ஜீவா, ஏது காரணம்கொண்டு சிறைக் கைதியாக இருக்கிறார் என்பதற்கு, அழுத்தமான காரணம் எதுவும் படத்தில் காட்டப்படுவதில்லை. ’காதல்’ என்பதற்கான மாயபிம்பப் புரிதலிலிருந்து அது திசைமாற்றி, ஒரு குற்றவாளியின் கதைக்குள், நம்மை அழைத்துச் சென்றுவிடும் என்று நம் மையே அதைப் புரிந்துகொள்ள விட்டுவிட்டு நெறியாளுநர் நகர்ந்திருக்கலாம். ஜீவாவே சொல்வதுபோல், சரியாகச் செய்திருக்க வேண்டியதைத் தவறாக செய்துவிட்டதற்காக-அந்த வலிக்காக-தானே ஏற்றுக் கொண்டிருக்கிற தண்ட னையா அது? 2005 என்கிற குறிப்பிட்ட ஆண்டிற்குக் காரணம் காட்டப்படாதது போலவே, கதையின் நாயகி சுமதியைக் ’கருணைக் கொலை’ செய்துவிட்டார் என்பதாய் நாம் புரிந்து கொண்டு, அதற்குரிய தண்டனையை அவராகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? வாயைப் பொத் துவதன் மூலமாகவா? ஒரு நீர்த்துளியுடன் சுமதியின் கண்கள் ஜீவாவைப் பார்த்து நிலைகுத்தி நிற்பதன் வாயிலாகவா? அதற்கும் முன்பே, சுமதி, பாய்க்குள் தான் பிணத்தைப்போல் சுற்றிவைக்கப்பட்டிருக்கிறார். அந்த வீட்டிற்குள்ளே, யாரும்-நாமுமேகூட, பார்த்துப் பயந்துவிடாதிருக்க, சுமதியின் உணர்வற்ற உடல் பாய்க்குள் சுற்றி வைக்கப்பட்டிருப்பதும், அது தெரியாது அங்கேயே அம ர்ந்திருந்து சுமதியின் டைரியை வாசித்து, வாழ்வின் பதில்களை அடைவதும், பின் நம்மைப் போலவே, சுமதியைப் பார்த்து மிரளுவதும் ( ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிச் செய்முறை வகுப்பில் இதே மாதிரியான உணர்வற்ற ஓர் உட லைக் கொண்டு நெறியாளுநர் நமக்கும் வகுப்பெடுத்திருக்கிறார்) எதிர்பாராத அந்தக் காட்சி, பார்ப்பவரை அரள வைத்துவிடுகின்றது. என்னவொரு மிரட்டுகின்ற ஒப்பனை அது! என்னவொரு அழகிய பெண் அவர்!-அவருக்கா அந்த வெள்ளந்தி மனசுக்காரிக்கா இந்தநிலை! மனசு பதைபதைக்கிறது. அந்த வீட் டிற்குள் நாமும் இருப்பதாய்ப் பயம் நம்மைக் கவ்விப் பிடிக்கிறது. இன்னொரு புதிய நல்ல நெறியாளுநர் நமக்குக் கிடைத்திருக்கிறார்- வாழ்த்துகள்!

