‘சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்’/ ‘சிறைநலனும் சீரும் இலர் எனினும்’ எனுமிடங்களில், வள்ளுவர், ’அரண்’ எனும் பொருளையே ‘சிறை’ என்பதற்குத் தருகிறார்.
’சிறகு, பக்கம், அழகு, கட்டுப் பாடு, அடிமை, தடை, நீர்க்கரை, வேலி, சிறைச்சாலை ஆகிய இன்னபிற பொருட்களும் அதற்கு உண்டு என்பதாய்த் தமிழ் அகராதிகள் குறிப்பிடுகின்றன. மக்கள் வழக்கத்தில், தண்டனை பெற்ற குற்றவாளியை, அல்லது குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்குக் காத்திருப்பவரைக் காவலில் அடைத்து வைக்க, அரசால் அமைக்கப்பட்ட கட்டடம் (Prison), அந்தக் கட்டடத்தில் உள்ள அறை (jail or cell) ஆகியவற்றைக் குறிக்கக்கூடியதாக ‘சிறை’ இருக்கிறது. புழக்கத்தில், ’காவலுக்கு உள்ளாக்கப்பட்ட நபரை வைத்திருக்கும் இடம், அல்லது அடைத்து வைக்கப்பட்டிருக்கிற நபர் இருக்கும் இடம்’ என்பதையே ’சிறை’ குறிக்கிறது. வெளியேற முடியாமல், அடைக்கப்பட்டு /அடைபட்டுக் கிடப்பதுதான் ‘சிறை’! ஆனால், இங்குச் ’சிறை’ என்பதற்குள்ளே நடக்கின்ற சம்பவங்கள் பேசப்ப டவில்லை. சிறைக்கு வெளியே விசாரணைக்குக் கொண்டு செல்லப்படும் விசாரணைக் கைதிக்கும், விசாரணைக்கு அழைத்துச் செல்லும் ஆயுதப்படைக் காவலர்களைக் கொண்டும் பின்னப்பட்டிருக்கிற ஒரு கதை!
இதே பெயரில், 1984 இல் ராஜேஷ் (அந்தோனி)/ லட்சுமி (பாகி என்கிற பாகீரதி) நடிப்பில் ஆனந்தி பிலிம்ஸின் வெளியீடான ஆர்.சி. சக்தியின் ‘சிறை’ என்றொரு படம் வந்திருந்தது. அக்கிகாரத்துப் பெண்ணாக லட்சுமி அந்தக் கதாபாத்திரத்தை அற்புதமாக்கியிருப்பார். அப் பொழுது, வெளிவந்திருந்த ஒரு தட்டச்சு இதழில், அதற்கு நான் விமர்சனம் எழுதியிருந்ததாகக்கூட நினைவு! அதில் வருகின்ற, ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன், உன் பக்கத்துணை இருப்பேன்’, என் ஜென்மம் இருக்கும்வரை, என் ஜீவன் பார்க்கும்உனை’ என்கிற பாடல் இன்னமும் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டுதானிருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் எழுத்துப் போடப்படுகையில், ஆர். சி. சக்தி, படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம், தன் படத்தின் (சிறை) இசை எப்படியிருக்க வேண்டுமென்று கேட்பதாக, உரையாடல் ஒன்று வரும்:-
’எம்எஸ்வி சார்! ’சிறை’ங்ற டைட்டில், அதிலிருக்ற அந்தத் தனிமை, துயரம் கரெக்டா வெளிப்படணும் சார்’ என்பார். எம்எஸ் வி அதற்கான தலைப்பு இசையை வழங்குவார். அதுபோல், இந்தச் ‘சிறை’யிலும், ’வெளியெபோய் அந்தப் புள்ளெகூட வாழணும் அய்யா’ என்கிற காதலனின் ’தனிமைத் துய’ரிலிருந்தும், ’எங்கேயாவது வெளியே ஓடிப்போய் வாழலாம்’ என்கிற காதலியின் ‘தனிமைத் துய’ரிலிருந்தும், வெளியே றும் வழியின்றிக் கிடப்பதன், பருண்மை வடிவம்தான் ‘சிறை’ என்பதை, ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் கதை சொல்லியிருக்கிற விதமும், இருவழிகளில் நம்மை வழிநடத்துகிறது.
ஒன்று, பருண்மையாகக் காட்டப்பட்டிராத, வெளியேற முடியாக் காவல் அதிகாரக் கண்காணிப்பின் கீழிருக்கும் ’சிறை’; மற்றொன்று, சாதி, மத அகங்காரக் கூண்டில் அடைபட்டு, வெளியேற முடியாது கிடக்கும் குடும்பச் ’சிறை’!
இன்று, 41 ஆண்டுகளுக்குப் பின், நிகழ்காலத்தில் அப்துல் ரவூப்-கலையரசி இருவரின் தனிமைத் துயரங்கள், எப்படிக் ’கதிரவன்’ (கதிர்) என்கிற ஆயுதப் படைக்காவல் ஏட்டுவினால் விடுவிக்கப் படுகின்றன என்பதைக் கச்சிதமான விவரணங்களுடன், கவிதையாகச் சொல்லப் பார்த்திருக்கிறது சுரேஷ் ராஜகுமாரியின் ‘சிறை’ திரைப்படம்! கதை-’டாணாக்காரன்’ படத்தின் எழுத்து மற்றும் நெறியாளுகை செய்திருந்த ’தமிழ்’! ’டாணாக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று இதைக் குறித்தாலும், குற்றமில்லை!
ஆயுதக் காவல் படையில் 1998 இல் பொழியாறுவில் பயிற்சி பெற்று ’டாணாக்காரனா’க மாறிய ’அறிவு’ என்கிற ’விக்ரம் பிரபு’வின் கதை அது-’டாணாக்காரன்’! களம், பயிற்சி, போட்டி, வெற்றி, தோல்வி என்று வாழும் காவல் மனிதர்களைப் பற்றிய கதைதான் அந்த ’டாணாக்காரன்’! இது, 2003 இல் வேலூரில் ஆயுதக் காவல் படையில் ஏட்டாகப் பணிபுரியும் ’கதிர்’ என்கிற ’விக்ரம் பிரபு’, விசாரணைக் கைதியை, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் இன்னொரு கதை-‘சிறை’!
’காவலராகப் பணி செய்யும்போது, எளிய மக்கள் கஷ்டம்னு கண்ணீர் விடுறப்ப, அவுங்ககிட்ட ஒரு தோழனா, சகோதரனா பேசுங்க. ஒங்களோட அதிகாரத்தாலெ அவுங்களோட கண்ணீரைத் தொடைக்க முடியும்னா, அதெச் செஞ்சு பாருங்க.. அதுலெ கிடைக்கிற மன நிறைவு வேற எதுலெயும் கிடைக்காது’ என்பதை அறிவாக உணர்த்துகிற கதைதான்/ அல்லது அந்தக் காவலர்களுக்குப் பாடம் எடுக்கிற கதைதான் இந்தச் ‘சிறை’! ‘அறிவு’ என்பதே, இந்தக் ’கதி’ரின் பெயராக ‘சிறை’யில் இருந்தாலும், ஒன்றும் தவறாக ஒலித்திருக்காது.
’கதிர்’ -’கதிரவன்’ என்பது ’சூரிய’ னைக் குறிக்கிறது! அது ஒளி நிரம்பியது. ஒளி என்பதே ‘அறி’வின் உருவகம்தான்! ’அறிவு’ என்பதே, பகுத்தறிவைத்தான் குறிக்கும்.. அது, பகலவனையும்/ கதிரவனையும்கூடக் குறிக்கக்கூடியது! ஒரு விசாரணைக் கைதியின் காதல் இணையைச் சேர்த்து வைக்கிற ஓர் ஏ.ஆர். காவலரின் படம் என்பதோடு நின்றுவிடாமல், ’ஒவ்வொரு காவலருக்கும், ஒரு குறைந்தபட்ச அதிகாரம் இருக்கு. அந்த அதிகாரத்தெ யாருக்காகப் பயன்படுத்தப் போறீங்கங்றதுதான் முக்கியம்’ என்கிற சமூகப் பொறுப்பை -தானாக எவரும் பிறக்கவில்லை, எனவே தனக்காகவும் எவரும் பிறக்கவில்லை’-என்கிற பெரியாரின் பேருண்மையை, நெஞ்சினில் படியும்படி உணர்த்துகிற வகுப்பறைப் பாடமாகவும் ’சிறை’ இருக்கிறது. விசாரித்தால், திரை ஆளுமை வெற்றிமாறனின் பட்டறையில் உருவாகி வந்தி ருக்கிறவர் சுரேஷ் ராஜகுமாரி என்கிறார்கள்- நூலைப் போலத்தான் சேலை!
திரைக்கதை, வசனத்தில், ‘சிறை’ அருமையாகப் ’பட்டி’ பார்க்கப்பட்டிருக்கிறது. சினிமாவிற்காகப் பேசியதான சினிமாத்தனம் இல்லாத இயல்பைப் போர்த்தியிருக்கும் வசனங்கள்! கதை, கதையின் களம்- சிறப்பு ஆயுதப்படைக் காவலர் பின்புலம்-டாணாக்காரர் ’தமி’ழின் கைங்கர்யம் என்பது புரிகிறது. இவரும், வெற்றிமாறனின் இன்னொரு கையளிப்பு! இவரும், படத்தின் நெறியாளுநரும், உணர்விற்கும் அறிவிற்கும் வேலை கொடுக்கும் வசனங்களால், மொத்த அரங்கையும், தங்கள் கட் டுக்குள்ளேயே வைத்திருக்கின்றனர். கதைக்குள் வசனங்கள், அதற்குரிய அர்த்தம் பொதிந்தும், சமூ கத்திற்குமான அர்த்தமாக விரிந்தும், அப்படியாக வந்து, அமரிக்கையாக மனசில் அமர்ந்துவிடுகின்றன. காவல்துறைக் களத்தில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள், படம், பார்ப் பவர்களின் புழங்கு சொற்களாக மாறிப் போயிருக்கிற விந்தையும், இயல்பாக இந்த வசனங்களில் நடந்தேறி இருக்கிறது. அது, உண்மைக்கு நெருக்கத்தில் நம்மைக் கொண்டுவந்து சேர்க்கிறது. தணிக்கைத் துறையின் கத்திரிக்கோல் சாணை பிடிக்கப் போயிருந்த ஒரு நேரத்தில், இந்தப் படம், தணிக்கையிலிருந்து சாதாரணமாக வெளியேறி இருந்திருக்க வேண்டும். அல்லது சொல்லப்பட்டிருந்த திரைக்கதையில், அது படமாக்கப்பட்டிருந்த திரைமொழியில், அவர்களும் மெய்மறந்து கிடந்திருக்க வேண்டும். தணிக்கைத்துறை மேலான மக்களின் கணிப்பு, அப்படித்தான்–இங்குள்ள பல நீதிமன்றத் தீர்ப்புகளைப்போல்-உண்மையில் பரிதாபப்படக்கூடிய நிலையில்தான் இருக்கிறது! சுதந்திரமான அமைப்புகளான சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமிகளை, இந்தியத் தேர்தல் ஆணையத்தைப்போல் ஆக்கிவைத்திருக்கிற இதே சாதிய,மதவாத அரசின்கீழ்தானே தணிக்கைத்துறையும் இருக்கிறது. எல்லாருமே, கண்காணிப்புச் சிறைக்குள்தான் கிடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த இடத்தில் எப்படிக் கத்திரி வைக்காமல் விட்டிருக்கிறார்கள் என்கிற பொதுப்புத்திச் சலனங்களை மீறி, திரையரங்கு மொத்தமும், அந்தந்த இடங்களில் கைத் தட்டி ஆர்ப்பரிப்பது, நம்மைச் சுற்றிலும் சிந்திக்கிற நல்ல மனிதர்கள் நிறைந்திருக்கின்றனர் என்கிற பூரிப்பால், கண்ணீர், நம் கன்னங்களை ஈரப்படுத்துவதை உணரமுடிகிறது. இந்த உணரல்களின் ஆகுதிக் கரைசல், தணிக்கைத் துறையின் காதுகளையும் நிச்சயம் நனைக்கும்.
இதற்குள், தூசுபடாத ஓர் ஈரம் படிந்த காதல் கதை இருக்கிறது; காவல் துறையின் கரடுத்தன்மையுள் புதைந்திருக்கிற ஒரு கரிசனக் கதையும் இருக்கிறது; இந்து-இசுலாம்-கிறித்துவம்-எல்லாம் ஒன்றே என்று பேசுகிற மனிதக் கதையும் இருக்கிறது- இது, ’பட்டி’ பார்க்கப்பட வேண்டிய ஒரு சாராருக்கான, வாகடமாயிருக்கிறது! மூன்றும் சரிவிகிதமாய்க் கலந்தும், கரைந்தும் எல்லோரும் பாராட்டும் படியான ஒரு நல்ல படத்தைத் தந்திருக்கிறது. இதற்கு உழைத்த அத்தனைப் பேருக்கும் நன்றி!
‘சிறை’யின் திரைக்கதையை நகர்த்த, கதையில், மூன்று குடும்பங்கள் -கதிரவன் குடும்பம்; கலையரசி குடும்பம்; அப்துல் குடும்பம் என்பதாய்- வருகின்றன; மூன்று குடும்பங்களில், ஆறு பெண் மக்கள், நான்கு ஆண்மக்கள், ஒரு குட்டிப் பெண் குழந்தை ஆகியோர் கதாபாத்திரங்களாக வருகின் றனர். கதிரவன் குடும்பத்தில், அம்மா, மனைவி, குட்டிப் பெண்குழந்தை என நால்வர்! கதிரும், அவர் மனைவியும் காவல்துறையில்தான் பணிபுரிகின்றனர். இவர் ஆயுதப்படைச் சிறப்புக் காவல் பிரிவில் (ஏஆர்பி- ARP)) பணிபுரிகிறார். அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். ’ஏ.ஆர். உன்னை ரொம்ப மாத்திடுச்சுடா’ என்று அவர் அடிக்கடி சங்கடப்படுகிறார். வீட்டில், அப் போதைக்கப்போது முகத்தை இறுக்கி வைத்துக் கொள்பவராயிருக்கிறார் அவர்! ‘அடி, எத்தனைத் தடவ நான் மன்னிப்புக் கேட்பேன்// ஒன் ஒத்தட ஒதடெ ம்ஹூம் ம்ஹூம்’ன்னு’ கதிரின் மனசு தான் கிடந்து அடித்துக் கொள்கிறது.
இருவரும் காவல் பணிக்குப் போவதால், கதிரின் அம்மாதான், இவர்களின் சிறு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். மாமியார்-மருமகள் இருவ ரும், அத்தனை நெருக்கமாயிருப்பதாய்த் தெரியவில்லை. வேறு மதம்-காதல் திருமணம் என்பவை, அதற்கான காரணங்களாயிருக்கலாம். அவர் பெயர் ‘மரி’! கதிர் செல்பேசியில் அவருடன் பேசுகையில் அப்படி அவரை அழைக்கிறார். அப்படியானால், அவர், கிறித்துவர்! இசுலாமியர் வலியைப் படம் பேசுவதால், கிறித்துவர் பிரச்சினையை நெறியாளுநர் அடக்கி வாசிக்கிறாரென்று தெரிகிறது. கட்டிலிலில்லாமல், வீட்டின் முன்கட்டில், தரையில்தான் விரிப்பில் படுத்திருக்கிறார் கதிரின் அம்மா! அவர், தன் சாமிப் படங்களுக்குக் காட்டிய தீபத் தட்டைக் கதிரின் முன் நீட்டினால், கதிர், அடுப்படியில் வேலை பார்க்கும் தன் மனைவியை அனுமதிக்காகப் பார்க்கிறார். அவர் முகத்தில், அப்பொழுது எள்தான் வெடிக்கிறது. அவர்களுக்குள் இதுவும் ஒரு பிரச்சினையாயிருக்கும் போலிருக்கிறது. வெற்று நெற்றிக்காரியாயிருக்கிறார் அவர்! திரும்பிநின்று, வேண்டாவெறுப்பாய் தன், இயலாமையைச் சகித்தபடி, அம்மாவின் திருநீற்றுப் பூச்சை மட்டும், தன் நெற்றியில் பக்தியின்றிப் படர விடுகிறார் கதிர்! கதிர் அம்மாவின் சாமி, அங்கிருக்கிற இந்துச் சாமிப் படங்களாயிருக்கின்றன. மருமகளுக்கு இந்தச் சாமிகள் ஆகாது என்பது அவரின் நடவடிக்கையிலேயே தெரிகிறது. இவர்களின் அந்நியோன்யம் அந்தக் குட்டிக் குழந்தையின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது என்பதை ஒரு சித்திரப் பூப்பாடலுக்குள் அடக்கிக் காட்டிவிட்டு நகர்ந்து விடுகிறார் நெறியாளுநர்!
அவருக்கென்று, ஓர் உரையாடல் மட்டும் நச்சென்று நம்முள் இறங்குகிறது. கலையரசியிடம் பேசிய பிறகு,தன் மனைவிக்குக் கதிர் செல்பேசியில் பேசுகையில், ‘ஆண்களுக்குப் புடிக்றதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனா, பொண்ணுக்கு ஒன்னு புடிச்சிப் போச்சுன்னா, உயிருள்ள வரைக்கும் விடமா ட்டா’ என்று கதிர் மனைவி சொல்வதில், குடும்பத்திற்குள்ளான அவருடைய மனசையும் அங்கு தான் திறந்து வைக்கிறார். கதிரும் எந்தக் கடவுளையும் வணங்குபவராய்க் காட்டப்படவில்லை. நாத்திகத்துக்கு நெருக்கமாயிருக்கிற, ’கடவுள்னு ஒருத்தர் இருந்தா நல்லாருக்கு’ங்றது, அவர் கொள்கையாய்த் தெரிகிறது. ‘நீங்க சாமி கும்பிடமாட்டீங்களா சார்?’ என்கிற கலையரசியிடம்,’அப்படி இல்லம்மா. இதுவரையும் இந்தச் சாமி எனக்கு எந்தப் பிரஷரும் குடுத்ததில்லெ. நான் எதுக்கு அவுங்களெத் தொந்தரவு பண்ணிக்கிட்டு. நீ போய்க் கும்பிட்டுட்டு வாம்மா’ என்று சொல்லிக் கரும்பா த்தம்மன் ஆலயத்திற்குள்கூட செல்லாமல், வெளியேதான் காத்திருக்கிறார். அவரின் காவலர்கள் முருகனும் பாண்டியும்தாம், கலையரசி-அப்துல் உடன் கோயிலுக்குள் செல்கின்றனர். கதிரவன் குடும்பத்தினுள், ஒரு மௌனப் போராட்டம் அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எல் லாவற்றையும் உதட்டோரத்துச் சிறு மென்னகையில் கடந்து விடுகிறார் ‘கதிர்’! இதுவும், அழகிய கணவன் -மனைவிக்குள்ளான ஒரு மென்புதையல் நாடகமாக விரியக்கூடியது!
கலையரசியின் குடும்பத்தில் ஐந்து பேர்! அப்பா-பெருமாள், அம்மா, அக்கா, அக்கா புருஷன் -குழந்தை குடுக்க வக்கற்ற, குடிகாரத் தாய்மாமன்! இரத்தச் சொந்தத்தில் கட்டிக் கொடுத்தும், ’குடிச்சிட்டு வந்து, கோழி கொத்துறமாதிரி ரெண்டு கொத்து கொத்திட்டுப்போனா கொழந்தெ எப்படிப் பொறக்கும்?’ என்பது அக்காவின் கோபம்! அன்பாக அரவணைக்க, ஆண் திமிர் அவனைத் தடுக்க, இரத்த பந்தத் தொடர்ச்சியை அவனால் அந்தக் குடும்பத்தில் கிள்ளிக் கூடப் போடமுடியவில்லை. குழந்தை குடுக்குறதுக்கான சக்தி மருந்தாக கைப்பிடி வைத்தியமாக அவனுக்கு அமைந்து போயிருப்பது, இந்தக் குடியும், ’கல்யாண’ கேசட்டுகளும்தாம்! அக் கிராமத்தின், ஆதிக்கச் சாதி விந்துக்குள் தங்களை நன்றாக ஊறப்போட்டிருக்கிற குடும்பம் அது!
சமூகநீதி மட்டுமல்ல, சமநீதியும் குலைந்து போயிருக்கிற அடிதடிப் போராட்டக் குடும்பம் அது! கலையரசி-அப்துல்-லின் தோளில் கை போட்டுப் புகைப்படம் எடுத்துவந்த அன்றிரவு, அப்துல் குடும்பத்திடம் பகைமுரணில் பொருமிக் கொண்டிருந்த அம்மாவிற்கும், கலையரசிக்கும் மோதல்-குடிகாரத் தாய்மாமனின் அடாவடி அடிதடி மோதல்-அப்பா பெருமாள், அப்துல் மோதலில், விதி, பெருமாளுக்கு ஓலை கொடுத்து விடுகிறது. அக்கா மட்டும், சொந்தச் சாதி விந்துப் பெருமைக்கு வாக்கப்பட்டு, சமூக வாழ்க்கையில் தோற்கப்பட்டு நிற்பதை உணர்ந்து, தங்கை கலையரசிக்குக் கைலாகு கொடுத்து வேலியைத் தாண் டிச் செல்ல, முன்கை கொடுக்கிறார். பெண்கள் இருவரையும் தாய்மாமன் அடித்து நொறுக்குவதைப் பார்க்கையில், நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. என்னங்கடா உங்கள் ’கள்ள’ சாதியப் பெருமிதம்?- இந்தக் குடும்பச் சிறைக்குள்தான் கலையரசி! இதுவே ஒரு முழுமையான கதையாகத் தனித்து நிற்கக்கூடியது! -வலிமையான முரண்மோதுகை நாடகம் அதனுள்ளே!
அப்துல் குடும்பத்தில் அவரும் அவர் அம்மாவும் மட்டும்! அப்துல்லாவின் சின்ன வயசிலேயே அப்பா யாஹூப் காலமாகிப் போனார். அப்துல்லாவிற்கு அம்மாதான் எல்லாமே- அப்படியேதான் அவன் அம்மாவிற்கும் அப்துல் தான் எல்லாமே! யாஹூப்பிற்குக் கேரளா-அங்கிருந்து ஓட்டிக் கொண்டு வரப்பட்டவர் அப்துல்லின் அம்மா!
சைக்கிளில் ஊரூருக்குப் போய்த் துணி வியாபாரம் செய்து, இவர்களுக்காக, இந்த ஊரில் இடம் வாங்கிக் கட்டிய ஒத்த வீடும், கடையுமான இது தான் அவர்களின் சொத்து! கல்லுவீடு கட்டமுடியாமல் போனதுதான் தாயம்மாவின் ஒரே குறை! யாஹூப்பின் படத்திற்கு அவருக்குப் பிடித்தமான வடையைப் படைத்து, யாஹூப்பைத் தெய்வமாக வணங்கிக் கொண்டிருப்பவர். அன்பும், நக்கலும், அதி தீவிரக் கோபமும் கொண்டவர்! அவர் வணங்கும் யாஹூப்பின் புகைப்படக் கண்ணாடி உடைந்து போனதால், அதை, டவுனுக்கு எடுத்துப்போய்ப் புதுக் கண்ணாடி போட்டுவர அப்துல்லிடம் சொல்கிறார். எப்படி உடைந்ததென்று அப்துல் கேட்க, அதற்கு அவர் சொல்லும் பதில் நக்கலானது- ’என்னெயெப் பாக்க ஆசெப்பட்டு ஒங்க அப்பா கண்ணாடிக்குள்ள இருந்து வெளியெ வரும்போது, தடுக்கி வுழுந்திட்டாரு. அதான் கண்ணாடி ஒடஞ்சிபோச்சு’-என்னவொரு நக்கல்! யாஹூப் ரொம்பவும் நல்லவர்- கடையிலிருந்து மோதிர அப்பளத்தை எடுத்துப்போகும் குட்டிக் கலையரசியிடம், குட்டி அப்துல் காசு கேட்டுச் சண்டையிடுகையில், யாஹூப்தான், அப்துல்லை அரட்டி, காசெல்லாம் வேண்டாம் என்று குட்டிக் கலையரசியின் மனம் மகிழப் போகச் சொல்கிறார். அதேபோன்ற மோதிர அப்பளத்தைத்தான் அப்துல் பள்ளியில் படிக்கையில்,, கலையரசி குடும்பம் கோவிலில் பொங்கல் விடுகையில், மரத்தின்பின் ஒளிந்துநின்று, காதலின் கணையாழியாய் கலையரசிக்கு மாட்டி விடுகிறார். இறுதியில், இருவரும் ஒரே மோதிரமாய்க் கட்டுண்டு, அன்புக் கூண்டினுள் சிறைப்பட்டுக் கிடப்பதுதான் கதை! அறியாமல் செய்திருந்த பெருமாள் கொலைக்கு, அப்துல் தானே முன்வந்து தண்டனையினை ஏற்றுக் கொண்டு, 5 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக இருந்து வருபவர்! அவர் அம்மா இறந்துபோன செய்தியையே, கலையரசிதான் அப்துல் லிற்குச் சிறையின் நேர்க்காணல் நேரத்தில் சொல்கிறார். அந்த வலி, ஒத்தை வீட்டு முஸ்லீமாக இருப்பதை விடவும் எத்தனைக் குரூரமானது? ஆனாலும் அப்துல்- அந்த முகமும், வடிவமுமே அற்புதம்! படத்தில் தலைகாட்டியிரு க்கிற அத்தனைப் பெண் பாத்திரங்களும், கதை நாயகியராகவே உலா வருவதாய்க் கவனத்தில் பதி கின்றனர். பெண்களை மிக வலிமையான கதாபாத்திரங்களாய்ப் படைத்திருப்பதற்கு நெறியாளுநருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவரும் அவரவர்கள் பங்குபெறும் பகுதியில், அவரவர்களே, அந்தந்தப் பகுதியின் நாயகியாகத் தெரிகின்றனர்.
இவைபோக, காவல்துறையினர், வழக்கறிஞர்கள், அவர்களைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் பொதுமக்கள் என்று பெரும் நடிகர் பட்டாளம் இருந்தாலும், எல்லோருமே வெறுமனே தலைகாட்ட வந்தவர்களாய் இல்லாமல், கதையின் பின்புலத்திற்குக், கனம் சேர்க்கக்கூடியவர்களாகவே உள்ளனர். அவரவர்கள் திரையில் தலைகாட்டுகையில், அவரவர்கள் தனித்து சோபிக்கின்றனர். ஆயுதப்படைக் காவலில் இருக்கும் கதிரிடம், அவர்களின் பணிநிலை பற்றி, அவரின் ஆர்.ஐ. சொல்கிற ஒரு வாசகம் ரச னைக்குரியதாயிருக்கிறது. ‘நம்ம வேலெங்றது முட்டியிலெ கட்டுன தாலி மாதிரி. ஒனக்கெல்லாம் குதிங்கால்ல அதெக் கட்டியிருக்கு. எப்ப வேண்ணா கழண்டு போயிடும்’- அந்தக் கூட்டத்திற்குள்ளும் இப்படியான இரசிக்கும்படியான வசனங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. சட்டகத்திற்குள் அடங்கிக் கிடக்கும் எல்லோருமாகச் சேர்ந்தே ‘சிறை’யைப் ’பறை’யிசையாய் அழகுபடு த்தி முழங்கவைத்திருக்கின்றனர். 1995 இல் நிகழ்ந்த குண்டு வெடிப்பு காரணமாக, சந்தேகக் கேஸில் தமிழ்நாட்டிலுள்ள இசுலாமியர் பலர், விசாரணைக் கைதிகளாகவே இருந்துகொண்டிருப்பதைக் குல்லா வைத்த பலரும், அப்துல்லுடன் விசாரணைக் கைதிகளாக சிவகங்கை நீதிமன்றத்திற்கு வருவதில், அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, அப்துல் வழக்கிலும், சட்ட உதவி வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை என்கிற தகவலும் அதிர்ச்சியாயிருக்கிறது.
இப்படிப் பல தகவல்கள் நம்மைக் கடந்து போய்க்கொண்டே இருக்கின்றன. நாம்தான் கவனமாக அதையெல்லாம் உள்வாங்க வேண்டியதாயிருக்கிறது.
பேருந்து நிலையத்திற்குள், பேருந்துக்குள் நடக்கிற மோதலில் படம் ஆரம்பிக்கிறது. விஷாலின் ’சண்டக்கோழி’ச் சண்டையிலிருந்து இதில் மிளகாய்த் தண்ணீர் வீச்சு, கூடுதலாக இருக்கிறது என்று நெற்றியைச் சுருக்க ஆரம்பிக்கையில், தப்பித்துச் சென்ற கைதி ஓடிக் கொண்டிருக்கிற ஆட்டோ வில் பாய்ந்து ஏறிக் கொண்டிருக்கையில், பறந்துவந்த புல்லட் முதுகைப் பதம்பார்க்க, கைதி அப்படியே கீழே சரிகிறார். குண்டுச் சப்தம் தந்த அதிர்ச்சி; ஒளிப்பதிவுக் கருவியின் உடனடி மிரட்சி; நீண்ட துப்பாக்கியுடன் விக்ரம் பிரபு குறிவைத்திருக்கும் திரட்சி –இவை, படமாக்கியிருக்கிற தோரணையில், நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. எப்படிக் கைதியைச் சுட்டுக் கொல்லலாம் என் பதற்கு வருவாய் வட்டாட்சியர்(RDO)விசாரணை. உயர் அதிகாரிகள் ஒரே மாதிரியாகப் பதில் சொல்லச் சொல்கின்றனர். கதிரவன் உண்மையைச் சொல்லுகிறார்; திரும்பக் கேள்வி கேட்கிறார்; சட்ட வகுப்பும் வேறு எடுக்கிறார்-அவர் எப்படிப்பட்டவர் என்பது நமக்குப் புரிகிறது. இவ்வளவு வீராப்பாக நடந்து கொண்டாலும், அவரும் ’தளபதி’ ஒயின்ஸில் தண்ணி அடிக்கிறார். நீதிபதியின் டவாலி க்குக் கையூட்டுக் கொடுக்கிறார். எல்லாவற்றையும்விடக் கொடுமையாக, பட்டினியாயிருக்கும் அப்துல் முன், கோழி பிரியாணியும், பார்க்க வைத்துச் சாப்பிடுகிறார். அவரின் இரக்க மனசுக்கு, ஒரு டீ மட்டும் வாங்கிக் கொடுக்கிறார். விசாரணைக் கைதிகளின் நிலையும், அந்தக் காவலர்களின் நிலையும் அப்படியானவைதாம்! ஆனால், சகக் காவல் நண்பருக்காக, அவருக்குக் கன்னியாகுமரி போக, அதிகாரியிடம் உரிமை பேசி, விடுப்பும் வாங்கிக்கொடுத்து, அவருக்குப் பதில், சிவகங்கை க்கு ’லாங் எஸ்கார்ட்’டும் போகிறார். அவருக்குத் துணைக் காவலர்களாக, முன்கோபி- பாண்டியும், விசாரணைக் கைதியின் பையில் காசைப் பிறாண்டும் முருகனும் பயணப்படுகின்றனர். வேலூர் கோட்டைச் சிறையிலிருந்து, வழக்கு விசாரணைக்காகக் கைதிகளை நீதிமன்றங்களுக்குக் கூட்டிப் போகும், நீண்ட மெய்க்காவல் (’லாங் எஸ்கார்ட்’) போகின்ற சிறப்பு ஆயுதப் படைக் காவலர்களிடம், சிறைக் கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டு, அவர்கள் ஒப்படைக்கப் படுகின்றனர். அப் பெயர்களுக்கு நடுவில், சிறைக் காவலரால்தான்,’ அப்துல் ரவூப்’ என்கிற பெயர் படத்தில் முதலில் விளிக்கப்படுகிறது. உயிரற்ற ஒருவராய், ‘அய்யா’ என்று எழுந்து, அவர் நிற்கிறார்.. அந்தக் குரலே மனசை இம்சிக்கத் தொடங்கி விடுகிறது. அப்பா பெயர் கேட்கப்படுகிறது- யாஹுப் என்கிறார். வாய்தாவாய்ப் போட்டு இழுத்தடிக்கும் வழக்கு விசாரணை நடைபெறும் சிவகங்கைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இங்கிருந்துதான் அப்துல் என்கிற கதை நாயகனின் கதை தொடங்குகிறது. என்னவொரு அப்பிராணியான, மண்டைக்குள் ஏதோ ஒன்றைத் திட் டமிட்டுக் கொண்டேயிருக்கிற, அச்சத்தைக் கண்களில் தேக்கியிருக்கிற, பாவமான வெகுளி முகம் - அது அப்துல் ரவூப்!
அப்துல்-இந்தப் பெயரை, ஒரு பாத்திரத்திற்குச் சூட்டி, அதன்மூலம் கதையையும், வெறுப்பு அரசியலுக்குச் சுளுக்கெடுக்கிற கருத்தையும் நகர்த்துவது,, இன்றையச் சூழலில், திரையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று! இது காஷ்மீரி ஃபைல்ஸோ, கேரளா ஸ்டோரியோ அல்ல! உண்மைக்கு நெருக்கமாக உபதேசிக்கிற கதை!
அப்துல்லைக் கதைநாயகனாகக் காட்டும் அந்தத் துணிவு பாராட்டப்பட வேண்டும். அந்தவகையில், இதில் துணிந்து முதலீடு செய்த தயாரிப்பாளரின் விரு ப்பத் தெரிவு-தெளிவு-மெச்சப்படவேண்டும். பண முதலீடு மட்டுமல்ல, மகன் முதலீடும் இதில்! அந்த அப்துல் பாத்திரத்தில் நடித்தது, அவர் மகன் ’அட்சயகுமார்’ என்கிறார்கள். சாதாரண வார் த்தையில் சொன்னால், இதை ’விஷப் பரீட்சை’ என்பார்கள். ஆனால், அதை, ’விஷ முறிவு மருந்’ தாக ஆக்கிக் காட்டுகிற மாயாஜாலம், இந்தக் கூட்டணிக்குள் இயற்கையாக அமைந்து போயிருக்கிறது. பாராட்டுகள்!
மந்திரமூர்த்தியின் ‘அயோத்தி’ திரைப்படத்திற்கு அப்புறமாய், இப்படியொரு அற்புதம் உங்களின் மூலம்தான் நிகழ்ந்திருக்கிறது சுரேஷ் ராஜகுமாரி! மக்களை மனிதர்களாக மட் டும் பார்க்க, நவ இந்தியாவிற்கும் பாடம் எடுக்க, இதுபோன்ற படங்களின் தேவை, இன்னுமே இருக்கிறது.
மனமுரண் மோதுகைகளின் ஈர்ப்புவிசையில், கதையின் கண்ணிகள், நம்மையும் அதன்போக்கில் உள்ளிழுத்துக் கொண்டு பாய்கின்றன. இரண்டுமணி ஆறு நிமிட நேரம், அந்தக் களத்திற்குள்ளே நாமும் இன்னொரு கதாபாத்திரமாக, எல்லாக் காட்சிக்குள்ளும், அதன் மௌனசாட்சியாய் உள்ளுக்குள்ளேயே ஒருவராய் நின்று, சம்பவங்களில் கரைந்து போய்க் கொண்டேயிருக்கிறோம். நடித்திருக்கிற எல்லோருமே ரொம்ப நாட்களாய் நாம் பார்த்துக் கடந்து போயிருக்கிற, பரிச்சயமான முகம் தெரிந்தவர்களாய், பாத்திரக் குணங்களின் பாரிய பிம்பங்களாய்த் தெரிகின்றனர்! சிறிய கதாபாத்திரமோ பெரிய கதாபாத்திரமோ, சூழலை மெருகூட்டியவர்களோ, யாருமே நடித்திருக்கவில்லை, எல்லோரும், அவரவர் பங்கிற்குத், திரைச் சட்டகத்தை அர்த்தமுள்ள நிலையில் அழகுபடுத்திக் காட்டியிருக்கின்றனர். நெறியாளுநர் சுரேஷ் ராஜகுமாரியின், கரம் உயர்த்தும் தொழில் நுணுக் கர்கள், அங்காளி பங்காளிகளாய்த் திரையைப் பிரமாதப்படுத்தி, அவரின் முயற்சிக்குப் பக்கவாத்தி யமாய், அவருடன் சேர்ந்து பொலிக் குலவை போட்டிருக்கின்றனர். ஒவ்வொரு சட்டகத்திற்குள் ளும், ஒளிப்பதிவாளரின் உருமாக்கட்டும், இசையமைப்பாளரின் சரிகைக் கட்டும், திரைக்கதை, வசனகர்த்தாக்களின் மணக்கும் பூக்கட்டும், படத் தொகுப்பாளரின் கச்சைக் கட்டும், கலை இயக்குநரின் கண்கட்டுமாக அமைந்து, படத்தை, அதனதன் நோக்கில் உயர்த்தி, நம்மைப் பேசவிடாமல் செய்துவிடுகின்றனர்..
கதாபாத்திரங்களுக்கான பெயர்களைச் சூட்டி இருப்பதிலும், படைப்பாளியின் விருப்பத்திற்குகந்த, இந்து-இசுலாமிய ஒற்றுமை வாழ்வியல் ஒன்று உள்ளோடிச் சென்றுகொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. விசாரணைக் கைதியின் குறையைக் காதுகொடுத்துக் கேட்டு, தங்கள் பக்கத் தவறு க்கு மன்னிப்பும் கேட்கிற நீதிபதியின் பெயர் ’இரத்தினவேல் பாண்டியன்’ என்றிருக்கிறது. என் விடலைப் பருவத்தில், அவர்தான் எங்கள் மாவட்டத் திமுக செயலாளர்! பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) இட ஒதுக்கீடு அடிப்படையில், உச்சநீதிமன்ற நீதிபதி ஆனவர்! அரசியல் சட்ட அமர் வில், மண்டல் கமிஷன் விசாரணையை, ஒன்பது நீதிபதிகளில் ஒருவராய் இருந்து விசாரித்தவர். பகுத்தறிவுச் சிந்தனையாளர்! நல்ல நீதிபதிக்கு அவர் பெயரைப் பயன்படுத்தி இருப்பதற்குப் பாராட்டுகள்! இன்னொரு நிதிபதிக்குப் பெயரே சொல்லப்படவில்லை. அதற்கான சூழலுமே அங்கி ல்லை. ஆனால் அப்துல் பெயரைக் கேட்டதும் கொதித்து எழுகிற அந்த நீதிபதியைப் பார்க்கையில், சாமியின் பெயரால் சட்டத்தை வைத்துச் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கிற பல நீதிபதிகள் நினைவிற்குள் வந்துவந்து செல்கின்றனர். இதை நான், வலிந்து சொல்வதாகக் கொள்ளக்கூடாது. அதற்கான முடிச்சு, கதாசிரியர்களால், படத்திற்குள்ளேயே போடப்பட்டிருக்கிறது என்பது முக்கியமானது. அப்துல்-பெயருக்கு விக்ரவாண்டிக் காவல் கண்காணிப்பாளர் கொடுக்கிற விளக்கத்தி லிருந்தே, நாம் இந்த முடிவிற்கு வரலாம். ஏ.ஆர். காவலர் பாண்டி, விளக்கம் எழுதும் அந்தக் கண் காணிப்பாளரிடம் சொல்கிறார், ’அய்யா கன் லோடுலெ இருக்கு’! ’என்ன, லோடுலெ இருக்கா? ..அக்யூஸ்டோட லாங் எஸ்கார்ட் வர்றவுங்க, லோடு பண்ணி வர்றதில்லையே’ என்று ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் கேட்கிறார். அதற்கு பாண்டி சொல்லுகிற பதில், அதிர்ச்சி தரத்தக்கதாக, வலி ஏற்படுத்துவதாக இருக்கிறது:-’சார்! அக்யூஸ்டு முஸ்லீம் சார்!’அரங்கமே இந்தப் பதிலால், ஒரு நொடி ஆடிப்போய்த் தான் நின்றிருந்தது. ‘முஸ்லீமா…அதுக்கு? ’ என்று ஒவ்வொருவர் முகத்தையும் அப்பாவியாகப் பார்க்கிறார் கண்காணிப்பாளர்! அடுத்து, துப்பாக்கியிலிருந்த அந்தக் குண்டை எடுத்து, வார்த்தைகளில் அதி பயங்கரக் குண்டை எடுத்து, பாண்டிமீது மட்டுமல்ல, நம் எல்லார் மீதுமாக எறிகிறார் அந்தக் கண்காணிப்பாளர்! அதென்ன வெடிகுண்டு?– தன் வலது மாரில் குத்தியிருக்கும் பெயர்ப் பட்டையைப் பிடித்துக் காட்டி, நானும் முஸ்லீம்தான்..சுடுறியா..சுடு’ என்று அவர் பேசி முடியவும், அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட மொத்த அரங்கமும் ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது.
‘ஏட்டையா! விரட்டி விடுங்க இவுங்களெ’ என்று, மனிதப் பிறவிகளே இல்லை இவர்கள் என்பதாக அருவருப்படைந்து எழுகிறார். இந்த வசனம் நெருக்க முகமாகக் காட்டப்படுவதால், இதன் வீச்சு அரங்கில் அதிகமாகப் போய்ச் சேருகிறது. அவர் நெஞ்சில் குத்தப்பட்டிருக்கும் பெயர், ’காதர் பாட்சா’!
கமுதிப் பகுதியில் பிரபலமாக இருந்த திமுக தலைவர் ’காதர் பாட்சா என்கிற வெள்ளைச்சாமி’யை, அந்தப் பெயர் நினைவுபடுத்துகிறது. இப்போது அவர் மகன் காதர் பாட்சா என்கிற முத்துராமலிங் கமும் திமுகவின் முக்கியப் பிரமுகர் அங்கு! இங்கு, இந்துவாயும் இசுலாமியராயும், தன் பெயரை ஒருசேர வைத்திருந்து, மத நல்லிணக்கத்தை, இந்த மண்ணில் விதைத்திருந்தவர்களை, திரை ஊடகத்தின்வழியும் நினைவுபடுத்திக் காட்டுவதற்குச் சமூகப் பொறுப்புமிக்க நெறியாளுநர்களாலே தான் முடியும். சுரேஷ் ராஜகுமாரியால் இங்கு முடிந்திருக்கிறது. ஏனெனில் படம்,, இந்து/ முஸ்லீம் என்கிற விஷம் தூவிய ஒரு பிளவை, தன் திரை முயற்சியினூடாக நேர் பண்ணப் பார்க்கிறது. இது தான் தமிழ்நாடு! இதுதான் திராவிடம் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது. வாழ்த்துகள் சுரேஷ் ராஜகுமாரி !
இப்பொழுது, கதிரவன் என்கிற பெயர்கூட தென்காசி சட்டமன்ற உறுப்பினராயி ருந்த, ’கதிரவன் என்ற சம்சுதீ’னைத்தான் எனக்கு நினைவுபடுத்துவதாய் இருக்கிறது. ‘புதியபூமி’ திரைப்படமே, திமுக வேட்பாளர் ’கதிரவன் என்கிற சம்சுதீ’னின் இடைத்தேர்தல் வெற்றிக்காக எடுக்கப்பட்ட படம்! கதாநாயகன் எம்ஜிஆர் பெயர், அதில் ‘கதிரவன்’! அவர் சம்சுதீனுக்காகப் பாடுகிற தேர்தல் பாடல்தான், ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை-இது ஊரறிந்த உண்மை/ நான் செல்லுகின்ற பாதை- அது பேரறிஞர் காட்டும் பாதை’ என்பது! இதுதான் ஒன்னுமன்னாக, மாமன் மச்சினனாக மட்டுமின்றி, தன் பெயரில் பாதியை வழங்கி, தன் உயிரின் பாதியாக அவர்களை ஆக்கிக் கொண்டிருக்கிற மண்ணின் உண்மைக் கதை!
இதன் அடுத்த அடி, இன்னொரு காறித் துப்பல், இன்னொரு செருப்பைக் கொண்டு, இன்னொரு செவுளிலும் அறைகிற மாதிரி இருக்கிறது. அந்த இடத்திலேயே அந்தக் கண்காணிப்பாளர், இதையும் பேசியிருந்தாரேயானால், அந்தப் பேச்சு, அதனினும் கூடுதல் வீரியம் பெற்றதாயிருந்திராது. அதற்கான மூச்சை இழுத்து விடுகிற நேரத்தைத் திட்டமிட்டதில், நெறியாளுநர் சிறப்பாய்த் தெரிகிறார். காவல் நிலையத்திலிருந்து, இரவில், பேருந்து நிலையம் நோக்கி, அவமானத்துடன் நடந்து வந்து கொண்டிருக்கிறது, அந்த, எஸ்கார்ட் படை! ஒளியை உமிழ்ந்தபடி கண்காணிப்பாளர் காதர் பாட்சா, அவர்களின் பின்னே, ஜீப்பில் வருகிறார். அவர்களைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட, அவர்களையும் ஜீப்பில் ஏறச் சொல்கிறார். வண்டி அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறது. பின் னுள்ளவர்கள் அவமானத்தில் செய்வதறியாது இருப்பதைப் பார்க்கிறார். என்னவோ ஒன்று நடக்கப்போகிறது என்கிற பரபரப்பு நமக்குள் தொற்றிக் கொள்கிறது. அங்கிருந்த மௌனத்தை உடை த்து! ‘அந்த அப்துல்லா ரவூப்’ யார் தெரியுமா என்கிறார் அவர்களிடம்! எல்லோரும் தெரியாது என்றே தலையசைக்கின்றனர். அப்போது ’காதர் பாட்சா’ சொல்கிறார்:-’1994 லெ ஈழத் தமிழர்களுக் காகத் தீக்குளிச்ச மொதல் தமிழண்டா. நாங்களும் மனுஷனா, தமிழனா, இந்தியனாத்தான்டா வாழ் ந்துகிட்ருக்கோம்….நீங்க ஏன்டா மதத்தெ வச்சி மனுஷங்களெப் பிரிக்கிறீங்க’-அரங்கில் கைத்தட்டல், விசில் நிற்க நேரமாகிறது. உண்மையைச் சரியான இடத்தில் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுரேஷ் ராஜகுமார்!
அப்துல்-கலையரசி கதாபாத்திரங்களாக நடிக்கும் இருவருக்கும் இதுதான் முதல் படம் என்கிறார்கள். எந்த இடத்திலும், புதியவர்கள் நடிக்கிறார்கள் என்று, அப்படியாகப் படம் பார்க்கிற உணர்வு நமக்கு ஏற்படவேயில்லை. செய்வதறியாத் தவிப்பில், பற்றுக்கோடாய் எதுவொன்றையும் பற்றிவிடத் துடிக்கும் காதல்இணையின் மனவெடிப்புகளை, பக்கத்திலிருந்தே பார்க்க வைத்திருக்கிறதான அதே உணர்வை, நமக்குள் உண்மையாகவே கடத்தியிருக்கிறார் படத்தின் நெறியாளுநர் சுரேஷ் ராஜகுமாரி! காதலர் இருவரின் கண்களும் அப்படிப் பேசுகின்றன-அவர்களின் துயரக் கதைகளை! அப்துல்லின் கண்கள் அவரின் முதல் சட்டகத்திலிருந்து, காதலியைத் தன் உலகமாக, உள்ளமுங்கிய ஒரு பீதியுடன், தேடிக் கொண்டேயிருக்கின்றன. காதலியைக் கண்டுவிடத் துடிக்கும் பரபரப்பு சுற்றுப்புறங்களைச் சலித்துப் பார்க்கும் அவர் கண்களில் இருந்துகொண்டே இருக்கிறது. யாரிடமாவது தன் கனவுகளை இறக்கிவைக்கிறதற்கான வழியைத் தேடும் போதாமையாயுமிருக்கிறது அப்துல்லின் பார்வை! கலையரசியின் கண்களில் யார் என்ன செய்துவிட முடியும் என்கிற உறுதியும் உதவ யாருமில்லையே என்கிற இயலாமை கலந்த அசட்டுத் துணிவும், அவரின் பார்வை யாய் நம்மைத் தகிக்கிறது. சிவகங்கை நீதிமன்றத்தின் வராந்தாவில், காவலர்கள், வழக்கறிஞர்களின் பரபரப்பிற்கு நடுவில், கதிரவனின் காலைப்பிடித்துக் கதறி, அவரின் மார்புக் கூட்டுக்குள் பாதுகாப்பின் இதம்காணும் அந்தக் குஞ்சுப் பறவைகளின் பதறலின் பக்குவத்தை, முன்-பின் இணைப்புகளைக் கொண்டு காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை!
அந்தநேரத்தில் கதிரவனின் மனசுக்குள் ஒளிந்திருக்கும்- செய்வதறியாமல் திக்குமுக்காடிப் போயிருக்கும்- சின்னதானப் பெருமிதமும் அழகு!. கதிரவனே படத்தின் இறுதியில் பயிற்சிக் காவலர்களிடம் சொல்வதுபோல், ’ஒங்களோட அதிகாரத்தாலெ எளியவர்களோட கண்ணீரைத் தொடைக்க முடியும்னா, அதெச் செஞ்சு பாருங்க.. அதுலெ கிடைக்கிற மனநிறைவு வேற எதுலெயும் கிடைக்காது’ என்கிற அந்த மனநிறைவின் தோழமை வாசலின் ’திறப்பு’த்தான் அது! எங்கள் கண்களையும், உள்ளப் பூரிப்பால், ஈரப்படுத்தி விட்டீர்கள் சுரேஷ் ராஜகுமாரி! கண்களின் உணர்வு வெளிப்பாட்டிலிருந்து கதையை நகர்த்துகிற மந்திர வித்தை தெரிந்த சிறந்த நெறியாளுநர்களின் வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள் சுரேஷ் ராஜகுமாரி! அப்படியாக, அந்தக் காதல் இணையின் இணைப்பிற்கு உதவுங்கரமாக எங்கள் மனசு கள் கிடந்து அடித்துக் கொண்டிருக்கையில், அந்தத் திடீர் பேருந்து விபத்து, என்னைக் குலைநடுங்கச் செய்துவிட்டது. சே! வழக்கமான தமிழ்ப்படக் காட்சியாகிவிட்டதே, இதுவரையும் கட்டி எழுப்பிய, படத்தின்மீதான பிம்பம் குலைந்துவிட்டதே என்று அவமானத்திற்குள் அமிழ்ந்திருக்கிற நேரத்தில், அப்துல்லின் ஓங்கார ஓலத்தைப் போல்,நானும் பித்துப் பிடித்துக் கத்தவேண்டும் என்றே, அல்லது படம் பார்த்தது போதும் என்றே, சில நொடிகள் எனக்குள் தோன்றின. அப்துல்லின் அலறல், திரையரங்கினுள் இருக்கும் அத்தனைப் பேரின் நெஞ்சாங் குலையையும் அதிர்ந்து பேச முடியாமல் செய்திருந்தது என்பது அந்நேரத்து உண்மை! அவர்களின் காதல் சிறைப் போராட்டத்தில், அவர்களை விடுதலைசெய்து ’வாழ வையுங்கள் நியாயமான்களே’ என்று கொந்தளிப்பில் மனது குமுறிக் கொண்டிருந்தது. அதற்கான புதிய விடியல், அங்கேயே கிடைத்ததுதான் அருமை! வாழ்க்கை, எப்படியும் நடக்கக்கூடியதுதான்-நம்ப முடியாததும் இந்த வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்ந்துதானே இருக்கிறது-நம்புகிறபடி, நம்பிக்கையை ஊட்டினால் ஆச்சு என்று, கதை சொன்ன முறையில், விபத்தில் ஒரு சிறு திருப்பத்தை வைத்து, வயிற்றில் பாலை வார்த்ததற்கு, திரைக்கதை ஆசிரியர்களுக்கும், படத் தொகுப்பாளருக்கும், ஒளிப்பதிவாளருக்கும், இசையமைப்பாளருக்கும், கலை இயக்குநருக்கும் ஒரே நேரத்தில் ‘ஓ’ போட வேண்டியதிருந்தது. அங்குக் கதிரவனின் பின் பக்கம், ஒரு கிறித்துவ தேவாலயம், திரையில் மரியின் குரலாக அங்குக் கடந்து சென்றது அருமை! இசுலாமிய இளைஞனின் அலறல், இந்து இளைஞியின் விபத்து, இவற்றின் சாட்சியாய் நின்ற கிறித்துவக் கட்டடம்! அப்பொழுதுதான் அந்தத் திருப்பம் அங்கு நிகழ்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு, நேர்காணல் அறையில் வைத்து, அப்துல்லைக் கதிரவன் பார்க்கையில், அவரின் மார்புக்குள் கலங்கிப்போய் ஒடுங்கி நிற்கிறான் அப்துல்! அங்குக் கேட்கிற ‘அப்துல் நல்லாருக்கியா’ என்கிற கலையரசியின் குரலின் அதிசயமும், அப்துல்லின் மந்திர விசையும்-அங்குதான் முதன் முதலாக இருவரும் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர்- அதுதான் அவர்களுக்கான விடுதலை! அந்தக் கதை, காவலர் பயிற்சிப் பள்ளி வகுப்பில், கதிரவனால் பின்னோக்காக விரிவதும் அருமை! அங்குச் சொல்லப்படுகிற இன்னொரு முக்கியமான செய்தி, ’இந்த அமைப்போட அதிகாரங்கள், பல்வேறு காலக்கட்டங்கள்லெ எளிய மக்களுக்கு எதிராத்தான் நின்னிருக்கு. இந்த அமைப்புலெ நாமளும் ஒரு அங்கம்தான். நிங்களும், உங்கப் பயிற்சிக் காலங்களெ முடிச்சிப் பொறுப்புக் காவலர் களா வேலெ செய்யிற காலங்கள்லெ எளிய மக்கள் ஒங்ககிட்டவந்து கஷ்டம்னு கண்ணீர் விடுறப்ப எல்லாம் அவுங்ககிட்ட ஒரு தோழனா, ஒரு சகோதரனா பேசுங்க..ஒங்களோட அதிகாரத்தாலெ அவு ங்களோட கண்ணீரைத் தொடைக்க முடியும்னா அதெச் செஞ்சு பாருங்க.. அதுலெ கிடைக்கிற மன நிறைவு வேற எதுலெயும் கிடைக்காது. அந்த மனநிறைவோட நான் ஒங்ககிட்டக் கேக்குறேன் செய்வீங்களா? ’செய்வோம் சார்’ என்று அவர்கள் சொல்லுகையில், படம் முடிகிறது. அப்துல்லின் ஓங்கார அலறல் சப்தத்தின் எதிவினையாய் இது உறுதியுடன் வெளிப்படுகிறது. இது, காவலர் சமூகத்திற்கான வேத வகுப்பாக, கதிர் மனைவி மரியின் மனசாக எதிரொலிக்கிறது. சுரேஷ் ராஜகுமாரியின் உழைப்பை, பங்குபெற்ற எல்லோரும், தங்கள் உழைப்பால் பூரணப்படுத்தித் தனித்து அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதேபோல் பங்கு பெற்றிருக்கிற அனைவரின் உழைப்பையும், சரியான உணர்வுக் கலப்பில், நிறைவாகப் பிணைத்திருக்கிற உழைப்பால், சுரேஷ் ராஜகுமாரியும் தனித்துத் தெரிகிறார். வாழ்த்துகள்!