சினிமா

REWIND2025: ‘மோனிகா பெல்லூசி’ முதல் ‘ஊரும் பிளட்டும்’ வரை.. இந்த வருடத்தில் வைரல் பாடல்கள் என்னென்ன?

ச. ஆனந்தப்பிரியா

வைரல் பாடல்கள் இல்லாத தமிழ் சினிமாவா? திரும்பும் திசையெங்கும் காதுகளில் ஒலித்து ரீல்ஸ் உலகை ஆட்சி செய்த இந்த வருடத்தின் பாடல்கள் என்னென்ன என்பதை ரீவைண்ட் செய்யலாமா?

மோனிகா பெல்லூசி- ’கூலி’

முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு அனிருத் இசையமைக்கிறார் என்றால் நிச்சயம் ஒரு வைரல் பாட்டு பார்சல். அதிலும், ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை என்றால் ‘வைப்’ சற்று தூக்கலாகவே இருக்கும். ’’ஜெயிலர்’ படத்தின் கதை சுமார்தான். அனிருத் பின்னணி இசைதான் படத்தை காப்பாற்றியது’ என ரஜினியே ஓப்பன் ஸ்டேட்மெண்ட் தரும் அளவிற்கு இறங்கி வேலை பார்ப்பார் அனி. அந்த வகையில், இந்த வருடத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானது ‘கூலி’ திரைப்படம். சிவப்பு நிற உடையில் அழகு பதுமையாக பூஜா ஹெக்டே ‘மோனிகா பெல்லூசி…’ பாடலுக்கு ஆட்டம் போட, செளபின் சேட்டாவும் பாடலில் ஸ்கோர் செய்ய விஷ்ணு எடவன் பாடல் வரிகளில் சுப்லாஷினி குரலும் பெப் ஏற்ற யூடியூப்பில் எட்டு கோடி பார்வைகளை கடந்து இன்றும் பலரது பிளேலிஸ்ட்டை ஆள்கிறாள் மோனிகா. இந்தப் பாடலை பெரிய திரையில் பார்த்து திரையரங்குகளில் ஆட்டம் போடவே பலபேர் வந்துபோனது தனிக்கதை.

முத்த மழை- ‘தக் லைஃப்’

மணி ரத்னம்- கமல்ஹாசன் கூட்டணியில் இந்த வருடம் வெளியான ‘தக் லைஃப்’ படம் வேண்டுமானால் தோல்வியை தழுவி இருக்கலாம். ஆனால், ரஹ்மான் இந்தப் படத்திற்காக இசையமைத்த பாடல்கள் ஏமாற்றவில்லை. அதில் பட்டிதொட்டியெங்கும் தாறுமாறு ஹிட் அடித்த பாடல்களில் ஒன்று சிவா ஆனந்த் எழுதிய ‘முத்த மழை…’. ஒரிஜினல் வெர்ஷனை தீ பாடியிருக்க, படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் சின்மயி பாடியிருந்தார். அவரது வருடும் குரல் பாடலுக்கு புது அர்த்தம் சேர்க்க பாடலைக் கொண்டாடி தீர்த்தனர் இணையவாசிகள். படத்திலும் சின்மயி வெர்ஷன்தான் வேண்டும் என ரசிகர்கள் போர்க்கொடி தூக்க சின்மயி வெர்ஷனும் இல்லை தீ வெர்ஷனும் இல்லை என படத்தில் ’முத்த மழை…’ பாட்டுக்கு கத்தரி போட்டு டென்ஷனாக்கினார் இயக்குநர் மணி ரத்னம்.

கனிமா- ‘ரெட்ரோ’

’ஆத்தி சந்தனக்கட்ட…ஆட்டம் பம்பரக்கட்ட….’என ஒட்டுமொத்த தமிழகத்தையே ‘கனிமா’ பாடல் மூலம் ஆட்டம் போட வைத்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தின் கதை சொதப்பி இருந்தாலும் ‘கனிமா’ பாட்டின் நடன அசைவுகளும் பெரிய திரையில் பாடல் தந்த உற்சாகத்திற்கும் குறைவில்லை. ’என் ஆசை மைதிலியே…’ பாடல்தான் கனிமா பாடலுக்கு இன்ஸ்பிரேஷன் என்றார் சந்தோஷ் நாராயணன். விவேக் பாடல் வரிகள் எழுதிய இந்தப் பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்திருக்கிறது இந்த கனிமா பாடல்.

கோல்டன் ஸ்பேரோ- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. ஜிவி பிரகாஷ் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல் ஜென் ஸீ இளசுகளிடம் செம ஹிட். அறிவு வரிகளுக்கு மடிசார் கட்டி பிரியங்காவின் டான்ஸூம் ஹிட்டாகி படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பைக் கொடுத்தது.

ஊரும் பிளட்டும்- ‘டியூட்’

தனிப்பாடல்கள் மூலம் கவனம் பெற்ற சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமான படம் ‘டியூட்’. படத்தின் முதல் பாடலாக பால் டப்பா எழுதிய ’ஊரும் பிளட்டும்’ பாடல் வெளியானது. பாடல் வரிகள் புரியவில்லை, ஓவர் ஹைப் என்று சில பல விமர்சனங்கள் இந்தப் பாடல் மீது வந்திருந்தாலும் 136 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்து இணையத்தில் டிரெண்டானது.

இந்தப் பாடல்கள் தவிர்த்து ’ஆரோமலே’ படத்தின் எப்படி வந்தாயோ, ’காதலிக்க நேரமில்லை’ படத்தின் என்னை இழு இழு இழுக்குதடி, ’விடாமுயற்சி’ படத்தின் ஸ்வதீகா, ’டிராகன்’ படத்தின் வழித்துணையே, ’தலைவன் தலைவி’ படத்தின் பொட்டல முட்டாயே உள்ளிட்டப் பல பாடல்கள் இந்த ஹிட் லிஸ்ட்டில் உள்ளது. இந்தப் பாடல்கள் தவிர்த்து இந்த வருடத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல்கள் என்ன என்பதை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.