சினிமா

ப்ளீஸ்... நோ ரீ ரிலீஸ்!

மிஸ்டர் முள்

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்… ஒரு பொன்மாலைப் பொழுதில் அந்த வாரம் ரீ ரிலீஸ் ஆவதாக இருந்த ‘சங்கராபரணம்’ படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு அழைப்பு. படம் பார்த்து அடைந்த பரவசத்தைப் பகிர வார்த்தைகள் இல்லை.

இப்படம் குறித்து பேசும்போதெல்லாம் 'என் வாழ்நாளில் நான் பாடி புண்ணியம் கட்டிக்கொண்ட படங்களின் பட்டியலில் முதன்மையான படம் என்று ‘சங்கராபரணம்' படத்தையே சொல்வேன்' என்பார் எஸ்.பி.பி. எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
இயக்குநர் கே,விஸ்வநாத்தை மறுபடியும் மனசுக்குள் வணங்கிவிட்டு படம் முடிந்ததும், இதனை தமிழில் வெளியிட்ட திரு.ரத்னம் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினேன். டெல்லியில், ஜனாதிபதி விருதுக்கு அனுப்பப்பட்டு, மறந்துபோன ஒரே ஒரு பிரிண்டை தேடிக் கண்டுபிடித்து, 'சங்கராபரணம்' எனும் பொக்கிஷத்தை மீண்டும் கண்டெடுத்த அனுபவத்தை சிலிர்ப்புடன் சொன்னார்.
 “நீங்க எவ்வளவு செலவு பண்ணி இதை  ரீ ரிலீஸ் பண்றீங்கன்னு தெரியாது. அந்தப் பணத்தின் சிறு பகுதி கூட திரும்ப உங்களுக்கு வராமலே போகலாம். ஆனா என்னைப் போல சில ஆயிரம் பேர்களாவது உங்கள இருந்த இடத்துலருந்தே மனசார வாழ்த்துவாங்க சார்,’’  என்றேன்.
ரீ ரிலீஸ் தயாரிப்பாளர் பதிலுக்குப் புன்னகைத்தார். ‘அது போதும் சார். வேறென்ன வேணும்?' என்று அவர் சொன்னதாக அந்த புன்னகையை எடுத்துக்கொண்டேன்.

அதற்கும் முன்  மதுரை அமெரிக்கன் கல்லூரி படிப்பின்போது, ’66 ல் ரிலீஸான எம்.ஜி,.ஆரின் ‘அன்பே வா’ படத்தை 84ம் ஆண்டு மதுரை சரஸ்வதி தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்தபோது பார்த்தது ஞாபகம் வருகிறது.  கதையில் வில்லன்களே இல்லாத ஒரே எம்ஜியார் படம். அது 4 காட்சிகளாக, பெரும்பாலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
இப்படி படங்களின் ரீ ரிலீஸ் என்பது எப்போதாவது நிகழும் அபூர்வ நிகழ்வுகளாக இருந்தன. ஆனால் கடந்த ஒரு வருட காலமாக எதுவோ பல குட்டிகள் போட்டது போல் வாராவாரம் ரீ ரிலீஸ்கள் கியூகட்டி நிற்கின்றன. அது எந்த அளவுக்கு என்றால் புக் மை ஷோ தள டேக் லைனில் தமிழ், மலையாள, தெலுங்கு, ஆங்கிலப் படங்கள் வரிசையில் ரீ ரிலீஸ் படங்களுக்கும் ஒரு அட்டவணை தரும் அளவுக்கு. அதில் சில வாரங்களில் நேரடி ரிலீஸ்களை விட ரீ ரிலீஸ்கள் அதிகமாகிவரும் ஆபத்தும் நிகழத் தொடங்கியுள்ளதுதான் பெருந்துயரம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் 300 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த வருட ரிலீஸ் லிஸ்டில் சுமார் 40 படங்கள் ரீ ரிலீஸ் ஆகியிருக்கின்றன. இவற்றில் வசூல் ரீதியாக தப்பிய இரு படங்கள் விஜய்யின் கில்லியும், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரனும்தான். தோல்வியடைந்த படங்களில் ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’ போன்ற சாதனை படைத்த படங்களும் அடக்கம். முதல் ரிலீஸில் பிரமிப்பை ஏற்படுத்திய பிரமாண்ட வெற்றிப்படமான கமல், மணிரத்னம் காம்போவின் ‘நாயகன்’ கூட இந்தப் படுதோல்வியிலிருந்து தப்பவில்லை.

