சினிமா

REWIND 2025: சரோஜா தேவி முதல் ரோபோ சங்கர் வரை…கண்ணீரில் மூழ்க வைத்த பிரபலங்கள் மறைவு!

ச. ஆனந்தப்பிரியா

பெரிய திரையில் இதுநாள் வரை ரசிகர்களை மகிழ்வித்த பல ஜாம்பவான்களின் மறைவு ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பேரிழப்பு. அப்படி இந்த வருடம் பிரியாவிடை பெற்ற பிரபலங்கள் யார் யார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

நடிகர், இயக்குநர் மனோஜ்

மனோஜ்

‘இயக்குநர் இமயம் என கொண்டாடப்படும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. ‘தாஜ்மஹால்’, ’சமுத்திரம்’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’ உள்ளிட்டப் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் ஹீரோவாக பெரிதாக சோபிக்கவில்லை. பின்பு, ‘மாநாடு’, ‘ஈஸ்வரன்’ போன்ற படங்களிலும் இணையத் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார். 48 வயதே ஆன மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக இந்த வருடம் மார்ச் மாதம் காலமானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகை சரோஜா தேவி

சரோஜா தேவி

பழம்பெரும் நடிகையும் பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை வென்றவருமான நடிகை சரோஜா தேவி இந்த வருடம் ஜூலை மாதம் வயது மூப்பு (87) காரணமாகவும் உடல்நலக் குறைவாலும் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரச்வதி என ரசிகர்கள் கொண்டாடிய நடிகை சரோஜோ தேவி பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக கலக்கியவர். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்டப் பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றார். உடல்நலன் காரணமாக பின்னாளில் படங்கள் நடிப்பதை குறைத்தவர் ‘ஆதவன்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

நடிகர் மதன் பாப்

மதன் பாப்

தனது வித்தியாசமான சிரிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் மதன் பாப். இயக்குநர் பாலு மகேந்திராவின் அறிமுகம். ’ஃபிரண்ட்ஸ்’, ‘யூத்’, ‘வில்லன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என்பதையும் தாண்டி அவருக்கு இசைக்கலைஞர் என்ற இன்னொரு முகமும் உண்டு. புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 71 ஆவது வயதில் காலமானார்.

நடிகர் ரோபோ சங்கர்

ரோபோ சங்கர்

தன் தனித்துவமான உடல்மொழியாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களை மகிழ்வித்த ரோபோ சங்கர் தனது 47 ஆவது வயதி காலமானார். அவரது இந்த எதிர்பாராத மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மதுரையை பூர்விகமாகக் கொண்டவரான ரோபோ சங்கர் மிமிக்ரி, திருவிழா காலங்களில் மேடைகளில் ரோபோ வேடம் போட்டு கலக்குவது என வலம் வந்தவர். தனியார் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலக்கியவர் பின்பு சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வந்தார். மதுப்பழக்கத்தினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவரது உயிரைப் பறித்தது.

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஏவிஎம் சரவணன் உடல்நலக் குறைவு காரணமாக இந்த மாதம் நான்காம் தேதி மறைந்தார். பணிந்த கைகளும் தன்மையான தோற்றமும் கொண்ட ஏவிஎம் சரவணன் தமிழ், தெலுங்கு உள்ளிட்டப் பல மொழிகளில் காலத்தால் அழியாத பல கிளாசிக் ஹிட் படங்களைக் கொடுத்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் ரஜினி, கமல் போன்ற பல நடிகர்களுக்கு மறக்க முடியாத ஏவிஎம் நிறுவனத்தை நிர்வகித்த சரவணன் தமிழ் சினிமாவில் பல புதுமுயற்சிகளையும் புகுத்தி இருக்கிறார். அவரது மறைவு நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.

இவர்கள் தவிர நடிகர் கோட்டா சீனிவாச ராவ், ராஜேஷ், ஹூசைனி, ‘துள்ளுவதோ இளமை’ அபிநய், நடிகை பிந்து கோஷ் உள்ளிட்டோரின் இழப்பும் திரையுலகினர் மத்தியில் நீங்கா வடுவாக மாறியது.