எட்டு ஆண்டுகளுக்குமுன், இத்தனை இயல்பாக நடித்திருக்கிற நடிக, நடிகை யரைக் கொண்டாடத் தோன்றுகிறது. இன்று அவர்கள் அனைவரின் வாழ்க்கை யும் எப்படி மாறிப் போயிருக்கும்? அவர்கள் யாருமே முகம் தெரிந்தவர்கள் இல்லை; ஆனால் மனதிற்குள் நிறைந்து நிற்கின்றனர். சாப்பாட்டில் திணறடிக்கும் ஜீவாவின் அம்மா, அப்படியே மிடில் கிளாஸ் குடும்ப அம்மா! ’சுக’ரான அப்பாவும், வங்கியில் பணிபுரியும் அண்ணன் சுரேஷும், அண்ணியும், அவர்கள் குழந்தை வர்ஷாவும் கூட-நம் பக்கத்து வீடுகளில் பார்த்திருக்கிற அவர்க ளாகவே தெரிகின்றனர். அத்தனை உரிமை, அத்தனை நட்பு! அத்தனைப் பாந்தம்! எல்லாருக்கும் எல்லார்மீதும் அத்தனை நம்பிக்கை/அத்தனை மரியாதை /அத்தனை அந்நியோன்யம்-அவ்வளவு இயல்பாகக் குடும்பத்தைக் காட்டியிருப்பதற்கு, நம்மை, அவர்கள்மேல் பொறாமைப்பட வைத்திருக்கிற நெறியாளுந ருக்கு, சபாஷ் போடத் தோன்றுகிறது. யாரும் நடிக்கவில்லை., அத்தனை நல்லவர்களாகவே இருக்கின்றனர். இவர்களின் அன்பை, அட்சரசுத்தமாய் நம்மிடம் காட்டப் பிரியப்பட்ட நெறியாளுநர், சுமதியின் அம்மாவை/ அவரின் குடும்ப த்தை, நடத்தையை நம் கண்ணிலேயே காட்டாமல், அதை ஒரு நாடகமாக்கி விடாமல், அந்த மக்களுக்கு, அது சகஜமானதுதான் என்று, சூசகமாகக் காட்டிக் கடக்கும் அழகும் சிறப்பு! எந்தச் சம்பவங்களும், முரண்மோதுகையால் வளர்த் திச் செல்லப்பட்டு, அதை, மனப் போராட்ட நாடகமாக்கிவிடாது, அழகிய பதில்களைக் காட்சிப்படுத்திக் கரும்பின் இனிமையாய்க் கொண்டு சென்றிருக்கிறார் நெறியாளுநர்! ஜீவாவிடம், குடும்பத்திலுள்ளவர்கள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கையில், ஜீவா, தொலைபேசி ஒலியைப் பெருக்கிப் பேசும் பேச்சில், குடும்பம் குதூகலம் அடைவது-பதுங்கிக் கிடந்திருந்த பயம் ஓடி ஒளிய, அம்மா, ஜீவாவின் கன்னத்திலறைந்து உணவு ஊட்டும் இடத்தில், அர்த்தமுள்ள கண்ணீர் நம்மிடமிருந்து அருவியாகக் கொட்டுவதை யாரும் தடு த்துவிட முடியாது. எட்டு/ பத்து ஆண்டுகளுக்குமுன், அந்தக் காட்சி, அத்தனை இயல்பு, என்பது அசாத்தியம்!

சுமதி பாத்திரம், அத்தனை அமைதி, அத்தனை அழகு! அவரின் தோழி ஜோதியும் அத்தனை இயல்பு! சிதம்பரம் பேருந்தில் அமர்ந்திருக்கையில்தான் சுமதி ஜீவாவைப் பார்க்கிறார் என்பது, சுமதியின் டைரியிலிருந்து, அவர் பார்வையிலிருந்து சொல்லப்படும்போதுதான் நமக்கே புரிகிறது. எந்தவொரு காட்சியையும், சும்மாக் கதையை உருட்டுவதற்கென்று எழுதாமல், ஒவ்வொரு காட்சிக் கும் இன்னொரு பார்வைக் கோணம் இருக்கிறது என்பதைக் காட்டும்போது இனிக்கிறது. இரண்டு இடத்திலும் இசை அதற்கான கோர்வையை, அழகுபடுத் திவிடுகின்றது. சுமதிக்கு, ஜீவாமேல் ஈர்ப்பு ஏற்படுகிற இடத்தை, வழிதவறிய பஸ் ஸ்டாண்ட் ராணியின் பிஞ்சுக் குழந்தைக்காய்ப் பிச்சை கேட்கும் சின்ன அக்காக் குழந்தைக்கு, வயிற்றிற்கு உணவு தருகிற ஜீவாவை, கருணையுள்ளத் திற்கான காட்சியாய் நாம் கடந்து சென்றிருக்கையில், அதுதான், சுமதிக்கும் ஜீவாமேல் ஈர்ப்பு வருகிற இடமாகச் சொல்லப்படுகையில், நாமே அதைச் சரியாகப் புரிந்து எடை போடவும் முடிகிறது. காட்சிகள் அப்படிக் கோர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. சுமதி தன் மனதிற்குள் எழும் காதலை, அத்தனை நயமாகப் படைத்துக் காட்டியிருக்கிறார். சுமதியுடன் ஆட்டோவில் அருகமர்ந்து கல்லூரிக்கு வருகையில், ஜீவா எதிர்கொள்ளும் முதல் செய்முறை வகுப்பு, ’சுய நினைவின்றி உணர்ச்சியற்ற நிலை’ (GCS-Gastro Coma Stage)) பற்றிய பாடம்! அதற்குக் கிடத்தப்பட்டிருக்கும் சோதனை உடல், அது பற்றிய மருத்துவ அறிவு, அங்கு, ஜீவாவிற்கு/மாணவர்களுக்குச் சொல்வதுபோல் நமக்குள் ஏற்றப்படுகிறது. அதுவே, படத்தின் உச்சக்கட்டத்தில், ஜீவாவை உருக்குலைய வைக்கிறது-நம்மையும்தான்!

