தனக்கு சொந்தமான 15,000 சதுர அடி கொண்ட வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் வாடகை வீடு ஒன்றில் குடியேறியுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.
"சொந்தமா வீடு தான் வாங்கியிருக்கேன். ஆனா, மொத்த ஊரையே விலைக்கு வாங்கியிருக்க மாதிரி சந்தோஷமா இருக்கு" இந்த வசனம் சமீபத்தில் வெளியான '3BHK' படத்தில் நடிகர் சரத்குமார் பேசி இடம்பெற்றது. சொந்த வீடு என்பது பலருக்கும் கனவு, உணர்வுப்பூர்வமான விஷயம். அப்படியிருக்க, ஈசிஆரில் தனக்கு சொந்தமான ஆடம்பர பங்களாவை விட்டு, ஆழ்வார்ப்பேட்டையில் வாடகை வீடு ஒன்றில் நடிகர் சரத்குமார்- ராதிகா தம்பதி குடியேறியுள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சரத்குமார் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில், "ஈசிஆரில் எங்களுக்கு சொந்தமாக 15,000 சதுர அடியில் வீடு உள்ளது. வீட்டில் உள்ள 7 கதவுகளையும் தினந்தோறும் திறந்து மூடுவதே பெரிய வேலை. மேலும், அந்த வீட்டை பராமரிக்கவே கிட்டத்தட்ட 15 பணியாட்கள் தேவைப்பட்டார்கள். ஆனால், அது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. நானும் படப்பிடிப்பு மற்றும் மற்ற வேலைகள் காரணமாக அடிக்கடி வெளியே சென்றுவிடுவேன். மகனும் வெளிநாட்டில் படிக்கிறார். மகள்களுக்கும் திருமணம் ஆனதால் அவரவர் வீட்டில் வசிக்கின்றனர். அதனால், அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது ராதிகாவுக்கு உணர்வுப்பூர்வமாக சிரமமாக இருந்தது. இந்த காரணத்திற்காகதான் அந்த வீட்டை ஐடி நிறுவனம் ஒன்றிற்கு வாடகைக்கு விட்டுவிட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எளிமையான வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளோம்" என்றார்.
முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டை, தான் பார்த்து பார்த்து கட்டியதாக பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் சரத்குமார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரோஜர் மூர், ஜாக்கி சான் என சினிமா லெஜண்ட்ஸ் பலரின் புகைப்படங்கள் கொண்ட சுவர் ஒன்றை தனது மகன் ராகுல் வடிவமைத்தது இந்த வீட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று எனவும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சரத்குமார்.