வேறு எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பிக்பாஸ் தமிழின் ஒன்பதாவது சீசனை சுற்றி சர்ச்சைகள் சுழன்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் தமிழின் ஒன்பதாவது சீசன் தொடங்கி பத்து நாட்களே ஆகியிருக்கிறது. ஆனால், முந்தைய எட்டு சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் மீது அதிக விமர்சனங்களும் சர்ச்சைகளும் சுற்றி வருகிறது. முதல் நாளில் போட்டியாளர்களை அறிமுகம் செய்தபோதே அதிகம் சமூகவலைதள இன்ஃபுளூயன்சர்கள் அதிகம் இருக்கிறார்கள் குறிப்பாக, இதில் பலரும் நெகட்டிவ் பப்ளிசிட்டியால் பெயர் வாங்கியவர்கள் என்ற விமர்சனம் எழுந்தது. இதனாலேயே, பிக்பாஸின் ஒன்பதாவது சீசனை பார்க்காமல் தவிர்க்கிறோம் என பலரும் பதிவிட்டனர். அதற்கேற்றாற்போலவே, சீசன் ஆரம்பித்த பத்து நாட்களிலேயே துஷார்- அரோரா, எஃப்ஜே- ஆதிரை, கம்ருதீன்- பார்வதி என காதல் ஜோடிகள் உருவாகி இருக்கிறது.
இந்தி பிக்பாஸை போலவே துஷார்- அரோரா, எஃப்ஜே- ஆதிரை இடையேயான ஊடல்களும் சில சமயங்களில் நடக்கும் அத்துமீறல்களும் பிக்பாஸ் தமிழ் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்திருக்கின்றன. இதுமட்டுமல்லாது, பொம்மை டாஸ்க்கில் எஃப்ஜே- விடம் விஜே பார்வதி அத்துமீறி நடந்து கொண்டதும் அதைப்பற்றி ஆதிரை எஃப்ஜே-விடம் கேட்டபோது அதற்கு ஏடாகூடமாக எஃப்ஜே சொன்ன பதிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழில் மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை விட பிக்பாஸூக்கு அதிக ஆடியன்ஸ் இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகளும் இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, போட்டியாளர்களின் அத்துமீறல்களும் ஆபாச பேச்சுகளும் அருவருக்கத்தக்கதாக இருப்பதாகவும் இதை தொகுப்பாளர் விஜய்சேதுபதி நிச்சயம் கண்டிக்க வேண்டும் என இணையவாசிகள் சொல்லி வருகின்றனர். இந்தி பிக்பாஸில் கண்டெண்டுக்காக போட்டியாளர்களுக்கு மத்தியிலான அத்துமீறல்களும் ஆபாசங்களையும் சகஜமாக போட்டுக் காட்டுகிறார்கள் என்பதை போல தமிழ் பிக்பாஸூம் ஆகிவிடக்கூடாது என்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பிக்பாஸ் தமிழ் இளைய தலைமுறையினரை சீரழிப்பதாகவும் கன்னட பிக்பாஸூக்கு தடை விதித்ததுபோல தமிழ் பிக்பாஸூக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் 'ஒழுக்கம் என்பதே இந்த சீசனில் யாரிடமும் இல்லை' என போட்டியாளர்களை கடுமையாக திட்டிய பிக்பாஸ், வீட்டு கேப்டனான துஷாரே பல விதிமுறைகளை மீறி இருக்கிறார் எனச் சொல்லி அவரின் கேப்டன் பதவியையும் பிடுங்கி இருக்கிறார்.
சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் வியாபார நோக்கத்திற்காகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தாலும் பொதுவெளியில் பல்லாயிரக்காணக்கான கண்கள் நம் மீது இருக்கும்போது தனிமனித தாக்குதலும் எல்லை மீறும் ஆபாசமும் கண்டிக்க வேண்டியதாகவே இருக்கிறது. சுயஒழுக்கத்தோடும் நிகழ்ச்சிக்கு வந்த நோக்கம் உணர்ந்தும் விளையாடி ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். இந்த சீசனில் எழுந்திருக்கும் சர்ச்சைகளை தொகுப்பாளராக விஜய்சேதுபதி வரும் நாட்களில் கவனத்துடன் கையாண்டு போட்டியாளர்களை கண்டிப்பாரா என்பதை பார்க்கலாம்.