ரோபோ சங்கர் 
சினிமா

RIP ROBO SHANKAR: எமனாக மாறிய மண்ணெண்ணெய்; நிராசையாகிப் போன ரோபோ சங்கர் கனவு!

ச. ஆனந்தப்பிரியா

தன் தனித்துவமான உடல்மொழியாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களை மகிழ்வித்த ரோபோ சங்கர் காலமாகியுள்ளார். அவரது இந்த எதிர்பாராத மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்களும் ரசிகர்களும் அடிக்கோட்டிட்டு காட்டுவது ஒன்றுதான். அது 'மதுவால் பறிபோன உயிர்'. ஒரு நாளைக்கு 75 முட்டை வெள்ளைக்கரு சாப்பிட்டு, கடும் உடற்பயிற்சி மூலம் தன் உடலை கட்டுமாஸ்தாக மாற்றிய பாடிபில்டர் ரோபோ சங்கர். மதுரையை பூர்விகமாகக் கொண்டவரின் குடும்பம் எளிய பின்னணி கொண்டது. 46 வயதில் அவரின் இந்த அகால மரணத்திற்கு என்ன காரணம்?

 சினிமாவுக்கு பெயர் பெற்ற மதுரையில் பிறந்தவருக்கு இயல்பாகவே கலை ஆர்வம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. பள்ளிக்காலங்களிலேயே மிமிக்ரி, நாடகங்களில் வேடம் கட்டி கலக்கியவர் பின்னாட்களில் ஊர் திருவிழா மேடையில் வெள்ளை நிற மெட்டல் சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடித்ததே இவரை 'ரோபோ' சங்கராக மாற்றியது. ஆனால், இந்த மெட்டல் சாயமே இவருக்கு எமனாக மாறியது சோகம். அவர் நினைவுகள் குறித்து நடிகர் இளவரசு பகிர்ந்து கொண்டபோது, "ரோபோ சங்கர் ஆரம்ப காலத்தில் ரோபோ உள்ளிட்ட பல்வேறு வேடங்களை இட்டு நடிக்கும்போது ஸ்டீல் பெயிண்டை உடல் முழுவதும் நிறைய பூசிக்கொண்டு நடிப்பார். ஒவ்வொரு ஷோவிலும் அப்படித்தான் நடிப்பார். ஒவ்வொரு ஷோவுக்கும் 300 ரூபாய் கொடுப்பார்கள். வீட்டுக்குத் திரும்பி வந்ததும் மண்ணெண்ணெயைப் போட்டுத்தான் அதை நீக்க முடியும். இவ்வாறு செய்து கொண்டே இருந்ததில், ரோபோ சங்கருக்கு தோலில் இருந்த இயற்கையான பாதுகாப்பு முழுவதும் போய்விட்டது. ஏற்கெனவே இளமைக் காலத்தில், அவருக்கு மஞ்சள் காமாலை வந்திருந்தது. அதற்குப் பிறகு வயது ஏற ஏற அவர் உடலை முறையாகப் பராமரிக்கவில்லை. இன்னும் அவர் கவனமாக இருந்திருக்க வேண்டும்" என்றார் வருத்தமுடன்.

ஊர்த் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் சினிமா வாய்ப்புத் தேடி தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்தார். வாய்ப்பு தேடி வந்தவரை வாரி அணைத்துக் கொண்டது சின்னத்திரை. 'கலக்கப்போவது யாரு?', 'அது இது எது' என தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இவர் மீது பெரும் வெளிச்சம் பாய்ச்சியது. குறிப்பாக விஜயகாந்த், கமல், ரஜினி என முன்னணி கலைஞர்களின் குரலை இவர் மிமிக்ரி மூலம் பிரதியெடுத்தார். அந்த வாய்ப்பை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாலும் பெரிய திரையில் உடனே சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கவில்லை. 

'படையப்பா', 'ரெளத்திரம்' போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் கூட்டத்தில் ஒருவனாக வந்துபோனவரை தனி ஒருவனாக அடையாளம் காட்டிய படங்கள்:  'வாயை மூடி பேசவும்', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'மாரி' போன்ற படங்கள் தான். குறிப்பாக 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் ரவி மரியாவுடன் இவர் செய்த ஆறு மணி காமெடி பட்டிதொட்டி எங்கும் இவரை பிரபலமாக்கியது. இந்த அன்பின் பேரிலேயே தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்கள் அவர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசனை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். அவரது படங்கள் வெளியாகும் நாளில் தியேட்டர் வாசலிலேயே தவம் கிடப்பார். தன் மகள் இந்திரஜா திருமணத்திற்கும், பின்பு பேரனுக்கு 'நட்சத்திரன்' எனப் பெயர் வைக்கவும் கமலுக்கே முதல் மரியாதை கொடுத்தார் ரோபோ சங்கர். ஆனால், தனது மானசீக குருவுடன் இதுவரை ஒரு படம் கூட அவர் இணைந்து நடித்ததில்லை. விரைவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு அது நிராசையாகிப் போனது சோகம். ரோபோ சங்கர் மறைவு என செய்தி வந்ததுமே 'தம்பி எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?' என கண்ணீருடன் இரங்கற்பா பதிவிட்டார் கமல்ஹாசன்.

கமல் எக்ஸ் தளத்தில்

ரோபோ சங்கர் என்றாலே பலருக்கும் அவரது ஆஜானுபாகுவான உடலும் சிரிப்பும்தான் நினைவுக்கு வரும். அப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென அவர் உடல் மெலிந்து போன தோற்றம்  ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் மதுப்பழக்கத்திற்கு ஆளான ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தார். பின்பு, மதுவை யாரும் தொடாதீர்கள் என அவரே பிறருக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு மதுப்பழக்கத்தில் இருந்தும் உடல்நலக் குறைவில் இருந்தும் மெல்ல மீண்டு வந்தார். மருத்துவர்கள் அறிவுரைப்படி மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

மகள் இந்திரஜாவுக்கு திருமணத்தை சீரும் சிறப்புமாக முடித்தவர் பேரனுடனும் நேரம் செலவிடத் தவறவில்லை. நாளை மறுநாள் பேரனுக்கு சொந்த ஊரில் தடபுடலாக காதுகுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை கொடுத்தபோதிலும் ஏற்கனவே வந்த மஞ்சள் காமாலையால் அவரது இரைப்பை குடலில் இரத்தக் கசிவு ஏற்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழக்கும் அளவுக்கு அவரது நிலை மோசமானதாக மாறியது. இதுவே அவரது இறப்புக்கு காரணம் எனவும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி, மகள், பேரன், சினிமா என பிஸியாக வலம் வந்தவரின் வாழ்வை பறித்திருக்கிறது மது பழக்கம். கலைஞர்கள் மறைந்தாலும் அவர்கள் கலை மறைவதில்லை!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram