சிவகார்த்திகேயன் 
சினிமா

எதைப் பேசப்போகிறது பராசக்தி...? - எஸ்.கே. பதில்!

Staff Writer

மாணவர்களின் சக்தி என்ன என்பதைப் பற்றி பேசும் திரைப்படமாக ’பராசக்தி’ இருக்கும் என்று அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ’பராசக்தி’ திரைப்படம் பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற தலைப்பிலான இந்த கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, இந்தத் திரைப்படத்திற்காக 1960 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 5 ஆண்டுகளாக வாழ்ந்ததாகக் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “1960களில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு கதையை எழுதியிருந்தார் இயக்குநர் சுதா கொங்கரா. ’பராசக்தி’ திரைப்படம் ரசிகர்களை 1960 காலகட்டத்திற்கு அழைத்துச் செல்லும். படம் மிக மிக முக்கியமான பிரச்சினையைப் பேசும், அதேநேரம், காதல், வீரம், பாசம், புரட்சி என எல்லாம் பேசும். இந்த படம் மாணவர்களின் சக்தி என்ன என்பதை பேசுகிறது” என்றவர் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி நல்ல கொண்டாட்டமாக இருக்கும் எனவும் கூறினார்.

சிவகார்த்திகேயன் உடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்ததாக நடிகர் ரவிமோகன் கூறினார். அதேநேரம், பராசக்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் தெரிவித்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இது தனக்கு ஸ்பெஷலான திரைப்படமாக அமைந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து 'World of Parasakthi’ கண்காட்சியை படக்குழுவினர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

1960களில் இருந்த ரயில் வண்டி செட், வீடுகள், டெண்ட் கொட்டாய் என பராசக்தி உலகிற்கே நம்மை கூட்டிச் செல்லும் இந்த கண்காட்சியை நான்கு நாட்களுக்கு பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி பராசக்தி திரைப்படம் வெளியாக உள்ளது.