விஜய் முதல்வாரான அடுத்த சில நாட்களில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் இன்னும் சைலண்ட் மோடிலேயே இருக்கும் நிலையில், அவரது வாரிசு ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படம் ஜூலை 31 வெள்ளியன்று ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவைப்போலவே நடிகராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்தார். ஒரு வருடத்துக்கு முன்பே துவக்கப்பட்ட இப்படம் அதன் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் பொருளாதார நெருக்கடிகளால் சற்று மெதுவாகவே நகர்ந்தது. படம் டிராப் ஆகப்போகிறது என்றெல்லாம் கூட செய்திகள் கிளப்பி விடப்பட்டன.
பின்னர் ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஜேசனின் உறவினர் ஒருவரும் இணைந்துகொள்ள படம் சற்று வேகமெடுத்து தற்போது ஜூலை 31 ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது.
நாயகன் சந்தீப் கிஷன் ரத்தம் தோய்ந்த ஒரு முரட்டு மண்வெட்டியுடன் போஸ் கொடுக்கும் அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் இன்று காலைமுதலே வைரலாகிவரும் நிலையில், இப்படத்துக்கு விஜய்யின் ஆதரவு நேரடியாக அட்லீஸ்ட் மறைமுகமாகவாவது இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு விவாகரத்து வரை போயிருக்கும் நிலையில் தன் அம்மாவின் பக்கமே ஜேசன் ஸ்ட்ராங்காக நிற்பதால் இப்படம் துவங்கிய நாள் முதல் இன்றுவரை மகனுக்கு வாழ்த்துச் செய்திகள் எதையும் விஜய் பகிர்ந்ததில்லை. அதே போல் தந்தை முதல்வரான பிறகு ஜேசன் நேரில் சென்று அவரை வாழ்த்தவோ சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்தி எதியுமோ பகிரவில்லை. தந்தை மகன் இருவருமே பரஸ்பர மவுனம் காத்து வருகிறார்கள்.
அந்த மவுனம் ‘சிக்மா’ ரிலீஸ் வரை நீடித்தால் விஜய் ரசிகர்கள் ஜேசன் படத்தை ஆதரிப்பார்களா அல்லது கைவிட்டுவிடுவார்களா என்பதை முக்கிய டாபிக்காக எடுத்துக்கொண்டு அடுத்த இரு மாதங்களுக்கு ஜல்லி அடிக்கும்படி சானல்களை அந்திமழை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.