நாயகன் ரீ ரிலீஸில் பயங்கர கல்லா கட்டும். அதற்கு டிக்கெட் கிடைக்காத கூட்டம் கமலின் இந்தப் படங்களுக்கு வரட்டும் என்கிற ஓவர் மிதப்பில் அதே நாளில் ‘விக்ரம்’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்கள் ரிலீஸாகி, வந்த சுவடு தெரியாமல் போன காமெடிகள் கூட நடந்தது. போதாக்குறைக்கு தேவர் மகனும் மீசையை முறுக்கியபடி ரீ ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். என்ன நடந்தாலும் அஞ்சேன் என்றபடி லிங்குசாமியும் இவ்வாரம் களம் இறங்கி கலங்கி நிற்கிறார். சில அஜித் படங்களையும் 4கே ஃபார்மேட்டுக்கு தூசு தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ரீ ரிலீஸர்களின் உளவியல் சிக்கலை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படி ரிலீஸ் செய்கிறவர்களில் பெரும்பாலானோர் தற்சமயம் லைம்லைட்டில் இல்லாதவர்கள். எளிய தமிழில் சொல்வதானால் வாழ்ந்துகெட்ட ஜமீன்தார்கள். ஏதாவது ஒரு அதிசயம் அல்லது ட்ரெண்டிங் நடந்து நடப்பு ஜெனரேசனுக்குள் நாமும் இணைந்துவிடமாட்டோமா என்கிற பரிதவிப்பு இவர்களிடம் குவிந்து கிடக்கிறது.

மக்கள் தங்கள்  ‘கம்பேக்’கிற்காகவே காத்திருப்பதுபோல் பகல் கனவு காண்கிறார்கள். சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது என்பது தெரியாதவர்கள் போல் 4கே ரெஷல்யூஷன், 5டி அட்மாஸ் சவுண்ட், 6டி டெக்னாலஜி என்று அடித்துவிடுவது இன்னொரு துயரம்.

முன்பெல்லாம் ரீ ரிலீஸ் என்பது தொடக்கத்தில் சொன்ன ‘அன்பே வா’, ‘சங்கராபரணம்’ போல் காவிய நிகழ்வாய் இருந்தன. திரைப்பட ரிலீஸ்கள் என்பதே முதல் ரவுண்டில் சொற்ப தியேட்டர்கள், அடுத்த சில வாரங்களில் சிறு நகரங்களில் செகண்ட் ரன்னிங், இன்னும் அடுத்தடுத்த சுற்றுகளில் டெண்டு கொட்டாய்களுக்கு ஷிஃப்டிங்  என்று வெகு சுவாரசியமாய் இருந்தன.  பாவலர் பிரதர்ஸ் தயாரிப்பின் ‘அலைகள் ஓய்வதில்லை’ ராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரத்தின் பக்கத்து ஊர் டெண்டுகொட்டாய்க்கு ‘பொட்டி வந்துருச்சிடோய்’ என்று வருவதற்கே 50 நாள்களுக்கும் மேல் ஆகிவிடும்.

இன்றோ, அல்ட்ரா மாடர்ன் ஜென் கிட்ஸ் தொடங்கி, அத்துவான மலைகிராமத்தில் ஆடுமேய்க்கும் மாடசாமி  வரை பட ரிலீசுக்கு சில மணி நேரங்கள் முன்பே டமில் ராட்சஸர் மூலம் டவுன்லோடி அத்தனை ரிலீஸ் படங்களையும் பார்த்துவிடுகிறார்கள். இதனால் பெரும்பாலான படங்கள், குறிப்பாக சிறிய பட்ஜெட் படங்கள் துக்கப்பட்டு, தியேட்டரை விட்டு படம் ரிலீஸான அன்றே தூக்கப்பட்டு பெரும் நஷ்டப்பட்டு நிற்கின்றன.

ஸோ.. வாழ்ந்துகெட்ட ஜமீன்தார்களே... வாழ்ந்தகாலத்தில் நல்லாதானே வாழ்ந்தீங்க... அதனால ‘கம்பேக்’ கொடுக்கிறோம்ங்கிற பேர்ல, சகட்டுமேனிக்கு படங்களை ரீ ரிலீஸ் பண்ணி, ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழ் சினிமாவோட குரல்வளையில மிதிக்காதீங்க.
இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப்
போயிடுங்க.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram