அறிமுகம் சதீஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன், ஆக்சன் குயீன் ஐஸ்வர்யா ராஜேஷ், வளரும் நடிகர் பிரவீன் ராஜா, (எப்போது வளர்ந்துவிட்ட?) நடிகர் [ பிரபு ] ராம்குமார் கூட்டணியினர் இணைந்து ரசிகர்களை குலை நடுங்க வைக்கும் முயற்சியில் உருவாகியிருக்கும் படம்.
அர்ஜூனுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் எப்படிப்பார்த்தாலும் ஜோடிப் பொருத்தம் அமைந்துவராதே என்று குழம்பவேண்டாம். இருவரும் வெவ்வேறு டிராக்குகளில் டிராவல் ஆகி க்ளைமாக்ஸ் காட்சியில் ‘சட்டத்தை மட்டுமில்ல... அந்த சட்டத்துக்கு எதிரா நடக்கிறவங்களை எப்பிடி போட்டுத்தள்ளணும்னு எங்களுக்குத் தெரியும் ‘ என்று நன்றி கார்டு போடுகிறார்கள்.
கதை இதுதான். ஜெபா பிரபல நாவலாசிரியர். படம் துவங்குகிற முதல் காட்சியிலேயே மாஸ்க் அணிந்த ஒரு உருவத்தால் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவர் கடைசியாக எழுதி வெளிவராமல் இருக்கிற நாவலின் பெயர் ‘காவேரிக்கறை’. இந்த நாவலை கையில் எடுத்துக்கொண்டு அர்ஜூன் துப்புத் துலங்க, அந்த ஜெபா தனது இறப்புக்கு முன்பு பயங்கர குற்ற உணர்ச்சியில் சர்ச்சில் பாவ மன்னிப்பெல்லாம் கேட்டு இறக்கும் நிலையில் கொல்லப்பட்டவர் என்று தெரிகிறது.
இன்னொரு டிராக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரவீண் ராஜா தேடித்தேடி லவ் பண்ணுகிறார். அவர்களுக்கு ஒரு மாண்டேஜ் டூயட் கொடுமையும் இருக்கிறது. ஆனால் அந்தக் காதலுக்குப் பின்னால், படுபயங்கர ட்விஸ்ட் [என்று டைரக்டர் நினைத்திருக்கிற ] இருக்கிறது.
க்ளைமேக்ஸில் நாவலாசிரியர் தவிர்த்த மிச்ச குற்றவாளிகளை நடுங்க நடுங்க ஐஸூம் அர்ஜுனும் கொலை செய்து நம்மை கொஞ்சம் ஓவராகவே கொலை நடுங்க வைக்கிறார்கள்.
தமிழ் சினிமாக்காரர்களுக்கு எல்லாமே வியாபார கச்சாப்பொருள்தான். கடந்த இரு வருடங்களாக மீண்டும் மீண்டும் அக்கறை கட்டப்படுகிற குழந்தை பாலியல் வன்கொடுமைதான் இப்படத்தின் கதையும். கூடுதல் இரக்கத்தைக் கோருவதற்காக அக்குழந்தையை ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தையாகக் காட்டி துயரப்’படுத்துகிறார் இயக்குநர் சதி(ஷ்)கார லட்சுமணன்.
அர்ஜூனும் ஐஸ்வர்யா ராஜேஸும் இந்தக் கதைக்கு இதுபோதும் என்று கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்கள். காமெடி என்கிற பெயரில் பிராங்க்ஸ்டார் ராகுல் அடிக்கிற கூத்துகள் புதுவித வன்கொடுமை.
கதை என்னவோ கொஞ்சம் விறுவிறுப்பாக போகிறதுதான். ஆனால் மையக்கருத்து மலிவானது.
ஒளிப்பதிவு சரவணன் அபிமன்யூ. தேவலாம். இசை பரத் ஏசீவகன். முதல் காட்சியில் கீபோர்டில் வைத்த கையை ரன்னிங் டைட்டில்கள் வரை எடுக்கவேயில்லை. ரசிகர்கள் காதுகள் பாவம் பாஸ்.
ஆக ரசிகர்கள்தான் குலைநடுங்கி தியேட்டரை விட்டு வரவேண்டியிருக்கிறது!