சினிமா

சினிஸ்க்ளூசிவ்: ஹெச்.வினோத், விஜய், த்ரிஷா…ரெடி ஒரு அதிரடி காம்போ

மிஸ்டர் முள்

விஜய்யின் ’ஜனநாயகன்’ ஜனநாயகத்துக்கு விரோதமாக திருட்டுத்தனமாக லீக் செய்யப்பட்டு அது பட்டிதொட்டியெங்கும் பட்டையக் கிளப்பி வருவது தமிழக தேர்தல் செய்திகளையே பின்னுக்குத் தள்ளிய சம்மர் ஹாட்.

இந்த துஷ்ட காரியத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்கிற பட்டிமன்றம் டீக்கடைகள் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்கள் வரை சூடுபிடித்து வரும் நிலையில், பட நிறுவனமான கே.வி.என்.க்கு சுமார் 400 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

குற்றம் நடந்தது என்ன என்கிற விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, சற்றும் தாமதிக்காமல், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் முன் வந்திருக்கிறார் என்பது தகவல்.

அதன்படி தேர்தல் முடிவுகள் வெளியானதும் அதே நிறுவனத்துக்கு சல்லிப்பைசா சம்பளம் வாங்காமல் இலவசமாக ஒரு படம் நடித்துத்தர முன்வந்திருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் சாட்சாத் ஹெச். வினோத்தேதான்.

‘ஜனநாயகன்’ ரீமேக் செய்ய முடிவெடுப்பதற்கு முன் ஹெச். வினோத் தனது சொந்தக் கதை ஒன்றை இயக்கவே விஜய்யுடன் இணைந்திருந்தார். அது பின்னர் பெண்டிங் வைக்கப்பட்டுதான் தெலுங்குப்படமான ‘பகவந்த் கேசரி’ ஜனநாயகனாக்கப்பட்டது.

இப்போது புதிய செய்தி என்னவென்றால் ஹெச்.வினோத் முன்பு விஜய்க்கு சொன்ன பழைய கதை தூசு தட்டப்படுகிறது. தேர்தல் களைப்புக்கு 3 மாதங்கள் ஓய்வெடுத்தபின்னர், அநேகமாக ஆகஸ்ட் மாதமே படப்பிடிப்பு தொடங்கிவிடும். இலவசமாக விஜய் நடிக்கும் இப்படத்துக்கு விஜய் போட்ட ஒரே கண்டிஷன்... த்ரிஷாதான் நாயகி என்பதாகச் சொல்லப்படுகிறது.