கெளரி கிஷன்  
சினிமா

“பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க செயல் இது!”

ச. ஆனந்தப்பிரியா

கோவையில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கியே குற்றம் சுமத்தப்பட்ட அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில் சினிமாத்துறையில் இன்னொரு கூத்தும் நடந்தேறியிருக்கிறது.

“ஹீரோயினைத் தூக்கி இருக்கிறீர்கள். அவரின் எடை என்ன?” என்று நடிகை கெளரி கிஷனை உருவகேலி செய்யும் விதமாக எழுப்பப்பட்ட கேள்விதான் அது.

‘அடிப்படை நாகரிகமற்ற, குறிப்பாக அவர்களை உருவகேலி செய்யும்விதமான கேள்வி ஏன் எப்போதும் நடிகைகளை நோக்கியே எழுப்பப்படுகிறது. இதை நகைச்சுவையாகக் கருத முடியாது. உங்கள் கேள்வி பத்திரிகைத்துறைக்கே அவலம்’ என ஜர்னலிசம் படித்துவிட்டு நடிப்புத் துறைக்குள் காலடி வைத்த நடிகை கெளரி கிஷன் தைரியமாக, நிதானமாக நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அவரது இந்த செயலுக்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக எழுத்தாளர் கொற்றவையிடம் பேசினோம், “தன்னிடம் கேள்வி கேட்பதற்கான அதிகாரம் உள்ளது என்பதற்காகவே சில ஊடகவியலாளர்கள் அநாகரிகமாக கேள்வி எழுப்புகிறார்கள். ஊடகம் என்பது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவர்களே இதுபோன்று பிற்போக்குத்தனமாக இருப்பது வருத்தமளிக்கிறது. அதிலும் அந்த ஆண் ஊடகர் கேள்வி எழுப்பும்போது அங்கிருந்தவர்கள் யாரும் அவர் கேள்வி தவறானது என்று எடுத்து சொல்லாமல் அவரை ஆதரிக்கும் விதமாகவே கூச்சலிட்டது பார்ப்பதற்கு நன்றாக இல்லை.

எழுத்தாளர் கொற்றவை

பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சினை அல்லது அவர்கள் உரிமை பறிக்கப்படும்போது ஒற்றுமையாக இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பிற்போக்குத்தனமாக யோசிக்கும் ஒருவருக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அத்தனை கூச்சல், குழப்பத்திற்கு மத்தியிலும் கெளரி கிஷன் இதை பொறுமையாக ஹேண்டில் செய்தது பாராட்டத்தக்கது. தன்னுடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் வரையிலும் அவர் தான் செய்தது தவறு என்று உணரவே இல்லை.

‘நகைச்சுவையாக கேட்டோம். அது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். இதுபோன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன்’ என்று அவர் அந்த இடத்தில் சொல்லியிருந்தால் அவர் பெரிய மனிதர் ஆகியிருப்பார். ஆனால், தான் கேட்ட கேள்விதான் சரி என்பதில் அவர் விடாப்பிடியாக இருந்தார்.

இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் ஒரு நிகழ்வில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட்டிருப்பதை சுட்டிக்காட்டி அநாகரிகமாக கேள்வி கேட்டார்கள். அதுவும் இதுபோலதான் பிரச்சினை ஆனது. இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

செலிபிரிட்டிகளிடம் எந்த வரம்பு வரையில் கேள்வி கேட்க வேண்டும் என்பதை முறைப்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க செயலாகத்தான் இதை பார்க்க வேண்டும்.

இதுபோன்று நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏன் எந்த ஒரு பத்திரிகையாளர்கள் சங்கமோ நடிகர்கள் சங்கமோ கண்டனம் தெரிவிக்கவில்லை எனத் தெரியவில்லை. அரசாங்கம் இதில் தலையிட வேண்டும்,” என்றார்.

‘தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே திறமை இருந்தும் கதாநாயகிகளை அழகுப் பதுமையாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். நான் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதும் இல்லை. அதனால் நான் அதிக பட வாய்ப்புகளை இழக்கிறேன் என்பதில் வருத்தம் இல்லை,’ என சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவின் போக்கு குறித்து கெளரி கிஷன் தைரியமான கருத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.