‘ராட்சசன்’, ‘எஃப்ஐஆர்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வஸ்டிகேஷன் கதையோடு வந்திருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போதே இந்தப் படம் இன்னொரு ‘ராட்சசன்’ கிடையாது என்றுதான் படக்குழு புரமோட் செய்தது. அதை காப்பாற்றி இருக்கிறதா ‘ஆர்யன்’?
துடிப்பான இளம் காவல்துறை அதிகாரியான நம்பியிடம் (விஷ்ணு விஷால்) ஒரு சீரியல் கில்லிங் கேஸ் வருகிறது. வாழ்விலும் தன் துறையிலும் தோல்வி அடைந்த எழுத்தாளரான அழகர் (எ) நாராயணன் (செல்வராகவன்) முன்னணி டிவி சேனலின் டிஆர்பி அதிகம் இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அடுத்து வரும் ஐந்து நாட்களிலும் ஐந்து கொலைகள் தான் செய்யப் போவதாகவும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போகிறார். இறந்து போன ஒருவர் எப்படி அடுத்தடுத்து கொலைகள் செய்ய முடியும்? கொலைக்கான காரணம் என்ன? இறந்தவர்கள் பின்னணி என்ன? இதனை காவல்துறை அதிகாரி நம்பி தடுத்தாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதான் ‘ஆர்யன்’ திரைப்படம்.
நடிகராக மற்றுமொரு சின்சியரான அட்டெம்ப்ட் கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால். ஃபிட்டான உடலுடனும் சீரியஸான முகத்துடனும் படம் முழுக்க வருகிறார். காதல் காட்சிகளிளாவது அங்கங்கே சிரித்திருக்கலாம். விஷ்ணு விஷாலின் காதலியாக வரும் மானசா செளத்ரிக்கு பெரிதாக வேலையில்லை. கதையின் போக்கில் பார்வையாளர்களை ட்விஸ்ட் செய்துவிட மட்டுமே அவரது கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, ஷ்ரதா ஸ்ரீநாத்தின் கதாபாத்திரத்திற்கு பில்டப் அதிகம் கொடுத்திருக்கும் அளவிற்கு கதாபாத்திரம் வெயிட்டாக இல்லை. இன்னும் அழுத்தம் திருத்தமாக எழுதியிருக்கலாம். செல்வராகவன் கதையின் மையப்புள்ளியாக சிலபல காட்சிகளே வந்திருந்தாலும் அவரது மாறாத முக ரியாக்ஷனுக்கு ஏற்ற கதாபாத்திரம். அவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பாடல்களும், ஆக்ஷன் காட்சிகளும் கதையோட்டத்திற்கான ஸ்பீட் பிரேக்காக இருந்தாலும் முதல் பாதியில் கதை விறுவிறுப்பாகவே நகர்கிறது. க்ரைம் இன்வஸ்டிகேஷன் கதைக்கேற்ற விறுவிறு இசையைக் கொடுத்திருக்கிறார் ஜிப்ரான். ஆனால், பாடல்கள் எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் சான் லோகேஷின் கச்சித படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.
ஆனால், முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைகிறது. கொலையானவர்கள் நான்கு பேரின் பின்னணியை கண்டுபிடித்து புதிர்களை அவிழ்க்கும் காவல்துறை எப்படியும் ஐந்தாம் நபரை காப்பாற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட கிளைமாக்ஸ் நோக்கியே நகர்கிறது. அதுபோல பார்வையாளர்களை சில விஷயங்கள் யூகிக்க விட்டு அதைக் கலைத்து பின்பு அதையே நிஜமாக்குவது குழப்புவதற்கா அல்லது பார்வையாளர்களது பாராட்டைப் பெற வேண்டியா என்பது புரியவில்லை.
சீரியல் கில்லிங்கில் கொலைகளுக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். அதுவும் அப்பாவி, வாழ்வில் தோற்றவன் ஒருவன் கொலைகாரனாகிறான் என்றால் அதில் சமூகத்திற்கு எதோ கருத்து சொல்ல வருகிறார்கள் என்ற வழக்கமான பேட்டர்னே ‘ஆர்யன்’ கதையிலும் வருகிறது. ஆனால், அந்த காரணத்திற்காக இத்தனை அப்பாவிகளை கொல்லதான் வேண்டுமா என்ற எண்ணம் எழாமல் இல்லை! ஆகமொத்தத்தில், முதல் பாதியில் கொண்டு வந்த விறுவிறுப்பையும் மர்மத்தையும் இரண்டாம் பாதியில் தக்கவைத்திருந்தால் ‘ஆர்யனை’ இன்னும் ரசித்திருக்கலாம்.