சந்தோஷ் சிவன்
சந்தோஷ் சிவன் 
சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெறும் சந்தோஷ் சிவன்!

Staff Writer

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்காக வழங்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது இந்த ஆண்டு சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சந்தோஷ் சிவன். 1986இல் நிதியுடே கதா என்கிற மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதேபோல், பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இதுவரை 12 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

தற்போது, விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மும்பைக்கார் படத்தை இயக்கி முடித்துள்ளார். கலியுகம், மோகா ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்காக வழங்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் உலகளவில் புகழ்பெற்ற 10 பேர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். மேலும், இவ்விருதினைப் பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையையும் சந்தோஷ் சிவன் பெறுகிறார்.

கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. நிறைவு நாளுக்கு முந்தைய நாளான 24 ஆம் தேதி சந்தோஷ் சிவனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.