சினிமா

யார்ரா அந்த பையன்!

கவனிக்க வைத்த புதிய இயக்குநர்கள்

மிஸ்டர் முள்

வருடத்தின் இறுதி மாதத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். ‘24ம் ஆண்டில், நவம்பர் 29ஆம் தேதி வெளியான ஏழு படங்களையும் சேர்த்து 209 படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. டிசம்பரில் எப்போதுமே படப்பொழிவு மற்ற மாதங்களை விட சற்று அதிகமாகவே இருக்கும். காரணம் டிசம்பருக்குள் சென்ஸார் செய்து ரிலீஸும் செய்தால் ஆறுதல் தொகையாக அரசு மான்யமாவது சீக்கிரம் கிடைக்கும். ஆக டிசம்பருக்கு தோராயமாக இன்னும் 40 படங்களைச் சேர்த்தால் வருடத்தின் மொத்த எண்ணிக்கை 250.

பிற்காலத்தில் ஒரு தரவாகப் பயன்படுமே என்பதற்காக ஆராய்ந்ததில், 250ல் 70 படங்கள் வரை புதுமுக இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். அதில் பத்து சதவிகிதம் கூட தேறவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆயினும் அறிமுக இயக்குநர்கள் குறித்த எதிர்பார்ப்பு தவிர்க்க முடியாதது.

இந்த எதிர்பார்ப்பை கடந்த ‘23ம் ஆண்டில் ’அயோத்தி’யின் மந்திர மூர்த்தி, ‘கார்கி’யின் கவுதம் ராமச்சந்திரன், ’போர்த் தொழில்’ விக்னேஷ் ராஜா, ’பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன், ’குட் நைட்’ விக்னேஷ் சந்திரசேகரன், ’டாடா’ கணேஷ் கே பாபு ஆகிய புதுமுக இயக்குநர்கள் சிறப்பாக பூர்த்தி செய்திருக்க,... 2024 ன் குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் குறித்த பார்வை இது...

இந்த ஆண்டின் முதல் சிக்ஸர் அடித்தவர் ’ப்ளூ ஸ்டார்’ - ஜெயகுமார். கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகளுக்கும் நடுவே ஒரு பிரச்னை வருகிறது. அப்பிரச்னை அவர்களின் வாழ்க்கையிலும் சமூகம் குறித்த பார்வையிலும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இறுதியில் இரு அணிகளும் அப்பிரச்னையை எப்படி அணுகி, அதிலிருந்து மீண்டார்கள் என்பது கதையின் நிலவரம். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அத்தனை அம்சங்களும் மிக நேர்த்தியாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சாதி பிரச்சனை குறித்த படம்தான் என்றாலும் எதிர்ப் பிரிவினரும் ரசிக்கும் வண்ணம் இருந்தது ஜெயகுமாரின் ஆட்டம்.

அடுத்த கவனம் கவர்ந்த இயக்குநர் ஜான் கிளாடி. பெயரே வேறு மாதிரி, நாம் அடிக்கடி கேள்விப்படாத பெயராக இருக்கிறது அல்லவா? இவர் எடுத்துக்கொண்ட கதையும் தமிழ் சினிமா கண்டிராத வேற மாதிரி கதைதான். புறா வளர்ப்பு மற்றும் அதன் பந்தயப் பின்னணியில், ரத்தமும் சதையுமான வாழ்க்கையை அச்சு அசலாக திரையில் வார்த்திருந்தார் கிளாடி என்கிற இந்த கில்லாடி.

தமிழ் சினிமா அதிகம் அறிந்திராத குமரி மாவட்டத்தின் இந்தப் புதிய களமும் அடர்த்தியான காட்சிகளைக் கொண்ட திரைக்கதையும் ரசிகர்களுக்கு அல்டிமேட் அனுபவம். மிகக் குறைவாக கிடைத்த தியேட்டர்கள் மற்றும் போதிய விளம்பரமின்மையால் இப்படம் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை என்பது துரதிர்ஷ்டமே.

'ஜமா’. இந்த ஆண்டு தமிழ் சினிமா கண்ட உன்னதமான படைப்பு. கூத்து உலகம், அதன் அகம், புறம், அதோடு வாழ்வை இணைத்திருக்கும் மனிதர்கள் என நிதானமாக விவரித்தபடி நகர்ந்தது திரைக்கதை. பெண் வேஷம் போட்டு ஆடும் ஒரு கூத்துக் கலைஞனின் பிரச்னைகள், அவனை சமூகம் பார்க்கும் விதம், அதோடு அவன் போராடுவது, அதனால் அவனுக்குள் நிகழும் உளவியல் போராட்டங்கள், அவனுடைய லட்சியம், காதல் என்று இரண்டு மணி நேரப் படத்துக்குள் உணர்ச்சிக் குவியலான ஒரு உலகத்தைப் படைத்திருந்தார் இயக்குநர் பாரி இளவழகன்.

மட்டுமின்றி பெண் வேடமிடும் நாயகனின் பாத்திரத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்தும் இருந்தார்.

திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லையென்றாலும் ஓ.டி.டி தளத்தில் பார்த்தவர்கள், ‘உள்ளம் உருக்குதைய்யா’ என்று மனமுருகிக் கொண்டாடினார்கள் இப்படத்தையும் பாரி இளவழகனையும்.

மேற்படி மூன்று வரிகள் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படத்துக்கு இன்னும் வெகு பொருத்தம். இப்படத்துக்கு தமிழகம் முழுக்கவே 20க்கும் குறைவான தியேட்டர்களே கிடைத்திருக்க, முதல் வாரத்திலேயே எண்ட் கார்டு போட்டு படத்தை வழியனுப்பி வைத்தார்கள். ஆனால் ஓ.டி.டி தளத்தின் புண்ணியத்தில் கடந்த இரு வாரங்களாக சமூக வலைதளங்களில் படத்தையும் அதன் இயக்குநர் மைக்கேல் கே ராஜாவையும் தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அமரர் ஊர்தி ஓட்டுநர் விமல், விபத்தில் சிக்கி மரணமடைந்த முதியவரின் உடலை தன் வண்டியில் வைத்து முதியவரின் ஊருக்குப் பயணமாகிறார். அந்தப் பணி மூலம் கிடைக்கும் பணத்தில் தன் மனைவியின் பிரசவச் செலவை சமாளிக்க நினைக்கிறார். இறந்த முதியவரின் இரண்டு மனைவிகளின் மகன்களும் தங்கள் வீட்டிற்குத்தான் பிணம் வர வேண்டும் என்று மூர்க்கம் காட்டுகிறார்கள்.

பயணத்தில் கூத்துக் கலைஞர் கருணாஸ் வண்டியில் ஏறிக்கொள்கிறார். தன் துயர வாழ்வின் அவலத்தை வழி நெடுக அவர் விவரிக்கிறார்.

பயணத்தின் நடுவில் வண்டியில் இருந்த பிணம் காணாமல் போகிறது. அது எவ்வாறு கருணாஸ் மூலம் தீர்க்கப்படுகிறது என்பது கதை.

செத்த உடல்களும் சாகாத உடல்களும் இத்தனை முக்கியத்துவம் பெற வேண்டுமா என்பதைப் படம் நெடுகக் காட்சிகளால் பதிய வைக்கிறார் இயக்குனர் மைக்கேல் கே ராஜா.

தமிழ் சினிமாவில் ஐம்பது கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிற இயக்குநர்கள் என்று சுமார் ஐந்து பேராவது இருக்கிறார்கள். அவர்கள் படங்களில் துப்பாக்கி குண்டுகளும் பீரங்கிகளும் திரையைத் துளைத்தெடுக்கும். படம் பார்க்கிற ரசிகர்கள் ஒரு உணர்ச்சியுமற்று வீடு திரும்புவார்கள். துப்பாக்கியும் பீரங்கிகளும் என்னத்துக்கு... ஒரு சாதாரண லப்பர் பந்தை வைத்து மனிதர்களை, அவர்களது உணர்ச்சிகளை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறேன் பார் என்று சிலிர்க்கவைத்த படம் ‘லப்பர் பந்து’.

கிராமத்து கிரிக்கெட் போட்டிகளில் நிலவும் சாதிய பாகுபாட்டை போகிறபோக்கில் காட்சிப்படுத்தியிருந்த விதம் யார்க்கர் ரகம். கிரிக்கெட், காதல், சாதிய பாகுபாடு என இரண்டரை மணி நேரத்தில் வெரைட்டியான சிக்ஸர்களை விளாசியிருந்தார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. குறிப்பாக சாதிய பிரச்னைகளை அவர் கையாண்டிருந்த விதம் மாஸ்டர் கிளாஸ். கடந்த ஆண்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவேதான்.

மற்ற ஜீவராசிகள் போலவே மனிதனும் புலம் பெயர்ந்து வாழவேண்டி விதிக்கப்பட்டவன்தான். இதில் மதம், சாதி, இனம், மொழி, ஊர், நகரம் மாநிலம், நாடு என ஆயிரம் பிரிவினைகள் இருந்தாலும் தேவையின் அடிப்படையில் ஒருவர் மற்றொருவரை சார்ந்து தான் வாழவேண்டும். அப்படிப்பட்ட சூழலில் சுயநல அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியானால் எத்தகைய அவலங்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்று ராவாகச் சொன்ன படம் இம்மாதம் வெளிவந்த ’பராரி’.

படத்தின் முதல் பாதியில் பிரச்சார நெடி. டெக்னிக்கல் குறைபாடுகள் என்று சில மைனஸ்கள் இருந்தாலும் அன்பையும் சமத்துவத்தையும் உரக்கப்பேசிய படம் என்கிற வகையில் அதன் இயக்குநர் எழில் பெரியவேடி பாராட்டப்படவேண்டிய அறிமுக இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. மற்றபல சிறிய பட்ஜெட் படங்களைப் போலவே இந்த பராரியும் தியேட்டர் பார்வையாளர்களைக் கவரவில்லை. ஓ.டி.டி.யில் கொண்டாடப்படுமா என்று தெரிந்துகொள்ள இன்னும் இருவாரங்கள் காத்திருக்கவேண்டும்.

ஒரு பின் குறிப்பு : கட்டுரையாளர் வருடந்தோறும் ரிலீஸாகிற இருநூற்றிச் சொச்ச படங்களில் 90 சதவிகித படங்களை, அதாவது சுமார் 200 படங்களை தவறாமல் பார்த்துவிடுகிறவர். அவருக்காக இருந்த இடத்தில் இருந்தபடியே ஆண்டவரை நோக்கி ஒரு சிறு பிரார்த்தனை செய்துவிடுங்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram