350ரூ மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்களின் கனிவான கனிவான கவனத்திற்கு…
விஜய் அரசியல் களத்தில் புகுந்து புயலைக் கிளப்பியிருப்பதோடு மட்டுமின்றி, தவெக அமைச்சரவை அக்னி நட்சத்திரப் பட்டியலும் தயாராகிக் கொண்டிருப்பதால் மார்ச், ஏப்ரல்களில் சினிமாத்துறையை அநியாயத்துக்கு மந்தமாகிவிட்டது.
ஆனால் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் பஞ்சாயத்து மட்டும் ஏனோ முடிவுக்கு வருவதாகவே இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் காலாவதியாகிவிட்டதால் மே முதல் வாரத்தில் படம் நிச்சயம் ரிலீஸாகிவிடும் என்கிற தகவலும் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. சென்சார் சார்கள் புதுசுபுதுசாய் விதிகள் கண்டுபிடித்து கட்டையப் போடுவது ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்க, தற்போது மே ரிலீஸுக்கு திரைத்துறைக்கு உள்ளேயே சில அன்பான எதிர்ப்புகள்.
ஜனநாயகன் ரிலீஸுக்கு வழிவிட்டு சிலகாலம் காத்திருந்த தனுஷின் ‘கர’ ஏப்ரல் 30 அன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் அப்படத்தின் மேல் கணிசமாக முதலீடு செய்துவிட்டனர். இந்நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸானால் அது மேற்படி அத்தனை பேருக்கும் பெரும் இழப்பை உண்டாக்கும் என்பது முதல் எதிர்ப்பு. அடுத்த படம் சூர்யாவின் ‘கருப்பு’. இப்படமும் மே 7 ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. இதுவும் பல்வேறு உள்நாட்டுக் குழப்பங்களால் 6 மாதகாலமாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் படம். மட்டுமன்றி 100 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டிருக்கும் படமும் கூட. எனவே இப்படமும் ஜனநாயகன் ரிலீஸை அட்லீஸ்ட் மேலும் இரு வாரங்களாவது தள்ளிவைக்கக் கோருகிறது. இந்த கோரிக்கையானது இவ்விரு படங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமன்றி திரைத்துறையைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஸோ… இப்பிரச்னைக்கான தீர்வு புதிய முதல்வரின் கையில் இருக்கிறது. முதல்வர் அய்யாவுக்கு முதல் கையெழுத்தே இவ்வளவு பெரிய தர்ம சங்கடத்தையா கொண்டுவரவேண்டும் ?
புதிய அரசு அமைவதற்கு சில வாரங்கள் முன்னதாகவே, 200 ரூபாய்க்கு ஒரு மலர்க்கொத்து ஆர்டர் கொடுத்துவிட்டு 100 பிரச்னைகள் கொண்ட மனுக்களோடு திரைத்துறையினர் வெயிட்டிங்கில் இருப்பது பிளாக் அன்ட் வொயிட் காலம் தொட்டு சம்பிரதாயம்.
அதன் தொடர்ச்சியாக கோமாவில் இருக்கும் பத்தாண்டுகால படங்களுக்கான அரசு மான்யம் உடனே செட்டில் செய்யப்படவேண்டும் என்பது தொடங்கி பல பஞ்சாயத்துகளை புதிய அரசு செட்டில் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.
அதில் முக்கியமான, ஆனால், அண்ணன் சீமான் மட்டுமல்ல, கடவுளே முதல்வரானாலும் தீர்த்துவைக்க முடியாத இரு பஞ்சாயத்துகள்.
1. ஓ.டி.டி தளங்களுக்கு படங்களை எத்தனை வாரங்களுக்குப் பின்னர்தான் கொடுக்கலாம் என்பதை விநியோகஸ்தர்களோ திரையரங்க உரிமையாளர்களோ நிர்பந்தம் செய்யக்கூடாது என்பது.
2. ஆந்திராவில் நடிகர்கள் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுகிறார்கள். தமிழ் சினிமாவிலோ தயாரிப்பாளர் இனம் மெல்ல அழிந்து வருகிறது. எனவே இனி நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் கேட்காமல் படத்தின் பங்குதாரராக இருந்து வருமானத்தில் மட்டுமே ஷேர் கேட்க வேண்டும் என்பது அடுத்த வேண்டுகோள். இது மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் நடிகர்களுக்கானது. இதற்கு நடிகர் சங்கம் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் அதைத் தொடர்ந்து நிரந்தர படப்பிடிப்பு நிறுத்தமும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவும் பாகவதர் காலத்திலிருந்து பல ஆல மரத்தடிகளில் பேசி முடிவுக்கு வர முடியாத பஞ்சாயத்து மைலார்ட்.
அரசியலில் கமல் செய்கிற காமெடிகளுக்கு முன்னால் அவரது மைக்கேல் மதன காம ராஜ காமெடிகளெல்லாம் கால்தூசு பெறாதவை. சட்டசபை தேர்தலில் தனது கட்சிக்கு சிங்கிள் சீட் கூட வாங்காமல் திமுகவுக்கு சிங்கி அடித்த சோகம் ஒருபுறம் இருக்க, அவரது ராஜ்கமல் நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த ‘சேயோன்’ படம் நடப்பது டவுட் அல்லது அவுட் என்கிறார்கள்.
‘தாய்க்கிழவி’ என்கிற தரமான ஹிட் கொடுத்த சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக பிப்ரவரி மாதம் முதல் பார்வையுடன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். அப்படத்தின் வியாபாரத்தை ஊதிப்பெருக்கும் பேராசையுடன் கமலும் அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக வதந்திகளும், நிறுவனத்தின் விருப்பத்துடன் பரப்பப்பட்டன.
முதலில் மார்ச்சில் படப்பிடிப்பு என்று சொல்லப்பட்டு, அது பின்னர் தேர்தலைக் காரணம் காட்டி ஏப்ரல் இறுதிக்குத் தள்ளப்பட்டு, இப்போது இறுதியாக மே அல்லது ஜூன் என்கிறார்கள்.
ஆனால் நிஜநிலவரம் கொஞ்சம் கலவரமானது. ‘அமரன்’ வெற்றிக்குப் பின்னர், படத்துக்கு சுமார் 50 கோடி வரை வாங்குகிற சிவகார்த்திகேயன் கமல் தன்னை சில மாதங்கள் காக்க வைப்பதில் அப்செட் ஆகிவிட்டாராம். கமலிடம் முன்பணம் எதுவும் வாங்கியிராத நிலையில், யாராவது நல்ல மத்தியஸ்தர் மூலம் படத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
இதே வகையறா சிக்கலில் இருந்த வெற்றிமாறன், சிம்பு கூட்டணியின் ‘அரசன்’ பட விவகாரத்தில் அப்படக் காட்சிகளை மிஞ்சிய ஒரு பகீர் ட்விஸ்ட்.
சிம்பு படப்பிடிப்புக்கு தொடர்ந்து தனது ஸ்டைலில் டிமிக்கி கொடுத்ததால் கடுப்பான வெற்றி அப்படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு திடீரென கென் கருணாஸை வைத்து புதிய படம் தொடங்கினார் அல்லவா?
தற்போது இப்படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு பழையபடி அப்படத்தை தொடங்கிவிட்டார். ஆனால் இப்படங்களில் எப்படத்தை முதலில் முடிப்பார் என்பது வெற்றிமாறன், கென் கருணாஸ், சிம்பு, தயாரிப்பாளர் தாணு உட்பட யாருக்குமே தெரியாதாம்.
எதிர்பாராத தோல்வி எவ்வளவோ உயரத்தில் இருக்கிற மனிதர்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் நடிகை நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன்.
இவரது இயக்கத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு ரிலீஸான ‘எல்.ஐ.கே’ படம் தோல்வி. தயாரிப்பில் கணவனும் மனைவியும் பங்குதாரர்கள் என்பதால், இவர்களுக்கு கணிசமான இழப்பு. மட்டுமின்றி படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுக்கு சம்பளமாக நயாபைசா தேறவில்லை.
இதை தனது மேடைப்பேச்சு ஒன்றில் சூசகமாக குறிப்பிட்ட வி.சி, ‘எனது வாழ்க்கையில் 350 கோடி ரூபாய் சம்பாதிக்கவேண்டும் என்று ஒரு நிதி இலக்கு வைத்திருக்கிறேன். அதை வங்கியில் டெபாசிட் செய்து, அந்த வட்டியை மட்டும் வைத்து ஹாய்யாக வாழ்ந்துவிடவேண்டும்’ என்று தனது ஏழ்மையான, ஒரு குட்டி ஆசையை வெளியிட்டிருக்கிறார்.
இந்த குட்டி வட்டி ஆசையை நம்ம ஆட்கள் சும்மா விடுவர்களா ? …விக்னேஷ் சிவனின் இந்தத் திட்டம் நமக்கு ஒரு முக்கியமான நிதிப் பாடத்தை கற்பிக்கிறது… என்று முதலீட்டாளர்களுக்கு கிளாஸ் எடுக்கும் அளவுக்குப் போய்விட்டனர்! கணக்கில் வெறும் 350 மினிமம் பேலன்ஸ் வைத்து வாழ்ந்துவரும் நமக்கு இதில் ஒரு செய்தி இருக்கிறது. முடிந்தால் கண்டுபிடியுங்கள்.