பேரா மு. ராமசுவாமி

ஜீவா இருக்கும் சிறைக் கொட்டடி மூன்று இடங்களில் காட்டப்படுகிறது. சுவர்களில் மங்கியும் மங்காதுமிருக்கிற கரிக்கோட்டு ஓவியங்கள், அதுவே, மாயபிம்பக் கதையின் மனப் பிம்பமாய், நம்முடன் கதையைத் தேட ஆரம்பித்து விடுகின்றது. இடைவேளையிலும் மீண்டும் அதே சிறைக் கொட்டடி-அதே சுவர்கள் -கதையை நீட்டித்துக்காட்டும் கரிக்கோட்டு ஓவியங்களின் தேய்ந்துபோன பக்கங்கள்! இறுதியிலும் அதே சிறை கொட்டடி- அதே சுவர்கள்-கரிக்கோட்டு ஓவியமாய்க் கதையின் முடிவை-சுமதியின் காதலை ’ஐ லவ் யு’ என்று சொல்லும் பேசும் கைக்கடிகாரம்- ஜீவாவிற்காய் சுமதி வாங்கி ஜீவாவிடம் கொடுக் கப்படாதிருந்து, இறுதியில் சுமதியின் குரலாய் ஜீவாவைக் கலங்க வைக்கும்-காதலைப் புரிய வைக்கும்- அதே கடிகாரம் ஓவியமாய் ஜீவாவின் தலைமாட்டுச் சுவரில்! நண்பர்களின் அரட்டையில் சிலிர்க்கும் ஆணின் பிம்பத்தைப் போல், சுமதியின் டைரியில் சிறக்கும் பெண்னின் பிம்பத்தைப்போல், இந்தக் கரிக் கிறுக்கல்கள் மொத்தக் கதையையுமே ‘மாயபிம்ப’மாய் பேசியிருக்கின்றன- தொழில்நுணுக்கக் குழுவினருக்குப் பாராட்டுகள்!

இசை-நந்தா என்று திரையில் பார்த்திருந்ததாய் நினைவு. பார்ப்பவர் மனசை படத்தின் நகர்வுக்குள் அத்தனைக் கச்சிதமாக மேயவிடுபவராயிருக்கிறார். பாடல்களும், கேட்பதற்கு இனிமையாய் அர்த்தம் பொதிந்து இருந்தன. படத்தின் மன உணர்வோடு பயணிப்பதற்குத் தூண்டுவினையாக இசையும் பாடலுமமைந்து, படத்தின் கருத்தை அழகு செய்திருக்கின்றன. வணிக சினிமாவாய்ச் சிந்திக்காமல் நல்ல படங்களை உருவாக்கும் இதுமாதிரிப் புதியவர்களைக் கரம் கொடுத்து வாழ்த்த வேண்டும். அவர்களின் முயற்சிகளை வணிக ரீதியில் வெற்றி பெறச் செய்கையில், தமிழ்த் திரைப்படத்தின் பெருமை பேசப்படும், உலகத் தமிழர்களால்! அந்த இளைஞர்கள் இன்னும் தீர்க்கமுடன் நல்ல படங்களையே தர முனைவார்கள் என்று நம்பலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram