மூன்று தினங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கப்பட்ட சூர்யா, த்ரிஷா காம்போவின் ‘கருப்பு’ படம் இன்று ரிலீஸாகவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இப்படம் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே ரிலீஸுக்குத் தயாராக இருந்தாலும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வந்தது.
பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்பட்டு, இந்தப்படம் இன்று (மே 14,2026 ஆம் தேதி) முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. இருக்கிற ஒரு சில பிரச்சினைகளை சுலபமாகத் தீர்த்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் மூன்று தினங்களுக்கு முன்பே முன்பதிவையும் தொடங்கியிருந்தார்கள்.
அதையொட்டி,காலை ஒன்பது மணி சிறப்புக்காட்சிக்கும் விஜய் அரசிடம் அனுமதி பெற்றிருந்தார்கள்.
ஆனால்,நேற்றிரவு பத்துமணியளவில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட பதிவில்,
அன்பான ரசிகர்களே, தற்போதைய நிலைமைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை.தயாரிப்பாளர்கள் தடைகளைச் சரிசெய்ய தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள்.இந்தப்படத்துக்கு எப்போதுமே தடைகள் இருந்திருக்கின்றன, ஆனால் எப்படியோ கடவுள் அதையெல்லாம் கடந்து வரச்செய்து, 32 மாதங்களுக்குப் பிறகு இதோ நாங்கள் இங்கே இருக்கிறோம். இந்தமுறையும்,அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது ,முழுமையான நம்பிக்கை.
கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான்.கருப்பு நாளைக்கு காலைல செமயா ரிலீஸ் ஆகும்..!!! நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!
என்று பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை தகர்ந்துபோன நிலையில், நள்ளிரவு ஒருமணியளவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!என்று பதிவிட்டிருந்தார்.
அந்த வருத்தத்தை உறுதி செய்யும்வண்ணம் இன்று காலை படம் வெளியாகவில்லை.
இதுகுறித்து பட வட்டாரத்தில் விசாரித்தபோது,
இந்தப்படத்துக்காக வாங்கியிருந்த கடன் அதற்கான வட்டி, இந்நிறுவனத்தின் இதற்கு முந்தைய படங்களுக்காகக் கொடுக்க வேண்டிய பாக்கிகள், இப்படத்தில் பணியாற்றியவர்களுக்குக் கடைசிநேரத்தில் கொடுக்க வேண்டிய தொகை ஆகிய எல்லாம் சேர்ந்து சுமார் 75 கோடி வரை பிரச்சினைகள் பெண்டிங்காம்.
இவற்றில் மதுரை அன்பு, திருப்பூர் சுப்பிரமணியன், ஜஸ்வந்த் பண்டாரி ஆகியோருக்குக் கொடுக்க வேண்டிய கடன்கள் பெரும்பான்மையாக என்கிறார்கள்.
பேச்சுவார்த்தை நேற்று மாலை தொடங்கி விடியவிடிய நடந்துகொண்டிருக்க, இன்று மதியம் 12 மணி காட்சியாவது படத்தைத் திரையிட்டுவிட வேண்டும் என்று தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கடைசிநேரத்தில் நடிகர் சூர்யா சுமார் 25 கோடி வரை சொந்தப் பொறுப்பு ஏற்க முன்வந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
படம் இன்று மாலைக்காட்சிகள் முதல் ரிலீஸாகும் என்கிறார்கள்