விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களிலும் சினிமாவிலும் நடித்துள்ள நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்தத் தொடரில் போலீஸ் அருணின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. இவர் பாக்கியலட்சுமி, பனிவிழும் மலர்வனம் உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள். தன் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார் ராஜேஸ்வரி.
இந்நிலையில் நேற்று அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரை மீட்டு சைதாப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
அவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் ராஜேஸ்வரியின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.