இயக்குநர் கீர்த்தீஸ்வரன் 
சினிமா

"இது புதுசு இல்ல... அந்த பெரியவர் சொன்னதுதான்” டியூட் கீர்த்தீஸ்வரன் பளீச்!

Staff Writer

பெரியவர்கள் சொன்ன கருத்துகளை சினிமாவில் சொல்வேன் என டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூறியுள்ளார்.

அக்டோபர் 17ஆம் தேதி வெளியான பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ திரைப்படம் 95 கோடிகளுக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. இதன் வெற்றிவிழா நேற்று நடைபெற்றது.

பிரதீப்புடன் சரத்குமார், ரோஹிணி, மமிதா பைஜு மற்றும் பிற நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசியதாவது:

ஹாட்ரிக் வெற்றியை பிரதீப் ரங்கநாதன் பதிவு செய்துள்ளார். வசனம் நல்லா இருந்தால், அதை சொல்லியே ஆகவேண்டும் என பிரதீப் ஊக்கப்படுத்துவார். படத்தில் ஒரு வசனம், உங்க ஆணவத்துக்கு கொலை பண்ணுவீங்களாடா…? அவ்வளவு ஆவணம் இருந்தால் நீங்க போய் சாவுங்கடானு’ இருக்கும். இந்த வசனம் முதலில் இல்லை. படப்பிடிப்பு சமயத்தில்தான் கவின் கொலை நடந்தது. அது தொடர்பாக எதாவது சொல்ல வேண்டும் என பிரதீப் வலியுறுத்தினார். அதன் பிறகுதான் அந்த வசனத்தை எழுதினேன்.

டியூட் படம் இன்னைக்கு வரைக்கும் 95 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனால் இது முடிவு இல்லை. நாளைக்கு 100 அடிக்கும், அதுக்கு மேலயும் அது போகும்.

என்னோட முதல்படம் இவ்வளவு சிறப்பா அமைச்சு கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

இந்த படம் பற்றி நிறைய விவாதங்கள் உருவாகியிருக்கு. இதுவரை பேசாத விஷயம் சொல்லி இருக்காங்க... அப்படின்னு.

இது தமிழ்நாடு. இந்த ஸ்டேட்ல நிறைய பெரியவங்க இருந்திருக்காங்க. அந்த பெரியவரும் இருந்திருக்கார். அவங்க வழியிலதான் நாங்கல்லாம் பேசிட்டு இருக்கோம். தமிழ்நாட்டில் இதைப் பேசுவது புதிது இல்லை. இதற்கு முன்னும் பேசியிருக்காங்க. நாங்க அடுத்த தலைமுறைக்கு சொல்லுவோம்.

இதை எவ்வளவு பொழுதுபோக்கா, சினிமா மொழியில, பார்வையாளர்களுக்கு ஏத்துக்கிற மாதிரி, பெரிய ஸ்கேல்ல சொல்ல முடியுமோ அப்படி சொல்ல முயற்சி பண்ணிட்டு இருப்பேன்." எனப் பேசியுள்ளார்.