பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை எடுத்திருந்த சமயம். அவர் அந்த படத்தில் கார்த்திக்கையும் ராதாவையும் அறிமுகப்படுத்தியிருந்தார். கார்த்திக்குக்கு பதினேழு வயது. ராதாவிற்கு பதினாறு வயது.
ஒரு பத்திரிகையாளர்,“சின்ன வயசுப்பசங்க காதலிக்கிற மாதிரி படம் எடுத்திருக்கீங்களே, இதனால சமூகம் சீரழிஞ்சி ‘ராதா’?” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பாரதிராஜா,"யோவ். எந்த வயசுல இயல்பா காதல் வருமோ அதைத்தான் நான் படத்தில எடுத்திருக்கேன். நீங்க இதுவரைக்கும் அம்பது வயசுல இருக்க எம்ஜிஆரும் நாப்பது வயசுல இருக்க சரோஜா தேவியும் காதலிக்கறதையே பாத்துட்டு இதைப் பாக்கிறனால உங்களுக்கு நான் சின்ன வயசுப் பசங்கள காதலிக்க வச்சு படம் எடுத்த மாதிரி தெரியுது” என்று கேள்வி கேட்டவரின் காதைத் திருகினார்.
அப்பிடி ஒரு காலம் இருந்தது. திரையுலகில் முதல் இடத்தில் ஆறு ஏழு கதாநாயகர்கள் இருப்பார்கள். எந்த கதையாக இருந்தாலும் அவர்கள்தான் அதில் ஹீரோ. அது கல்லூரி ஆசிரியர் கதையாக இருந்தாலும் சரி. கல்லூரி மாணவன் கதையாக இருந்தாலும் சரி.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன்கள் கல்லூரி மாணவர்களாக நடித்த படங்களையெல்லாம் பார்த்து வளர்ந்த சமூகம்தான் நம் சமூகம்.
ரத்தத்திலகம் படத்தில் நடிகர் திலகமும் சாவித்திரியும் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி தோழர்கள். அந்த படத்தில் நடிக்கும் போது சிவாஜிக்கு நாற்பத்தைந்து வயது. சாவித்திரிக்கு முப்பத்தைந்து வயது. பசுமை நிறைந்த நினைவுகளே, பாடிப் பறந்த பறவைகளே என்ற புகழ்பெற்ற பாடல் அந்த படத்தில்தான் இடம் பெற்றிருக்கும்.
அதற்குப் பின் காந்த், தேங்காய் சீனிவாசன் இன்னும் சொல்லப்போனால் தாத்தா வெண்ணிற ஆடை மூர்த்தியெல்லாம் கல்லூரி மாணவர்களாக நடித்திருக்கிறார்கள்.
வரைந்த மீசையோடு காந்தும் ஸ்டெப் கட்டிங்கோடு தேங்காய் சீனிவாசனும் கல்லூரி மாணவர்களாக வருவார்கள். கல்லூரி வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்து சீட்டு விளையாடுவார்கள். கல்லூரிக் காட்சியாக பிரதானமாக அந்த காட்சியே இடம்பெற்றிருந்த நினைவுதான் இருக்கிறது.
மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான் என்ற புகழ்பெற்ற புரட்சிப் பாடலை வரைந்த மீசையோடு காந்த் பாடும்போது மாணவர்களுக்கு நரம்பு புடைக்கும், மயிர்கூச்செறியும்,அந்த காலத்து மாணவர்களுக்கு! (இந்த காலத்து மாணவர்கள் பார்த்தால், இது என்ன முதியோர் கல்லூரியா என்றுதான் தோன்றும்).
அவர்களுக்குப் பின் ரஜினியும் கமலும் கல்லூரி மாணவர்களாக ஆங்காங்கே சின்னதாக தலையை காட்டினார்கள்
ஒருவழியாக கல்லூரி மாணவர்கள் கதை ஓரளவு யதார்த்த வயதிற்கே வந்ததே ஒருதலை ராகம் காலத்தில்தான். அதுவும் கூட ரொம்ப இறங்கி வந்து விடவில்லை. அதில் ‘கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு’ என்று ராஜா பாடிய பொழுது அவருக்கு முப்பது வயதாவது இருக்கும்.
நீண்டகாலம் மோகனும் இதயம் முரளியும் கல்லூரி மாணவர்களாகவே வலம் வந்தார்கள். முரளியின் கடைசி காலம் வரை அவரை கல்லூரி மாணவராக வைத்து கதை சொல்ல நூறு உதவி இயக்குநர்களாவது வரிசையில் நின்ற காட்சியை எல்லாம் கோடம்பாக்கம் பார்த்திருக்கிறது.
பின் கல்லூரி காதல் கதைகளை ஒரு காலகட்டம் முழுவதும் இயக்குநர் கதிர் ஆக்கிரமித்திருந்தார். அவர் ஓரளவு வயதைக் குறைத்து இருபத்தைந்து இருபத்தி ஏழு வயது இளைஞர்களை கல்லூரி மாணவர்களாக காட்டும் போக்கைக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரும் முரளியை வைத்துத்தான் தன்னுடைய சகாப்தத்தை ஆரம்பித்திருந்தார். அதன்பின்தான் குணாலை வைத்து காதலர் தினமெல்லாம் எடுத்தது.
பதின்பருவத்து நாயகர்கள் நடிக்கும் படங்களை திரையில் காணமாட்டோமா என்ற ஏக்கம் தமிழ் ரசிகர்களுக்கு நீண்டகாலமாகவே இருந்தது. இந்திய ரசிகர்களுக்கே என்று கூட சொல்லலாம். ஏனென்றால் இந்தியா முழுவதுமே மூத்த நடிகர்களே வெள்ளித்திரைகளில் கல்லூரிகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
சென்ற பத்து ஆண்டுகளில் மலையாள சினிமாவே இதை மெதுவாக உடைக்க ஆரம்பித்தது. அந்த ஆரம்பம் நிவின்பாலி நடித்த பிரேமத்தில் தொடங்கியது எனலாம். பிரேமம் இளைஞர்களின் கொண்டாட்டத்தை சொன்ன படமாக இருந்தது. கல்லூரியின் இயல்பான வாழ்க்கையும் கல்லூரி மாணவர்களின் இயல்பான காதலும் பிரதானமாக அந்த படத்தில் காட்சியாகி இருந்தது. அதில் வந்த மலர் டீச்சருக்கு மனசுக்குள் காதல் கடிதம் எழுதாத இளைஞர்களே இல்லை. அப்படி எழுதாதவர்கள் இளைஞர்களே இல்லை.
பின்னர் மோகன்லால் மகன் பிரனவ் மோகன்லால் நடித்த ஹிருதயம், பின் ஜர்னி ஆஃப் லவ் 18 ப்ளஸ், தண்ணீர் மாத்தான் தினங்கள், சூப்பர் சரண்யா போன்ற படங்கள் அடுத்தடுத்து பதின் பருவத்து வாழ்க்கையை பதின்பருவத்து நடிகர்களையே கொண்டு உருவான திரைப்படங்களாக திரைக்கு வந்து, திரையரங்கிற்கு டீன்ஏஜ் ரசிகர்களை அலைஅலையாக வர வைத்தன. பிரேமலு அந்த வரிசையில் உச்சம். அந்த படத்தையும் அந்த படத்தின் நஸ்லன், மமிதா பைஜு ஜோடியையும் தென்னிந்திய திரையுலகம் தலையில் வைத்து கொண்டாடியது.
2கே கிட்ஸ் என்றால் அசல் டூ கே கிட்ஸ் இவர்கள்தான். இந்தப் படத்தில் நஸ்லனும் மமிதா பைஜுவும் நடித்த போது அவர்களுக்கு சரியாக இருபது வயது. டீனிலிருந்து டீயைத் தொட்ட வயது. அதனாலோ என்னவோ அது இளைஞர்களின் இதயம் தொட்ட படமாக இருந்தது.
ஆனாலும் தமிழ்த் திரையுலகில் அந்த தாக்கம் ஏற்பட சற்று கால தாமதமே ஏற்பட்டது. ஒருவழியாக பிரதீப் ரங்கநாதன் வருகையோடுதான் தமிழில் அந்த வசந்தகாலம் தொடங்கியது.
இளைஞர்களால், இளைஞர்களுக்கு இளைஞர்களின் வாழ்க்கையை சொல்லும் புதிய சினிமாக்கள் இப்பொழுது கோடம்பாக்கம் எங்கும் வலம் வர தொடங்கியிருக்கின்றன. உண்மையில் தமிழ் சினிமா ஒரு புதிய ரத்தம் பாய்ந்த உற்சாகத்தில் வலம் வரத் தொடங்கியிருக்கிறது
பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த நாயகனாக உருவாகி இருக்கிறார்..அவரின் லவ் டூடே, டிராகன், ட்யூட் மூன்று படங்களும் சக்கை போட்டு போட்டு தொடர்ந்து நூறு கோடி ரூபாய்கள் வசூலித்த படமாக சாதனை செய்திருக்கிறது.
திரையில் அவர்கள் பேசும், அவர்களுடைய வாழ்க்கையில் உண்மையிலயே இளமை துள்ளுகிறது. புதுமை மிளிர்கிறது. காதலைப் பற்றியும் பிரேக்கப்பைப் பற்றியும், எக்ஸ்களைப் பற்றியும், டேட்டிங் ஆப்களைப் பற்றியும் அவர்கள் மொழிகளில் உரையாடுகிறார்கள். அது இளைஞர்களுக்கு மிக நெருக்கமான உரையாடலாக இருக்கிறது
அவரைத் தொடர்ந்து இளம் இயக்குநராக அபிஷன் ஜீவின்த் டூரிஸ்ட் ஃபேமிலி தர, அந்த படம் தென்னிந்திய திரையுலகையே ஒரு அசை அசைத்தது. ஆஸ்கருக்கெல்லாம் அனுப்பப்பட்டு ஆஸ்கரை தட்டிவிடுமோ என்ற கிலியை பல பழைய இயக்குநர்களுக்கு ஏற்படுத்தியது.
அதன்பின் கிஷன்தாஸ் நடித்து, ஷாரங் தியாகு இயக்கி ஆரோமலே வந்து சக்கை போடு போட, பவிஸ் நடித்த (தனுஷின் அக்கா பையன்) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஒரு கலக்கு கலக்க, அபிஷன் ஜீவின்த்தை கதாநாயகனாக வைத்து வித் லவ் திரைப்படம் வர, அதுவும் திரையரங்குகளில் கொண்டாட்டமாக, அது இப்பொழுது கென் கருணாஸ் நடித்து, இயக்கி, திரையரங்குகளில் பட்டாசாக தெறித்துக்கொண்டிருக்கும் யூத் படம் வரை வந்து சேர்ந்திருக்கிறது.
கென் கருணாஸ் வெற்றிமாறனிடமும் தனுஷிடமும் சினிமா கற்றுக்கொண்டு இயக்குநராகவும் கதாநாயகனாகவும் களம் இறங்கியிருக்கிறார். மற்றுமொரு கமிங் ஆஃப் ஏஜ் கதைதான் கதைக்களம்.
பள்ளி மாணவர்கள் கென் கருணாஸ் படத்தை முதல் நாள் முதல் காட்சியாக பார்க்க முடிவெடுத்து திரையரங்கிற்கு வருவதும் தன் வயதையொத்த ஒருவனை திரையில் கண்டு ஆனந்தப்படுவதும் இந்த ஜென்மத்தில் தமிழ்திரையுலகில் சாத்தியமாகும் என்று சில ஆண்டுகள் முன்னர்வரை யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த டிரெண்டை இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. பெருசுகள் இனி ஏஐ, அதீத மேக் அப் உதவியால் இளைஞராக நடிக்க பிரயத்தனப்படுவதை, முக்கியமாக பேத்தி வயது ஹீரோயின்களுடன் ஜோடி போடுவதை விட்டு தங்கள் வயது பாத்திரங்களில் நடிக்கத் தொடங்குவது நல்லது. புகை பிடித்தால் புற்றுநோய் உண்டாகும் என்கிற எச்சரிக்கை போல் இதையும்் அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும்.