சினிமா

’மொத ராத்திரி’ படத்தை கடைசி ராத்திரியில் பாராட்டிய கமல்!

Staff Writer

‘கடைசியா முகம் பாக்குறவங்க பாத்துக்கங்க’ கதையாக தியேட்டர் ஓட்டம் முடிந்து ஓ.டி.டி. தளத்துக்கு வந்துவிட்ட ‘மொத ராத்திரி’ படத்தை, அதன் இறுதி ராத்திரியில் பாராட்டிப் பதிவிட்டுள்ளார் கமல்.

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அஸ்மிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த படம் ‘மொத ராத்திரி’. விமர்சகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட இப்படம் தியேட்டர்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறமுடியாமல் தட்டுத்தடுமாறி ஓரளவு வசூல் செய்தது.

வழக்கமாக சிறு பட்ஜெட் படம் ஒன்று நன்றாக இருக்கும் பட்சத்தில் பிரபல கலைஞர்கள் தங்கள் பாராட்டுப் பத்திரங்களை வாசித்து அப்படத்தின் விளம்பரத்துக்கு உதவுவார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ ‘மொதராத்திரி’ படத்தை முன்மொழிய பெரும்பாலானோர் யாரும் முன்வரவில்லை.

போனாப் போகட்டும் என்று படம் ரிலீஸான மூன்றாவது வாரத்தில் நடிகர் தனுஷ் பாராட்டி வைக்க, தற்போது நான்காவது வாரத்தில், அதாவது படம் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸான அன்று கமல் இயக்குநர் ராஜா கருப்பசாமியை நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார்.

அச்சந்திப்பு குறித்து நெகிழ்ந்த ராஜா கருப்பசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “கோடம்பாக்கத்துல இருக்குற எல்லாருக்கும் காட்டணும்… நீங்க யாருனு...’ உங்கள் சினிமாவைப் பற்றிப் பேசாமலோ, உங்கள் படங்களைப் பார்க்காமலோ, உங்கள் கதாபாத்திரங்களைப் பற்றி விவாதிக்காமலோ அல்லது நீங்கள் கதையைச் சொல்லும் விதத்திலிருந்து எதையாவது கற்றுக்கொள்ளாமலோ என் வாழ்க்கையில் ஒரு நாள் கூட கழிந்ததில்லை.

என்னைப் பொறுத்தவரை, நீங்கள் வெறும் ஒரு நடிகர் மட்டுமல்ல, சினிமாப் பள்ளிக்கூடம். ஒரு நடிகர் எப்படித் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிட முடியும் என்பதையும், ஒரு திரைப்படத் இயக்குநர் எப்படிச் சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும் என்பதையும் உங்கள் படங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தன. அதேபோல, சினிமா எப்படி நம்மை மகிழ்விக்கவும், சிந்திக்கத் தூண்டவும், சிரிக்கவும், அழவும் வைக்க முடியும் என்பதையும், திரையில் படம் முடிந்த பிறகும் அது எப்படி நம்முடனேயே தொடர்ந்து பயணிக்கிறது என்பதையும் உங்கள் படங்கள் உணர்த்தின.

சினிமாவை முழுமையாகப் புரிந்துகொண்டதாக நான் நினைக்கும் போதெல்லாம், உங்கள் படங்களில் ஏதேனும் ஒன்று, இன்னும் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியது.

திரையில் உங்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகனாக இருந்து, இன்று சொந்தமாகப் படங்கள் இயக்கும் ஒருவனாக மாறியிருக்கும் இந்த நீண்ட பயணத்தில், உங்கள் சினிமா எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது.

உங்கள் சினிமா எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், உங்கள் படங்கள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வில் ஒரு சிறு பகுதியையாவது மற்றவர்களுக்குக் கடத்தும் வகையிலான ஒரு படத்தை நான் என்றாவது ஒரு நாள் இயக்கினால், நான் மிகவும் பாக்கியசாலி என்று கருதுவேன். கமல் சார், இந்தச் சிறந்த சினிமாவுக்காக உங்களுக்கு நன்றி. அந்தத் துணிச்சலுக்காக நன்றி.

நீங்கள் கற்றுக்கொடுத்த பாடங்களுக்காக நன்றி. அனைத்திற்கும் மேலாக, என்னைப் போன்ற தலைமுறையினரை சினிமாவின் மீது தீராத காதலைக் கொள்ளச் செய்தமைக்கு நன்றி. என்றும் உங்கள் ரசிகன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவுல ஒரு நல்ல படம் ரிலீஸானா மறுநாளே மொத்தப் படக்குழுவையும் வரவழைச்சி முத்தம் கொடுக்கிற ஆண்டவரே… இவ்வளவு நன்றி உணர்வு கொண்ட ராஜா கருப்பசாமி மாதிரியான ரசிகனை, அவரோட நல்ல படைப்பை, ஒரு மாசம் முந்தியே ஆதரிச்சிருக்கணும் ஆண்டவரே!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram