பைசன் துருவ் விக்ரம் 
சினிமா

இப்படியும் அடிக்கலாம்- பைசன் காட்டும் கதை!

பேரா. மு.இராமசுவாமி

’அத்துவானக் காட்டுக்குள்ளே ஒத்தையிலெ போறவனே…அச்சமேதும் தேவையில்லை ஓடுடா’ என்கிற உற்சாக முழக்கத்துடன், அக்.17 இல் வெளிவந்து, தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரும் ஏற்பைப் பெற்றிருக்கிறது, மாரி செல்வராஜின் ’பைசன் என்கிற காளமாடன்’ திரைப்படம்!  

காலம் காலமாய், மனிதத்திற்குள் வேலியைப் போட்டு, அதற்குள் வேர்கொண்டிருக்கிற சனாதனத்தை- மனிதத்தைப் பிறப்பிலேயே ஆதிக்கம்/அடிமை/ அடிமைக்கு அடிமை என பிரித்து வைத்திருக்கிற சூதுமதியை- ’மனுதர்ம’த்தின் விஷநாக்குகளை, கடைசிப் படியில் நின்றபடியே, தன் ‘திறமை’யால் களமாடிய கபடி வீரன் ‘கிட்டான்’ மூலம், சமூகக் குரூரத்தைக் கூறுகட்டிக் காட்டியிருக்கிற ஒரு படைப்பு இது!  

சமூகப் பொறுப்புடன், சமநீதி/ சமூகநீதியைத் தன் படைப்புகளில் முன் மொழிந்து கொண்டிருக்கும் திரைப் படைப்பாளியான மாரி செல்வராஜின் ஐந்தாவது படைப்பு இது! ‘முற்று முழுக்கவுமான ‘தலித்’ வலியைத் திரைமொழியாய்த் தயங்காமல் முன்மொழிந்து, ஆதிக்கச் சக்திகளைக் குற்றவுணர்வுகொள்ள வைத்திருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம்’ என்கிற முகப்புரையுடன், 28-09-2018 இல் வெளிவந்த, அவரின் முதற்படம் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு எழுதியிருந்தேன்.  ’படத்தின் உண்மை உருவாக்கியிருக்கிற வலி, படம் பார்த்து முடியவும், நம் கால்கள், தரையில் பட முடியாமல் தள்ளாடத் தொடங்குகின்றன. படம், பாடத்தை நடத்திய திருப்தியைக் கொண்டிருக்கிறது. பாடம், படமாய் நம் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது’ என்பதாய் முடித்திருந்தேன்.

09-04-2021 இல் வெளிவந்த அவரின் இரண்டாவது திரைப்படம் ‘கர்ணன்’ படத்திற்கு, ‘ஒடுக்கப்பட்டோர் உரிமைக்கான கவச குண்டலம்’ என்கிற முகப்புரையுடன், ‘பார்ப்பனிய–சனாதனக் கருத்தியலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிற-ஆதிக்க இடைநிலைச் சாதிகளான-’அவர்களுக்கும்’, அவர் களின் காடு கழனிகளில் கூலிவேலை செய்து வயிற்றைக் கழுவி, சொந்தமாய்க் குறுணி விதைப்பாடும் இல்லாது, ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ’இவர்களுக்கு’மான-அவர்களுக்குப் பல்லக்குத் தூக்கிப் பவனிவருகிற காவல் துறைக்குமாக நகர்கிற-மோதல்தான், ’கர்ணன்’ என்பதாயும், இதற்குமுன்பே திரையில் பார்த்துப் பழகியிருந்த முகங்களும், பார்த்திராத-பழக்கப்பட்டிராத-கிராமத்து மண்ணின் முகங்களும் என்னமாய்க் கலந்து, இயல்புச் சூழலை மெருகுபடுத்தித் தந்திருக்கின்றன’ என்பதாயும் முடித்திருந்தேன்.

பேரா. மு.ராமசாமி

1975 இன் கொடியன்குளம் ஊரின் ’உண்மை’, கர்ணன் படத்தில், 1997 இன் பொடியன்குளம் என்கிற ’கதை’யாகியிருந்தது. மாமன்னன், வாழை ஆகிய இரண்டு படங்களையும் என் சூழல் காரணமாய்த் தாமதமாய்ப் பார்த்ததால், விமரிசனமாய் எழுதியிருக் கவில்லை. ஆயின் அவரின் முந்தைய படங்களின் என்னின் விமரிசனங்களை, இன்னமும் மெருகேற்றியே, எனக்குள்ளே அவை பாட ங்களை எழுதி வைத்திருந்தன.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது, எல்லாக் காலத்தும், ’நான்கு வர்ணங்களையும் நானே சிருஷ்டித் தேன்’ என்கிற இந்து சனாதனத்திற்கு எதிரான, அறிவியல் முழக்கம்! அது திருவள்ளுவரால், தமிழர் அறமாகப் போதிக்கப்பட்டிருக்கிறது. தொன்னூறுகளில், மாரி செல்வராஜ் என்கிற திரைக் கலைஞர், அவர் ஊரில் சந்தித் திருந்த அனுபவங்கள்வழி, அவருக்குள் புகட்டியிருந்த வள்ளுவரின் சமூகநீதி அறத்தைச் சுட்டும் கதைகளாக, அவரின் படைப்புகள் வடிக்கப்பட்டிருக்கின்றன. படைப்பின் மனசை (வலியை), வடிவாய், எழுத்தில், அரங்கில், திரையில், இறக்கி வைப்பதுதான் கலை, இலக்கியத்தின் பணி! சனாதனத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை, அடிமைச் சகதியிலிருந்து எழுந்து வருவதற்காய்க் குரலெழுப்பும் இவரின் பரிதவிக்கிற மனசு, திரைமொழி யில் அதற்குரிய எழுத்தைக் கவிதையாய் இறக்கி வைத்திருக்கின்றது. அந்தக் கவிதை, இரத்தம் தோய்ந்ததா யும் இருக்கிறது; இறக்கை கட்டிப் பறப்பதாயுமிருக்கிறது. ‘மக்கள் நீங்கிய, வாழ்க்கை நீங்கிய எந்த அனுபவ மும் கலையாகாது’, ‘வெறும் பொழுதுபோக்க மட்டுமே இல்லை கலை; பொழுதைத் தன்வயமாகச் செய்வது அது!’ என்று 1978 இல், எங்கள் நிஜ நாடக இயக்கத்தின் முத்திரை மொழியாக்கியிருந்தோம். அது, திரை வடி வில், மாரி செல்வராஜிடம், ’பிறப்பொக்கும்’ எனும் அறத்தைக் கூறும் வெவ்வேறு அனுபவக் கதைகளாய், புது மைக் கவிதைகள் பாடிக் கொண்டிருக்கின்றன. வாழ்த்துகள்!

இப்பொழுது ‘பைசன் என்கிற காளமாடன்’! 1994 என்று கதைக்களம் அடையாளப்படுத்தப்படுகிறது. படத்தில், 1993-94 இல் நடக்கிற கதையைத்தான் நாம் பார்க்கிறோம். தொன்னூறுகளின் காலம், மாரி செல்வராஜ், அவர் ஊரில், அவர் எதிர்கொண்டிருந்த வடுக்களின் காலமாய் இருந்திருக்கிறது-கல்வி, சமூக இயக்கங்கள், அரசியல், அதிகாரப் பொறுப்புகளால் மாற்றங்கள் சிறிதே தெரிந்தாலும், இன்னமும் இந்து சனாதனத்தால், மனிதம் வெட்கப்படும்படியான காரியங்களே, வெவ்வேறு நவயுகப் புதுப்புது வடிவ மாற்றங்களில் நிகழ்ந்து வருகின்றன என்பதே உண்மை! அந்த உண்மைகளே, அவருக்குள் பொங்கிவரும் கதைகளாய், அறக் குமுறல் களாய் வெளிவருகின்றன. காட்டப்படும் காலத்தின் உண்மை, கதைக்குள்ளும் உண்மைச் சம்பவங்களைக் கொண்டுவந்து கோர்த்துவிடுகின்றது. நல்ல படைப்பு, அதைத்தான் நல்லவிதமாகச் செய்யும்! ’வேலி எதுவுமே போட்டுவிட முடியாத’ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாய் அமர்ந்திருக்கிற உச்சநீதிமன்றத்தின் இரண்டா வது தலித் நீதிபதி பி.ஆர். கவாய்மீது, படம் வெளிவந்திருக்கிற இதே அக்டோபர் 2025 இல்தான், ’சனாதன தர்மத்தை எதிர்ப்பதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது’ என்று கூறி, செருப்பை எடுத்து வீசிய, ஒரு பார்ப்பன வழக்குரைஞர் ராஜேஷ் கிஷோரையும், அதற்கு வக்காலத்து வாங்கிய சனாதனக் கூட்டத்தையும் இப்போதும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். சனாதனம் என்பதே, நிலைத்த கருத்தியல் ஆதிக்கத்தை இங்குக் குறிப்பதுதான்-எந்தவகையிலான ஆதிக்கமும் ‘சனாதனம்’தான்! அது, பெண்களுக்கு எதிரான ஆதிக் கம்/ ஒடுக்கப்பட்டவர்க்கு எதிரான ஆதிக்கம் என்பதாக விரியும்! சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது என் பதை, மாரி செல்வராஜ் அவருக்குத் தெரிந்த திரைமொழியில், பகிரங்கப்படுத்தாமல், பக்குவமாக, அவருக்குத் தெரிந்த- அவர் அனுபவித்த- வாழ்க்கையினுள்ளிருந்து  பதிவு செய்யப் பார்த்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.     

பைசன் துருவ்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல கதைகள் இருக்கின்றன. மனிதரோடு தொடர்புடைய ஒவ்வொரு கட்டடத்திற்கும், மரத்திற்கும், பிராணிக்கும்கூட கதைகள் இருக்கின்றன.  பைசன் கதையில் காட்டப்படும் அவர்களின் தெய்வமான காளமாடனுக்கும் ஒரு கதை இருக்கும். ஆட்டைப் பலி கொடுத்து மகிழ்கிற ஆச்சாரத்தோடு, அது அவர்களின் வாழ்வியலோடு இயைந்திருக்கும். உலகின் ஒவ்வொரு ஊரும், அங்கங்குள்ள மனிதர்களைக் குறித்து, பற்பலக் கதைகளைச் சுமந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறது. வீரியமான கதையுள்ள ஊர்களைச் சக்தியுள்ள கதைகளே, தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. மனிதர்கள் அனைவரும், கதைபொதி உயிர்கள்தாம்!  வெற்றியோ தோல்வியோ ஒவ்வொருவரின் கதைகளுமே, இரத்தமும் சதையுமான உண்மை அனுபவங்கள் தாம்! அந்த அனுபவங்கள், தேர்ந்த ஓவியனால், அழகியலாய்த் தீட்டப்படுகையில், அவை, மனதைக் கவர்கின்றன. பைசனில் பேசப்படுகிற இந்த அழகியல் அரசியல் என்பது, பார்ப்பவர் மனதுக்குள், இந்தச் சமூகம் பற்றிய/ சனாதனம் பற்றிய ஒரு காத்திரமான உரையாடலை எந்த மூடுதிரையுமின்றி ஏற்படுத்துவதுதான்! அதை, திறந்த மனதுடன் உள்ள சமூகம் கொண்டாடித் தீர்க்கிறது. உண்மையுடன் ஒவ்வாமை கொண்டவர்கள், சமூக நீதியைச் சபித்துக் கிடப்பவர்கள், பழக்கவழக்கமாய் அதையே பூசித்து மூழ்கியவர்கள் ஆகிய தாளிட்ட மனதுள்ளவர்க்கு, மாரி செல்வராஜ், நீலம் பா. ரஞ்சித்போல், ஓர் அதிர்ச்சி வைத்தியம்தான்! 

மாரி செல்வராஜ் ஊருக்கு அருகிலுள்ள, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணத்தி ’கணேசன்’ என்கிற கபடி வீரரின் வலிகளும், வழிகளுமாக, அவரின் கதை தந்திருக்கிற உத்வேகத்தில், சனாதன வேலி உடைப்புச் சம்பவ மோதல்கள், அந்த மண்ணில் உருவாக்கியிருந்த ஒரு காலத்தின் பின்புலத்தில், அவருக்குள், ’பைசன் என்கிற காளமாடன்’ உருவாகியிருக்கிறான். சமூகம், ஏற்கெனவே தனக்குள் போட்டு வைத்திருக்கும் சனாதன வேலியை உடைத்துவிட எண்ணாத–அதனுள்ளே ஒளிந்திருக்கும் உள்ளூர் அரசியலைப் புரிந்துகொள்ள முயலாத- ஏன் இப்படியொரு பகை என்று குழம்பித் தவிக்கிற- ’கிட்டான்’ என்கிற ’மணதி’யின் கபடி வீரன், அர் ஜுனா விருதுபெற்று, ’வேலி எதுவுமே போட்டுவிட முடியாத’ ஓர் உயரத்தை அடைவதும், அந்த ஊரே அவனுக்கான அடையாளமாகிப் போவதும் (இதே 2025 அக்டோபரில்தான், மணத்தி கணேசன்போல், ’பைசன்’ கிட் டான் போல், கண்ணகி நகரின் கார்த்திகா, திருவாரூர் அவிநாஷ் இருவரும், இளையோர் கபடிக்கான இந்தியாவின் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றனர். இருவருக்கும், தமிழ்நாடு அரசு 25 இலட்சம் ரூபாய் வழ ங்கி மகிழ்ந்திருக்கிறது), அந்த ஊரே அதைக் கொண்டாடி மகிழ்வதும்தான் கதை! ஏன் நாமும் கூடத்தான்-அதற்கான நியாயம் படத்தில் நிரம்பி இருக்கிறது.

முதல் சட்டகத்தில், நமக்கு முகம் தெரிந்த, சஞ்சலப்பட்ட பசுபதியின் முகமும், முகம் தெரியாத பலரின் பரபரப்புமாக, ஊர்ப் பொதுவில் அமர்ந்து, டி.வி. பார்க்கத் தங்களைத் தயார் செய்துகொண்டிருக்கின்றனர். விளையாட்டுச் செய்திகளாய், நான்கு செய்திகளை டி.வி. நமக்குள் கடத்துகிறது.

1) ஜப்பானில் நடைபெற்றுவரும் 12 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், கபடிப் பிரிவில் ’இந்தியாவும் பாகிஸ்தானும்’ இன்று மோதுகின்றன.

2) தமிழக வீரர் ரத்தினம் தலைமையில் ஜப்பான் சென்றிருக்கும் இந்தியக் கபடி அணி, இன்று, நான்காவது ஆட்டமாக, ’பாகிஸ்தானை’ எதிர்கொள்கிறது.

3) மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இந்தியா, ’பாகிஸ்தானை இன்று வீழ்த்தினால்’, இந்தியாவின் தங்கப்பதக்கக் கனவு உறுதி செய்யப்படும்.

4) ஜப்பானில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டி, இந்திய நேரப்படி ’அதிகாலை 4 மணிக்கு’ ஒளிபரப்பு செய்யப் படும்…’-இவைதாம் அந்தச் செய்திகள்! அந்த மக்கள், அதிகாலையில் தங்கள் ஊர் டி.வி. முன் அமர்ந்து, ஜப்பானில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கபடிப் போட்டியைத் தங்கள் ஊர் கிட்டானுக்காகப் (துருவ் விக்ரம்) பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பசுபதிதான், கிட்டானின் அப்பா வேலுச்சாமி-அதனால் தான் அவர் முகத்தில், ’தன் மகனை ஆட விடுவார்களா அல்லது ’உப்புக்குச் சப்பானி’யாக உட்கார வைத்து விடுவார்களா’ என்கிற அந்தச் சஞ்சலம்! அடுத்த இரண்டாவது நிமிடத்தில், கதைக்குள் நம்மைக் கை பிடித்து அழைத்துவர, நம்மிடமும் தொற்றிக்கொள்ளும் அந்தச் சஞ்சலத்திற்கும், அங்கேயே பதில் கிடைத்து விடுகிறது. ரத்தினம் கிட்டானிடம், ’ஏ கிட்டான்! ...எப்படியாவது இந்த மேட்ச்லெயாவது, ஒன்னெயெ ஆட வைக்க ணும்னு நெனச்சென்டே. ஆனா நம்ம கோச்சுதான், ’பாகிஸ்தான் பாகிஸ்தான்’னு சொல்லியே என் வாயெ அடச்சிட்டாரு….சாரி மக்கா!’ என்கிறார். ஏற்கெனவே மூன்று போட்டிகளிலும் கிட்டானுக்கான திறப்பு அமைந்து வந்திருக்கவில்லை என்பதும், அதுதான் வேலுச்சாமி முகத்தில் தோன்றியிருந்த அந்தச் சஞ்சலம் என்பதும் நமக்குப் புரிபடத் தொடங்குகிறது. தங்கப் பதக்கத்திற்கான நான்காவது போட்டியிலும், கிட்டானுக்கான திறப்பு சாத்தியேதான் கிடக்கிறது என்பதைத்தான், ரத்தினத்தின் மொழி கூறுகிறது.

நடிகர் பசுபதி

கபடியைத் தவிர, வேறெதுவும் தெரிந்து கொண்டிருக்காத கிட்டான், அப்பிராணியாகக் கேட்கிறான்:- ’பாகிஸ்தான்னா என்னன்னே? பாகிஸ்தான்கூட நான் வெளையாடக்கூடாதா?’ சர்வதேசியத்திற்குள்ளும்–தான் வாழும் ஊருக்குள்ளும் நிறைந்து ஒழுகுகிற இந்து சனாதனத்தின் குரலாக,  படத்தில் பேசப்படுகிற முதல் மதவாத-சாதிய அரசியலாக, இங்குதான், ரத்தினத்தால் அது அடையாளப்படுத்தப்படுகிறது:- ‘ஏய் நீ வேற..பாகிஸ்தான் பாகிஸ்தானிட்டு, எல்லா வெளையாட்லெயும், ஒரு பகையெ உருவாக்கி வச்சிருக்கானுங்க…கபடிக்கும் அதுதான்’. விளையாட்டில் மட்டுமல்ல, நம் பொதுப்புத்தியில் கலந்துபோயிருக்கிற மாமன்-மச்சான் உறவுகளிலும்கூடத்தான்!

என் சிறு வயதில், இந்தியா-பாகிஸ்தான் ஆக்கிப் போட்டியை அதிசயத்துப் பார்த்திருக்கிறேன்-அத்தனை அபாரமாய் இருக்கும். கால் ஆணி வராதிருந்தால், பிரதிபால் சிங்-பாஸ்கரன்போல்- நானும் ஆக்கி வீரனாகக்கூட  ஆகியிருந்திருப்பேன்.  பின்னாளில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை, அப்படியே மெய்சிலிர்த்துப் பார்த்திருக்கிறேன்-நாடே பார்த்துக் கொண்டாடி இருக்கிறது. இப்பொழுது பாகிஸ்தான், சனாதன அரசி யலின் எதிர்க்குறியீடாக-ஜின்னாவால் பிரிக்கப்பட்ட பகை நாடாக-முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. பைசனில், இந்த அரசியலின் முடிச்சு அவிழ்கிற இடம், ‘என்ன பகைண்ணே?’ என்கிற கிட்டானின் கேள்வியாயிருக்கி றது. அது, இன்னொரு புதிய அரசியலை- மதத்திலிருந்து சாதிக்கு மடாரென இறங்கி அடிப்பதாய்- நமக்குள் அழுந்தக் கீறிச் செல்கிறது. ‘என்ன பகையா?... நம்ம ஊர்லெ நீயும் நானும் அடிச்சுகிட்டுச் சாவோம்லா…அது என்ன பகை?… கேட்டா சொல்லத் தெரியலேல்லா…இந்தா பாரு கிட்டான்…நீ செலக்டானது, அந்தக் கோச் சுக்குக் கொஞ்சமும் பிடிக்கலெ (அது, வடக்கன்-தெக்கன் அரசியல்!). எப்பக் கேட்டாலும் கிட்டான் சின்னப் பையன்தானே… யாராவது அடிபட்டா, மாற்றாளா(Substitute) எறக்கலாம்னு சொல்றாரு…என்னெ என்னச் செய்யச் சொல்ற?’. ’கேட்டா சொல்லத் தெரியலேல்லா’-இது, மிகவும் ஆபத்தான சொல்லாடல்! இப்படித்தான் இங்குள்ளவர்கள் மண்டைக்குள் அது புகுத்தப்பட்டிருக்கிறது. அது, விதியின்மீது-கடவுளின்மீது- என்று, கை காட்டிக் கழன்று விழுந்துவிடுகிறது. இருவேறு சாதியப் படிநிலைகொண்ட இவர்களின் இந்த உரையாடலானது, நமக்குள், ’இந்துத்துவம்’ என்கிற இன்னொரு புதிய உரையாடலுக்கான திறப்பைத் திறந்து விடுகிறது. இந்த இடத்தில், சனாதனம் உற்பத்தி செய்து உலவவிட்டிருக்கிற வருணப் பாகுபாட்டு அரசியலின் புதிய திற ப்பு, நம்மை யோசிக்க வைக்கிறது. இந்து-இஸ்லாம்; ஆதிக்கச் சாதி-அடிமைச் சாதி என்கிற மத-சாதியக் குறியீடுகள், நமக்குள் குமட்டலை ஏற்படுத்துகின்றன. இதற்குப் பின்னால்தான், மனுவின் மைய ஆட்சி மறைந்திருக்கிறது என்பதும், சனாதனத்தின் சாகாவரம் குற்றுயிராய்க் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது என்பதும், நமக்குப் புரிபடத் தொடங்குகிறது-இதுவே, நமக்குள் சாதிய-சர்வதேசிய உரையாடலாகவும், அது உருவாக்கியிரு க்கிற, உள்ளூர் வடுக்களின் காய் நகர்த்தல் கதையாகவும் விரிவடையத் தொடங்குகிறது.

ஜப்பானில், கிட்டான் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் பெற்றுத்தரும் போட்டியில், தன் திறமையைக் காட்டி, இங்கிருக்கிற மற்ற சாதியினரின் பார்வையையுமே திருப்பி, அர்ஜுன் பதக்கம் வெல்லுவது கதையாய் இருந் தாலும், கிட்டானின் வலிகள் நிரம்பிய ஊர்க் கதையுடன் -கிட்டானின் உறவுகளுடன்- வெறித்தனமான கிட் டானின் கபடிப் பசியுடன்–வன்மம் போர்த்திய சனாதனத் தோல்களின் வீறாப்பால், சீறிக் கசியும் சாதியப் படி நிலையின் அடிதடி மோதல்களுடன்–காலங்கடந்தேனும் திறமையினை மதிக்கிற மனிதர்களின் மாண்புகளை யும் காட்டிக் கதை சொல்லலில் முன்னும் பின்னுமாய்ப் போய்வந்து போய்வந்து, காட்சிக்குள் விறுவிறுப்பைக் கூட்டிச் சென்றிருக்கிற அழகிற்கு, மாரி செல்வராஜை, எவ்விதம் பாராட்டினாலும் தகும்! அவருடன் சேர்ந்து, காட்சிகளில் ரம்மியத்தைக் குழைத்துத் தந்திருக்கிற கலையும், சலிப்பேற்படுத்தாமல், காட்டும் காட்சிகளுடன் நம்மைக் கடத்த வைக்கிற இசையும், காட்சிகளில், இயற்கை அழகை, இயற்கையில் இருக்கிறமாதிரியே  படைத்திட்டிருக்கும் ஒளிப்பதிவும்-தென்னாடு பாடலில் சம்சாரி வாழ்க்கையின் அத்தனை அழகும் கொட்டிக் கிடக்கிறது-, கதை நகரும் விறுவிறுப்பில் மனசை அலைபாயவே விடாத படத்தொகுப்பும் என்று, இவர்களை யும் பாராட்ட வேண்டும்.

தாவித் தாவிக் கதை செல்கிற பாய்ச்சலாலும், அதனுள் முகிழ்த்துக் கிளம்பும் உணர்வுப் பொறிகளாலும், காட் சிகளைக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளும் குணத்தினாலும், வர்ணாச்சிரமத்திற்கு வாய்ப்பூட்டு மாட்டு கிற கருத்தாலும் நாலுகால் பாய்ச்சலில், 2 மணி 48 நிமிடங்களையும் விறுவிறுப்பாய்க் கடத்திச்சென்று விடு கிறது, ‘பைசன்’ திரைப்படத்தின் கதைசொல்லல் முறையின் சாதனை!- படத்தொகுப்பின், இசையின் சாதனை யும்கூட! பார்க்கும் திசையெங்கும், பாராட்டு மழையில், பைசன் நனைந்துகொண்டே இருக்கிறது. நமக்கும் அது தெம்பினைத் தருகிறது.

திருப்பரங்குன்றத்தில் கள்ளக் கணக்கெழுதும் சேனைகளும், இந்துத்துவக் கூடாரங்களும் வேண்டுமானால், இதை எப்படிப் ’பைசல்’ பண்ணுவது என்றே விழிபிதுங்கிக் கிடப்பார்கள். இது சாதிய மோதலைக் கூர்தீட்டி விடுகிற படமல்ல; இருக்கிற சாதிய மோதலுக்கான ’வேலி’யைக் (சனாதனம்) கை காட்டி, வேலியே போடமுடியாத-போட்டுவிட முடியாத தூரத்திற்கு ஒவ்வொருவரும் ஓடவேண்டிய அவசியத்தைச் சொல்கிற படம்- ’சனாதனத்தின் பொட்டிலே இப்படியும் அடிக்கலாம்’ என்பதைக் கற்றுத் தருகிற படம்- கிட்டான் போன்று அவரவர் துறையில் வெறித்தனமான ஈடுபாடு கொண்டிருப்பவர்கள், உத்வேகம் பெறக்கூடிய படம்! அதை மட்டுமே ‘பைசன் என்கிற காளமாடு’ தொட்டுச் செல்கிறது.

ஜப்பானில், இந்தியக் கபடி அணியின் மாற்று வீரராக, ஒற்றை முட்டியில் கிட்டான் அமர்ந்திருக்கையில்தான், எத்தனை நீண்ட போராட்டங்களுக்குப் பின்- குடும்பப் பிரச்சனை, உறவினர் பிரச்சினை, ஊர்ப் பிரச்சினை, காதல் பிரச்சினை, பிற சாதிப் பிரச்சினை என்று கடந்து- அவர் இந்த இடத்திற்கேகூட வந்திருக்கிறார் என்பதை, கிட்டான் மனசு,  காட்சிகளாய் அலச, காட்சியானது, துள்ளலாக ஊருக்குள் உலா புறப்படுகிறது. கிட்டானைக் கபடி வீரராக உருவாகக் குறுக்குச் சால் ஓட்டிய நாசரேத் மர்காஷியஸ் மேனிலைப் பள்ளியும், (கிறித்துவம்தான் இங்குள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கைகளைத் தூக்கிவிட, கல்வியைத் தந்திருக்கிறது) கிட்டானின் சாதியைச் சேராத-கிட்டானின் கபடி ஆவலை அங்குலம் அங்குலமாய் மேல்நோக்கியே நகர்த்தப் பாடுபட்ட-அங்குள்ள உடற்பயிற்சி ஆசிரியர்-கபடி வீரர்- சந்தனராஜும், கிட்டானின்  நினைவின் மேல்தளத்திற்கு வருகின்றனர்.

’நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’-பள்ளியின் முன்னால் அனைவரும் கூடிச்செய்யும் பொது வழிபாட்டு நேரத்தில், அங்கிருக்காமல், வகுப்பறையில் தனியாக அமர்ந்து, மாணவர்களின் உணவுச் சட்டிகளை உருட்டிக்கொண்டு, கையில் கிடைத்ததை அவதியவதியாய் உள்ளுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறான் கிட்டான்! பிரார்த்தனைக்கு ’டேக்கா’ கொடுத்துவிட்டு, வகுப்பறையில் ஒளிந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கான ‘ரெய்ட்’ விட்டுக் கொண்டிருக்கிறார், பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்- பிரம்பும் கையுமாக! அவரிடம் வாயும் கையுமாக மாட்டுகிறான் கிட்டான். காரணம் கேட்டால், ‘பசி’ என்கிறான். பட்டினிப் போட்டுப் பள்ளிக்கு அனுப்பும் அவனின் அம்மாவை அழைத்துவரச் சொல்கிறார் அவர்! அங்கிருந்து துள்ளிப் பறந்த இன்னொரு காட்சியாய்- இறந்துபோன அம்மாவிற்கான கதறலுடன், அம்மாவின் சடலத்தின் பின், ‘அம்மா அம்மா’ என்று கேவலுடன் ஓடிவருகிற அந்தச் சிறுவன், இன்னொரு காட்சித் துள்ளலில், இப்பொழுது கிறுக்கனைப்போல், பன்னிரண்டு ’ரவுண்ட்’ நிற்காமல், பள்ளி வளாகத்தில், பி.டி. மாஸ்டரைப் பீதி கொள்ள வைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அப்போதுதான், கிட்டானின் கபடிப் பசியும், கால்கள் தரையிலேயே நிற்காமல் கட் டுக்கடங்காமல் பறக்கும்  வேகமும் அவருக்குத் தெரியவருகிறது. உண்பதும் கண்மண் தெரியாமல் ஓடுவதும் தாம் கிட்டானின் ’ஜீவன்-டோன்’கள்! கோபம் வந்தால் ஓடுவான்; சோகம் வந்தால் ஓடுவான்; குஷி பிறந்தாலும் ஓடுவான்–அந்த ஓட்டம்தான் ஜப்பான் வரையுமே நிற்காமல், கிட்டானைத் தள்ளிக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அங்கிருந்து இன்னொரு துள்ளல் காட்சியாய், கிட்டானின் கபடிப் பசியைத் தன் பள்ளியின் கபடி அணியிடம் கொண்டுசென்று உரசிப் பார்க்கிறார் அவர்! கபடியால், ஊரையும் பள்ளியையும் விளங்கப் பண்ணப் போகிறவன் அவன் என்பது அவருக்குத் தெரிகிறது. கிட்டானின் ஊரே, கபடிக் ’கோட்டி’ பிடித்துத் திரிவதை அறிகையில், கிட்டானின் ஊர் அணியில் கிட்டானைச் சேர்ந்து விளையாடச் சொல்கிறார் அவர்! கிட்டானின் பார்வையில், காட்சி மணதிக்குத் தாவுகிறது. மணதியின் கபடி அணித் தலைவன் சுந்தரத்தைப் பார்த்துத்தான்-அவர் விளையாட்டைப் பார்த்துப் பார்த்துத்தான்-கிட்டானுக்குள், கபடிப் பசி கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது.  ’எங்கவூர் டைகர் ஸ்போர்ட்ஸின் டைகரே (புலி) அவருதான்’…காட்சியின் துள்ளல், சுந்தரத்தின் கபடி விளையாட்டின் பவுசைக் காட்டுகிறது. ஆனால் என்ன ஒன்று, அந்தச் சுந்தரம், கிட்டா னின் நெருங்கிய உறவினன்-கிட்டான் நேசிக்கும் ராணியின் அண்ணன்-என்பதும், கிட்டானின் அப்பா வேலுச்சாமிக்கும் சுந்தரத்திற்கும் ஆகவே ஆகாது என்பதும், அதனால் இவனை, மணதி கபடி அணியில்-சொந்தச் சாதியாகவே இருந்தபோதும்-சுந்தரம் சேர்க்க மாட்டான் என்பதும் தெரியவருகிறது. இங்கிருந்து காட்சி, இன்னொரு துள்ளல் எடுக்கிறது. இதற்குப் பதிலாக, கிட்டானின் சகோதரி ராஜி, தன் அப்பாவிடம் எரிச்சலுடன் கேட்கிறாள், ’எப்போ! எதுக்கு இந்த ராணியோட அண்ணன் சுந்தரம், கிட்டானைக் கபடி வெளையாட சேத்துக்கவே மாட்டேங்கிறான்?’ ’அவன்லாம் ஒரு ஆளு…அவனெப் பத்தி என்ட்ட கேட்டுக்கிட்ருக்கெ’-இது அப்பா! ‘கிட்டானெப் பாத்தாலே, அவன் கடுகடுன்னு நிக்றான்’ என்று மீண்டும் பொருமுகிறாள். ’அவுங்கப்பன் நம்ம காளமாடனெக் (சாமி) கேட்டான். எங்கப்பன் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். அதெக் குடுக்காத கோபத்லெ, பகையெ வளத்துக்கிட்டிருக்கான்’-சொந்தச் சாதிக்குள், பங்காளி உறவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தீராப் பகை! இன்னொரு காட்சித் துள்ளலில், இன்னொரு பதில் கிடைக்கிறது. கிட்டானை உடற்பயிற்சி ஆசிரியர் பைக்கில் ஏற்றிக் கொண்டுவர, அவர் அந்த உரையாடலைத் தொடர்கிறார்:- ‘அடப்பாவி! சாமிக்காகவா சண்டெ போடுவீங்க…சரி வுடு… நம்ம ஸ்கூல் டீம் இருக்குல்ல…அதுலெ எறங்கி ஆடு’!  குரும்பூர் ’பாய்’ கடை யில், பைக் நிற்கிறது. புரோட்டா சாப்பிட கடைக்குள் அழைத்துச் செல்கிறார். மதம் கடந்து மனிதராய்ச் சாப்பிடப் போகிற அங்குதான், சாதியின் நபும்சகம் முதலில் இரத்தக் களரியாய்க் கட்டவிழ்க்கப்படுகிறது. இவர்களுக்கு எதிரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிற இருவரில் ஒருவர், மிதப்பாக சந்தனராஜிடம் கேட்கிறார்:-’என்ன வாத்தியாரே! பையன்…நம்ம சொந்தக்காரப் பயலா?’. ’ஸ்டூடெண்ட்’-சந்தனராஜ்! அடுத்த கேள்வி அங்கிருந்து, ’நம்மாளுவளா?’- ஆசிரியர் கொதித்துப்போய், ’யோவ்! சோத்தெத்தானெ திங்கவந்தெ...என்னத்தையோ தின்னமாதிரி பேசுறெ?’-எரிச்சலில் அடக்குகிறார். சாதியைக் கடந்துநிற்கும் ஆசிரியர்-மாணவர் உறவு நெகிழ வைக்கிறது. பொதுவில், இப்படித்தான், சாதி இங்கு அடையாளங்காணப்படுகிறது. ’சாருக்கு எந்த ஊரு?..... நம்ம ஊரு பக்கந்தானா?...எந்தத் தெருவு?’- இவ்வளவே போதுமானதாயிருக்கும் ஒருவனின் சாதியை அடையாளம் காண! இதன்பிறகுதான் ஒட்டுதலும் வெட்டுதலும்! இப்பொழுதெல்லாம் சொந்த ஊரு எதுவென்றால், சொந்த ஊருன்னா சொத்து இருக்ற ஊரா?...இருக்குற ஊருதான் எனக்குச் சொந்த ஊரு’ என்று கடந்து போய் விட முடிகிறது- ‘யாதும் ஊரே யாவருங் கேளீர்’- என்ன அருமையான தமிழ் முதுமொழி! ஆசிரியர் சந்தனராஜ், கிட்டானை அங்கேயே புரோட்டா சாப்பிட விட்டுவிட்டு, சாமான்கள் வாங்கிவர வெளியே செல்கிறார். அங்கு தான், பாண்டியராஜின் ஆட்கள், சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர்கள் இருவரையும் இரத்தக் காடாக்கிவிட் டுச் செல்கின்றனர். பாண்டியராஜைக் கிட்டான் அங்குதான் பயத்துடன் பங்கியபடி நேரில் பார்க்கிறான். சாதித் தகராறின் இரத்தப் பலி, திரைப்படத்தில் முதலில் இங்குதான் இரட்டைக் கொலையாகக் காட்டப்படு கிறது. இனி, வெட்டு, குத்து, குண்டெறி என்று, அதுவே பரணி நதிப் பக்கமெல்லாம் படரத் தொடங்குகிறது.

பள்ளிப் பிரச்சினை தொடர்பாய்க் கிட்டானின் குடும்பம் பள்ளியில் காத்திருக்கையில்தான், பாண்டியராஜ் / கந்தசாமி கொடிகள் பறக்கும் அந்த மண்ணில், தன் மகன் கிட்டானை வளர்த்து ஆளாக்குகிற பீதியில் கிட்டானின் அப்பா வேலுச்சாமி விழுந்து கிடப்பதும், பாண்டியராஜ்/கந்தசாமி ஆகிய இருவரின் சொந்த மோதுகை அரசியலும், சாதிய அரசியலான அதன் உருமாற்றமும், நமக்குள் கடத்தப்படுகிறது. பதட்டத்துடன் கிட்டானி டம் அப்பா சொல்கிறார்- ’பாண்டியராஜை நேர்லெ பாத்தியா?...பாண்டியராஜைப் பாத்தேன்னு யார்ட்டயும் சொன்னியா?...சொல்லாத…யார் கேட்டாலுமே சொல்லாத…என்ன… ஊர்லெ ஒங்கூட்டாளிங்க, ஸ்கூல்லெ கூடப் படிக்கிற பசங்க யார்ட்டயும் சொல்லாத என்ன…’ கிட்டான் மனதிற்குள் இதுவரையும் அழுந்திக் கிடந்த கேள்விக் குமுறல்களைத் தன் அப்பாவிடம், ’எப்போ! பாண்டியராஜை ரொம்ப நல்லவருன்னுதானெ சொன்னீங்க….அப்புறம் எதுக்குப்பா இப்படிக் கொலைல்லாம் பண்ணுறாரு?…ஊர்லெ எங்கெ பாத்தாலும் பாண்டியராஜன்–கந்தசாமின்னு சண்டெயாவே இருக்கு…இதெல்லாம் எதுக்கு? எப்பப்பா ஆரம்பிச்சிச்சி?’. கிட்டானுக்கு மட்டுமல்ல, நமக்குமே, அந்தக் கதை இங்குதான் அவிழ்க்கப்படுகிறது, கிட்டானின் அப்பா வேலுச்சாமியால்! ’நம்ம ஊர்க்காட்டெப் பத்திச் சொல்றதுக்கு ஆயிரம் கதை இருக்கு …அதுலெ முக்கியமான கதெ, பாண் டியராஜ் கதெ! நம்ம ஊர்லெ எங்க பாத்தாலும் வேலிதான்…வயலை மறிச்சி வேலி…தண்ணியெ மறிச்சி வேலி…ரோட்டெ மறிச்சி வேலி… ஏன், இங்கெ மனுஷனுக்கு மனுஷனுக்கு இடையிலெகூட, நீ வேற, நான் வேறன்னு பெரிய வேலியா போட்டிருந்தாங்க…வேலியெ எல்லாம் ஒடச்சிட்டு வந்தவர்தான் பாண்டியராஜ்! பாண்டியராஜ் வந்ததுக்கு அப்புறம்தான், மக்கள் எங்கெல்லாம் வேலி கெடக்கோ, அதையெல்லாம் ஒடச்சி எறிஞ்சிட்டு வந்தாங்க. பாண்டியராஜ் நம்ம மக்களுக்காக ஊரூராய்ப் போய் நியாயம் கேட்டாரு…அவருக்கு நெறைய பகை உருவாச்சி’. காட்சி அப்படியே துள்ளிச் சென்று, மீன் குத்தகை ஏலப் பகை/ மோதல் /கொலை/ சாவு வீடு/ கந்தசாமியின் சபதம் – ’ஏய்! ஒருத்தனும் உசுரோட இருக்கக்கூடாது…அந்த பாண்டியராஜாவோட நின்னு, பாத்தவன், பேசுனவன், மொறச்சவன், செரச்சவன்…ஒரு பயா இருக்கக்கூடாது’- என்று கொந்தளிப் பாகிறது. அதன்பின், பாண்டியராஜ் தாக்குதலைக் காட்ட, ஒளிப்பதிவுக் கருவி நகர்ந்துவிடுகிறது. அங்கிரு ந்து, அதன் தொடர்ச்சியான கதையின் உரையாடலுக்கு ஒளிப்பதிவுக் கருவி நகர்கிறது.

இங்குச் சொல்லப்படுகிற ’வேலிக் கதை’ என்பதுதான், மனிதர்களைப் பிரித்தே/வெறுத்தே/விலக்கியே- அஹ்ரகாரம், அவாள் தெரு, இவாள் தெரு, காலனி (இப்போது இதை மாற்றச் சட்டமியற்றி இருக்கிறது திமுக அரசு) - என்றே வைத்திருக்கிறதற்காய் கட்டமைக்கப்பட்டிருக்கிற சனாதனம்! சனாதனத்தைத் தன் மண்டைக்குள்ளேயே பொத்தி வைத்திருந்த ஒற்றைக் கூட்டம், படத்தில் நேரிடையாகக் காட்டப்படவில்லை. அங்கங்கிருந்த ஆதிக்கச் சாதிகளின் உருவத்தில், அதது வேடங்கட்டிக் களமாடத் தொடங்குகிறது. முகத்தை எந்த எரணையிலேயோ சொருகிக் கொண்டு, இதைச் சாதிய மோதலாய் நம் தலையில் கட்டமைக்கவும் தொடங்கிவிடுகிறது. ஆக, மூலக் காரணமான சனாதனம், நம் கண்ணுக்கே தெரிவதில்லை- வேதம், ஆகமம், சாமி, சாத்தான், அருள் வாக்கு, நீதி என்று மனச்சலவை செய்கின்ற சிந்தனையாய், நீக்கமற நிறைந்திருந்து, அதன் இரத்தமும் குரூர மும் மட்டுமே, உழைக்கும் அடித்தட்டுச் சாதிகளின் படையலாய்க் கொண்டுவந்து, சமூகத்தில் நிறுத்தப்படுகிறது.    

’இப்படித்தான் நாளாக நாளாக, இந்த ஊர்க்காடெல்லாம் ரெத்தமாகிடுச்சி…நம்ம ஆள் ஒருத்தன் அவ்வளவு பெரிய ஆளெ எதுத்து நிக்குறானேன்னு சொல்லி, பாண்டியராஜன் பின்னாடி, நம்ம மக்களும், ஒன்னுமே இல்லாதவன் வந்து, நம்ம ஆளெ-அதுவும் இவ்வளவு பெரிய ஆளெ-எதுத்து அடிக்குறானேன்னு சொல்லி, கந்த சாமி பின்னாடி அந்த மக்களும், சேர ஆரம்பிச்சோம். ஒவ்வொருத்தர் வீட்டுக்குள்ளெயும் பாண்டியராஜ் போட்டோவையும் கந்தசாமி போட்டோவையும் போட்டிபோட்டு எல்லாரும் மாட்ட ஆரம்பிச்சோம்… அன்னேலேருந்து, பிரச்சினை பெருசாயிருந்தாலும் சிறுசாயிருந்தாலும், திருநெவேலி தூத்துக்குடின்னு தெக்க மொத்த மாவட்டத்துக்கும், பாண்டியராஜ்-கந்தசாமி பகைதான் எல்லாமே! அதுதான் இங்கெ வாழ்க்கை! அதுதான் இங்கெ போராட்டம்! அதுதான், என்னெயெமாதிரி இங்கெ இருக்குற, ஒவ்வொரு தகப்பனுக்குமான பயமூட்டல்!’–கபடி வீரனை உருவாக்குகிற, கதை உருவான மாவட்டத்தின் சாதிய அடிதடிப் பின்புலம், அந்த ஊரைப் புரட்டிப் போடும் மோதலின் முழுப்பக்கக் கதை, கிட்டானின் அப்பாவால், கிட்டானிடம் சொல்லப்படுகிறது. இந்தப்பின்புலத்தில், படத்தின் கதை – கபடி வீரனின் கதை- அப்பாவின், பிள்ளைமீதான பாசக் கரிசனத்துடன், அவரால் அடுத்துப் பேசப்படுகிறது. இந்தக் காட்சியே, படத்திற்குள் அருமையான நாடகம் ஒன்றை நடத்துகின்ற களனாயிருக்கிறது.

வாத்தியார் வருகிறார். ‘அய்யா பேசி முடிச்சாச்சி. ஒன்னும் பிரச்சினை இல்லெ. இனுமெ பசங்க யாரும் தொந்தரவு பண்ணமாட்டாங்க’ என்கிறார். பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு பிரச்சினை என்பதாய்ப் புரிந்து கொள்கி றோம். அது, கிட்டான் ’பிரேய’ருக்குப் போகாமல், சக மாணவர்களின் சாப்பாட்டுச் சட்டிகளை உருட்டியதற்காகக்கூட இருக்கலாம்-அந்த மாணவர்கள் புகார் கொடுத்திருந்திருக்கலாம். மனசு, அப்படியாகவே கொண்டு கூட்டிச் சமாதானம் சொல்லிக் கொள்கிறது. ’அய்யா! ரொம்ப நன்றிங்கய்யா…என் பையனைக் காப்பாத்திவுட்டதுக்கு’ என்கிறார் மனதிற்குள் ஒடுங்கிப்போயிருக்கும் கிட்டானின் அப்பா! ’அய்யா…என்ன பெரிய வார்த்தையெ விட்டுக்கிட்டு…அவன் என் ஸ்டூடெண்ட். அதுமட்டுமில்லாம எவ்வளவு பெரிய கபடி பிளேயர் அவன்! நாளைக்கி இவனாலதான் இந்த ஸ்கூலுக்கே பெருமெ கிடைக்கப் போகுது’-வாத்தியார் அடி எடுத்துக் கொடுக்க, அதைப் பிடித்துக்கொண்டு, ‘நானும் அதெப் பத்திதான் பேசணும்னு வந்தேன்… எங்களுக்குக் கபடி எல் லாம் வேண்டாம் சார்’ என்கிறார், கிட்டானின் அப்பா வேலுச்சாமி கறாராக! அவரின் கதைகூறல் தொடர்கிறது:- ‘மொதல்ல சாயர்புரத்லெ சேத்துவிட்டேன். கபடி கபடின்னு அவனெ பெயிலாக்கிட்டாங்க…இங்கெ வந்து சேர்த்துவிட்டா…இங்கெயும் கபடி கபடின்னா…பய படிப்பு கெட்டுப்போகும் சார்’. உரையாடல்களில் அத்தனை இயல்பு கொப்பளிக்கிறது. வாத்தியார்தான், உரிமையுடன் பேசுகிறார்: ’என்ன பேசிக்கிட்ருக்கீங்க நீங்க…அவன் ஒடம்பு முழுக்கக் கபடிகபடின்னு ஊறிப் போய்க் கெடக்கு…அதெப்போயி வேண்டாங்குறேங்ளே… என்ன சார்?’. கிட்டானின் அப்பா, ’எனக்கும் தெரியும் சார்… இவனுக்கு மட்டுமில்லெ. எங்க ஊர் நாய் பூனைக்கும்கூட நல்லா கபடி வரும்னு  தெரியும். ஆனா, அதே கபடிதான், என் பையனெ எங்கெனெ கொண்டு போய் விட்ரும்னும் எனக்குத் தெரியும் சார். நான் வெளையாடியிருக்கேன்… எங்க அப்பன் வெளையாண்டிரு க்கான். எங்களாலே எவ்வளவு தூரம் போக முடியும்னு எங்களுக்குத் தெரியும். எங்களமாதிரி சம்சாரிக்கெல் லாம் சரிப்பட்டு வராது சார். நம்ம வூர்க் காட்டுலெ சின்னச் சின்னக் கோபமெல்லாம் எப்படிப் பெரிய ரௌடித் தனமா மாறிடும்னு ஒங்களுக்குத் தெரியாது சார்… எனக்குத் தெரியும். எங்களுக்கு வேண்டாம் சார்’. கிட்டா னின் அப்பாவின் பதட்டத்திலும் உண்மை இல்லாமலில்லை. அந்த மண் அப்படியாகத்தான்- ரத்தச் சேறாக- மாறிக் கிடக்கிறது. மாதா, பிதா, குரு-இவர்கள் மூவரும்தான் கண்முன் தெரியும் நலன் விரும்பிகள்-தெய்வங்கள்! அப்பா, மகன் கிட்டானின் குபேரக் கோபம் கண்டு, கிட்டான் திசைமாறிப் போய்விடக் கூடாதே என்று பயந்து கிடப்பவர்! கிட்டானுக்கு மாதா-அம்மா-இல்லை. அவன் சகோதரி ராஜிதான், மாதாவின் மறு உருவாய், அவனின் ஆசையை அணையவிடாமல் காத்துக் கொண்டிருக்கிறவர். இப்பொழுது, கிட்டான்மேல் அக்கறை கொண்டிருக்கிற ஒருவர், ராஜிக்குத் துணையாக, கிட்டானுக்குப் பரிந்து பேசவேண்டும் என்று அவரின் மனசு துடிப்பது அவரின் கண்களில் தெரிகிறது. அது, கிட்டானின் நேசக் குருவாய்- படித்திருக்கிற பி.டி. ஆசிரியராய்-இருப்பது, அப்பாவை மறுத்துப்பேச, ராஜிக்கு அப்போது தேவைப்படும் கூடுதல் பலமாய் இருக்கிறது. வாத்தியார், கிட்டானுக்கான நியாயங்களைப் பேசுகிறார்:- ’அய்யா… கத்தியெ நாம எடுக்குறோமா… இல்லெ காலம் எடுத்து நம்மக் கையிலெ குடுக்குதான்னு நம்ம யாருக்கும் தெரியாது… புரிஞ்சுக்குங்க’. ராஜிக்கு, மூச்சு விட்டுக்கொள்ள இது சரியான தோதாகிப் போகிறது. ’நல்லா சொல்லுங்க சார். அவனுக்குக் கபடின்னா உசிரு சார். எங்க ஊரு பயலுவளோட சேர்ந்து வம்பாப் போயிருவான்னு சொல்லிச் சொல்லியே வெளையாட விட மாட்டேங்குறாரு சார்’. ராஜியின் பாசத்தையும், வாத்தியாரின் அறிவையும் ஒருசேர எதிர்த்து வாதிட முடியாமல் திணறுகிறார் கிட்டானின் அப்பா!  கெஞ்ச ஆரம்பிக்கிறார்:- ’அவளுக்குத் தெரியாது சார். இங்க ஒரு கை கரண்டி எடுத்தா, இன்னொரு கை கத்தி எடுக்கும். வீட்டெச் சுத்தி அவனுக்குப் பகை சார். சொந்தக்காரன் … சொக்காரனெ நம்ப முடியலெ. கபடி வெளையாடவான்னு சொல்லிக் கை, காலெ ஒடச்சி விட்ருவானுங்க … தாயில்லாத புள்ளெ சார்… இவனுக்குக் கபடி எல்லாம் வேண்டாம் சார்’. இப்பொழுது, ராஜி, தீர்மானமாக, ஒரு தாயாகச் சொல்கிறார், ‘கிட்டா போ… வெளையாடு… நா சொல்றேன்லா…’ அப்பா, ‘தாயீ’ என்று பதறுகிறார். ’நீ சும்மாயிருப்பா….போ… நீ கிளம்பு….ஒன்னும் ஆகாதுப்பா… நாந்தான் இந்த வீட்டுக்குள்ளெ கெட ந்து ஒன்னுமில்லாமப் போய்ட்டேன். அவனாவது, அவன் ஆசப்பட்டதெத் தேடிப் போகட்டும். பயப்படாமெ விடப்பா. போய் ஆடட்டும்’- அருமையான, இயல்பான, மன உணர்வைக் கொட்டும் உரையாடல்கள்-முரண் மோதுகையைக் கொண்டிருக்கிற உணர்ச்சிக் குவியல்களாய் அவை காட்சிக்கு அழகு செய்கின்றன- இவை எல்லாம் ஒரு உதாரணத்திற்கு மட்டுமே- எப்படிக் கதையின் போக்கு, மாரி செல்வராஜின் நெறியாளுகையில் விறுவிறுவென்று நகர்கின்றது என்பதைக் கோடி காட்டுவதற்குத்தான்-இப்படியேதான், அனைத்துக் காட்சிகளும், மோதலாய்-சாதலாய்-காதலாய் மனசிற்குள் வெடித்து உடைபடும் உணர்ச்சிக் கோபுரங்களாய் மனசைக் கலங்க வைக்கின்றன.  

துருவ் - மாரிசெல்வராஜ்

இந்த இடத்தில், சனாதனத்தைக் கோடிட்டுக்காட்டும் இன்னொரு உரையாடலையும் சுட்டிக்காட்ட வேண்டும். அண்ணச்சி கந்தசாமி, கிட்டானை, இனி அவரிடத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட, தன் வீட் டின் மாட்டுக் கொட்டிலில் போடப்பட்டிருக்கிற, கட்டிலில், கிட்டான் வருத்தத்துடன் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கிறான். கிட்டானின் மனசுக்குள் மட்டுமல்லாமல், வெளியிலும் மழை பெய்துகொண்டிருக்கிறது… வேலுச்சாமி வந்தவர், அவனை அந்த நிலையில் பார்த்துப் பதறுகிறார். ’கிட்டா…என்னலெ இங்கெவந்து உக்காந்தி ருக்க…ஏய் ராஜி! இங்கெ வா…ஏய் கிட்டா! என்னதாம்லெ ஆச்சி…ஒன்னெயெத்தானெ கேக்குறேன்’. வந்த ராஜி, ’ஏன் என்னாச்சி?’ என்க, ’தெரியலையே ஏன் இங்கெ வந்து ஒக்காந்திருக்கான்னு தெரியலையே!... கிட் டான் என்னாச்சி?...என்னாச்சி…அப்பா இருக்கேன்ல சொல்லு.’… ’அதெப்படியப்பா…நான் பொறக்றதுக்கு முன்னாடியே, நீங்க பொறக்றதுக்கு முன்னாடியே, ஏன் என் தாத்தனுக்கும் தாத்தன் பொறக்குறதுக்கும் முன் னாடியே, நமக்கு இங்கெ ஒரு பகையும் பழியும் தடையாவே இருக்றதெ எப்படியப்பா புரிஞ்சிக்கிர்றது? எப்படிப் புரிஞ்சிக்கிர்றது? எவனோ ஒருத்தன் வாரான்… நம்மாளுன்னு சொல்லிக் கட்டிப் புடிக்கிறான். இன்னொ ருத்தன் வாரான்…வேற ஆளுன்னு சொல்லிக் கத்தி எடுத்துக் குத்த வாராம்ப்பா. இங்கெ, யார்க்கிட்ட போய் நான் பேசுறது… யாரெப் பாத்து நான் சிரிக்கிறது… யார்கிட்ட போய்ப் பழகுறது?... ஒன்னுமே எனக்குப் புரிய மாட்டேங்குதுப்பா… இன்னைக்கி அண்ணாச்சியெக் கொல்ல வந்தாங்கப்பா… வந்தவன்லாம் ஓடிட்டான்… ஆனா எல்லாரும் என்னையெவே திரும்பிப் பாக்குறங்கப்பா… ஏன் என்னையெ திரும்பிப் பாத்தாங்க?...ஏன் என்னெயெத் திரும்பிப் பாத்தாங்க?... அன்னைக்கி நீங்க ஒன்னு சொன்னீங்கல்ல…வேலியெ ஒடச்சிட்டு ஓடு றதும் ஒரு போராட்டம்னுட்டு…நம்மளச் சுத்தி, எந்த அளவு வேலியெவும் போட முடியாத அளவுக்கு ஓடுறதும், ஒரு போராட்டம்தாம்ப்பா… அப்படித்தானெ நான் ஓடிக்கிட்ருக்கேன்…அப்படித்தானக்கா நான் ஓடிக்கிட்ருக் கேன்’-அந்த வேலியின் வலியெ உணர்ந்த ஒருத்தராலத்தான்- தலைக்குள்ளே சனாதன வெடியைக் கட்டிக் கொண்டு புழுங்கி வாழுற ஒருத்தராலத்தான் – வேலியே போட முடியாத இடத்தை அடைகிற வெறிகொண்டு, கருமமே கண்ணாய் ஓடிக்கொண்டே இருக்கிற ஒருத்தராலதான் -இப்படியொரு மனத் திறப்பைச் செய்யமுடி யும். ’அப்படித்தானெ நான் ஓடிக்கிட்ருக்கேன்’ என்று, கேட்ட அப்பாவிற்குப் பதில் சொல்வதோடு மட்டுமி ன்றி, கேட்காமல், புரியாமல் நின்று கொண்டிருக்கும் அக்காவிடமும், ’அப்படித்தானக்கா நான் ஓடிக்கிட்ருக் கேன்’ என்று அக்காவிற்குமாய்ப் பதில் சொல்லுகிற அந்த அழகு, சிறப்பு! உரையாடல் அங்குதான் உயிர் பெறுகிறது. அதுபோலவே, வேலுச்சாமி தன் மகளை, ‘ஏய் ராஜி!..இங்கெ வா’ என்று கூப்பிடுவதும், அந்தக் குடும்பப் பிரச்சனையில், தன் இயலாமையில், தன் மகள் ராஜியையும் பங்குபெற வைப்பதும், காட்சியின்-உரையாடலின்-கனபரிமானத்தையே கூட்டி விடுகிறது. தாத்தன் பூட்டான் காலத்திலிருந்தே போடப்பட்டிருக்கிற அந்த வேலிதான், சனாதனம் என்பதை, நம் மனசிற்குள், மாரி செல்வராஜ் மெல்ல விட்டுவிட்டு, அந்த மக்களின் பார்வையில் கதையை நடத்திச் செல்கிறார்- இப்படியும் பொட்டில் அறையலாம் என்று! அந்த வலி, அந்தச் சமூகம் பெற்றிருக்கிற வலி! அதை அந்த மனநிலையிலிருந்து பார்த்தால்தான், இன்னொருவரால் அதை மெல்லிதாகவேணும் உணரமுடியும். ‘கற்பி, போராடு, ஒன்று சேர்’- ஒடுக்கப்பட்டுக் கிடப்பவர்களின் வேதம் அது! இப்படியும் நிறைய உதாரணங்களைக் கொண்டு காட்டமுடியும். இதனாலெல்லாம், படம் இரசிக்கிற மாதிரியும், ஒவ்வொருவரும் அந்த உணர்வுகளில் கலந்து செரிக்கிற மாதிரியும், ஒவ்வொரு காட்சியும் அமைந்து விடுகின்றன.  

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா

ராணிக்கு, வீம்பு பிடித்த அவரின் அண்ணன் சுந்தரம் வலுக்கட்டாயமாகத் திருமண ஏற்பாடு செய்து, அதைப் பாண்டியராஜ் தலைமையில் நடத்த விளம்பரமும் செய்திருக்கிறார். ராணி வீட்டைவிட்டு வெளியேவந்து, ராஜி வீட்டிலே நியாயம் கேட்க வருகிறார். இரண்டு குடும்பத்திற்குள்ளும் குமைந்து கொண்டிருந்த பல்வேறு வகையான உணர்ச்சி மோதல்களை-அவர்கள் அனைவரின் ஒவ்வொருவகையான ஏற்ற இறக்கங்களுடனான அலறல்களுடன்- பொட்டலமாய்க்கட்டி, நம் மனசுக்குள் இறக்கிவைக்கும் மந்திரத்தை அந்தக் காட்சி செய்கி றது-செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்!  இந்த இடத்தில், வேலுச்சாமி, ராஜி, ராணி, சுந்தரம், அவன் மனைவி என்று அத்தனைப் பேரும், நம் மனசைப் பாடாய்ப் படுத்தி விடுகின்றனர். அதைத் தொடர்ந்துவரும் ’ராசாத்தி ஒன் நெனப்பு கருவங்காட்டு முள்ளாச்சி …அடியாத்தி ஒன் சிரிப்பு முல்லைக் காட்டுப் பூவாச்சுடி…ஏ! தீக்கொ ளுத்தி…ஏ! தீக்கொளுத்தி’ப் பாடல்-அதன் ஏக்கம்-அதன் துடிப்பு-பற்ற வைத்திருக்கும் அவனின் காதல் நெரு ப்பின் வேதனை- என்று எல்லாமும் நம்மை வறுத்தெடுக்கத் தொடங்குகின்றன. பாடலின் பின்புலத்தில்-அதன் ஆங்காரத்தில், ‘எண்ணே! தாலியெ எடுத்துக் குடுண்ணே, தங்கச்சிக்கு ஒங் கைனாலெ’ என்று ராணி யின் அண்ணன் சுந்தரம், பாண்டியராஜிடம் உரிமைக்குரலில் உரத்துச் சொல்கிறான். தாலி எடுத்துக் கொடுக் கும் சமயத்தில், ‘வேண்டாம்ணே! அவளுக்கு இந்தக் கல்யாணத்லெ கொஞ்சங்கூட இஷ்டமில்லெ’ என்று கல ங்குகிறாள் சுந்தரத்தின் மனைவி! ’வாயெ முடிக்கிட்டு சும்மாக் கெடடி’ என்று கத்துகிறான் சுந்தரம்! ‘ஏலே, என்னலெ…ஊருக்கு மத்தியிலெ பொம்பளெ ஆளெ அதட்டிக்கிட்டு…’என்று பாண்டியராஜ், தன் கோபத்தை ஒரு கருகுமணி அளவு சுந்தரத்திடம் காட்ட, ‘அது ஒண்ணுமில்லெண்ணே! நீ தாலியெ எடுத்துக் குடுண்ணே’ என்று சுந்தரம், பாண்டியராஜை  மரியாதை லாவகமாய் பக்குவம் கலந்து உருட்ட, ‘ஏய்! நீ சும்மாயிருலெ!...நீ சொல்லு தாயி’! என்று பாண்டியராஜ் அவரிடம் நியாயம் கேட்க, ‘அவா ஒரு பையனெ விரும்புறா…அவன் எங்கூரு பையந்தான்…எங்கச் சொந்தக்காரப் பையந்தான்…அவனுக்குக் குடுக்கக்கூடாதுன்னு அவசர அவச ரமா இந்தக் கல்யாணத்தெப் பண்ணுறாங்கண்ணே’ என்று அண்ணி குமுற, ’யாரு’ என்று பாண்டியராஜ் வினவ, அவர் சுந்தரத்தைக் கைகாட்ட, தன் மனைவியைச் சுந்தரம் அடிக்கக் கையை ஓங்குகிறான். ‘எவ்வளவு தைரியம் இருந்தா, எம் முன்னாடியே கை நீட்டுவெ?..முட்டாப் பயலெ! செவுலெப் பேத்திருவேன் பாத்துக்க …ஏ! நீ சொல்லு தாயி… யாரும்மா அது’ என்று, ராணியின் பக்க நியாயத்தைக் கேட்கிறார் பாண்டியராஜ்! ‘அவன் பேரு கிட்டான்… க..க படி பிளேயர்..அவன் சீக்கிரமா இந்தியா டீமுக்கு வெளயாடப் போறான்’ என்று ராணி, கேவிக் கேவிச் சொல்ல, ’அவன் பிச்சைக்காரப் பயாண்ணே…யார் டீமுல்லெ வெளையாடிக்கிட்ருந் தான் தெரியுமா’ என்று சுந்தரம் கொந்தளிக்க,  ’சீ வாயெ மூடுலெ…ஒருத்தன் இந்தப் புழுதிக் காட்லெ உரு ண்டு எந்திரிச்சி அவ்வளவு ஒசரத்துக்குப் போயிருக்கான்…ஒனக்கு அவன் பிச்சைக்காரப் பயலா தெரியுது ல்லெ!’-தொலைச்சிப்புடுவேன் என்று பாண்டியராஜ்  கொதிக்க, ‘அண்ணே! அவன் யார் மூலமா போனான்னு ஒனக்குத் தெரியாதுண்ணெ’ என்று சுந்தரம் பம்ம, ’ஏ யார் மூலமா போனா என்னலெ…அவன் அவன் தெற மயெ வச்சித்தான போயிருக்கான்… என்னைக்கும் அவனுக்கு அடையாளம் ஓம் மண்ணுதானெ…அது பத் தாதா ஒனக்கு?... இங்க பாரு என்னெயெ மாதிரி வேலியெ ஒடைக்கிறது மட்டும் திமிரு இல்லெ…யாருமே வேலியே போட முடியாத ஒசரத்துக்கு ஒருத்தன் போறாம் பாரு,- அதுவும் திமிருதான்…பிச்சைக்காரப் பயலா ம்லா…பிச்சைக்காரப் பய!’ என்று கைக்குண்டாய் வெடிக்கிறார். ‘நாங்க எவ்வளவோ சொன்னோம்ணே… கேக்கமாட்டேங்றான்’ என்று ஊர்க்காரர் கூற, ’என்னது கேக்கமாட்டேங்குறானா…தம்பி! நான் சொல்றேன், நீ கேட்டுத்தான் ஆகணும்… என்னைக்கி அந்தப் பையன் திரும்பி இந்த ஊருக்கு வாரானோ, அன்னைக்கித் தான் இவெ கல்யாணம்…அந்தக் கிட்டாந்தான் இவ மாப்பிளை! ஏதாவது ஏட்டிக்குப்பூட்டி பண்ணாலாம்னு நெனச்சே, கட்டித் தொங்கவுட்டுத் தோலெ உரிச்சிருவேன் பாத்துக்க’ என்று கிளம்புகிறார். வண்டியில் போய்க் கொண்டிருக்கையில், வண்டிக்குள்ளிருந்து பாண்டியராஜிடம் சுந்தரத்திற்காக ஒருவர் வக்காலத்து வாங்க, ‘சும்மா இருலெ…இவனெமாதிரிச் சாதிப் பெருமெ, குடும்பப் பெருமெ பேசுறவனெயெல்லாம் மொத ல்லயே அடிச்சி ஒடச்சிறணும்…இல்லேன்னா நாளைக்கி எவனாவது எங்கெயிருந்தாவது வந்து, நீங்கள்லாம் யாரு தெரியுமா, ஒங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமெ இருக்கு தெரியுமான்னா, என்ன ஏதுன்னு கேக்காம, அவன் முன்னாடி போய்ட்டு, இங்கெ கீழெ இருக்றவங்களைச் சொரண்ட ஆரம்பிச்சிருவாங்க…’ என்று அவர் தமிழகத்தின் புதிய அரசியலை ஜாடையாய்ச் சொல்ல, அவர்,  ‘நம்ம பயலுங்க எப்படிண்ணே அப்படி மாறுவாங்க’ என்க, பாண்டியராஜ் …’மாறுவானுங்கடே…இப்பவே நான் ஏன் கத்தி எடுத்தேங்றதெ இங்கெ, பாதிப் பேர் மறந்திட்டானுங்க… இங்கெ எவனும் மேலெயும் கெடையாது கீழெயும் கெடயாதுன்னு சொல்லி, எல்லா ரும் சமம்தான்னு சண்டெ போட்டோம்.. அதையும் எல்லாரும் நைசா இப்ப மறந்துட்டானுங்களே! இன்னை க்கி உரிமைக்காக நாம போடுற சண்டையெக்கூட இழிவுன்னு சொல்லுவானுங்க….இன்னைக்கி, ஒன்னா பேசி கூட வெளையாடிக்கிட்டு இருந்தவனெ, பிச்சைக்காரன்னு சொல்ற புத்தி வந்திருக்குமா? இவனுகளே இந்தப்பாடு படுத்துறாங்களே, மேலெப் போகப்போக இந்தக் கிட்டான் பயலெ என்ன பாடு படுத்தப் போறங் களோ?’-இது பாண்டியராஜின் குரல்!- இதற்குள் அமிழ்ந்திருப்பது மாரி செல்வராஜின் ஒரு குரலாகவும் இருக் கிறது. நம்மின் மனதின் குரலாகவும் அதுவே இருக்கிறது.  அது சமுதாய வளர்ச்சிக்குத் தேவையான குரலும் கூட-இதற்குள்தான் திராவிடத்தின் மல்லுக்கட்டும், பொதுவுடைமை இயக்கத்தவரின் மல்லுக்கட்டும், அம்பே த்கர் இயக்கவாதிகளின் மல்லுக்கட்டும்-மனித வளச்சியில், சனாதனத்திற்கெதிரான சமத்துவத்தின் மல்லுக்க ட்டுமாய், இந்த மண்ணிலே இருக்கிறது.    

சனாதனத்திற்கு எதிரான சமத்துவம் என்பது, ஒவ்வொருவரின் சிறப்புத் திறமையைக் கொண்டு, எந்தவகையி லும் வேலியே போட முடியாமல் செய்வதுதான் என்பதில் பாண்டியராஜும் திருவள்ளுவரின் அறத்தின்பின் நிற்கிறார்  என்பது உணர்த்தப்படுகிறது. இது, வேலியை உடைக்கிற/ வேலியைப் போடவே முடியாமல் திற மையை வளர்க்கிற குணத்தில் ஒன்று சேருகிற ஒரு கூட்டத்தவரின் கதை என்பதால், தெரிந்தோ தெரியா மலோ, படைப்பாளி மாரி செல்வராஜ் அந்தக் கூட்டத்தவரைச் சேர்ந்தவர் என்பதால், கதையின்போக்கில் இது முக்கிய இடத்தை எடுத்திருப்பதாய்த் தெரிகிறது.  அதேநேரத்தில், அண்ணாச்சி கந்தசாமி இந்தக் கூட்ட த்தவரின் திறமையை மதிக்கிற, அதற்கு/ அவர்களுக்கு உதவுகிற நல்லவராக, அதேவேளை பாண்டியராஜின் பகைமுடிப்பவராகக் காட்டப்படுகிறார். சனாதனம் என்கிற வேலியை, வேதமாய் மண்டைக்குள் வகுந்து வைத்தவன், கண்ணுக்கெதிரே களத்திலேயே இல்லை. காவல்காரனுக்கும் கழனியில் வேலை செய்பவனுக்கு மான சண்டையாக மட்டுமே இது முன்னிறுத்தப்படுகிறது. கத்தி எடுத்தவர்களின் கதை கத்தியாலேயே முடி த்து வைக்கப்படுகிறது. குண்டு வீசுபவர்களின் கதை குண்டாலேயே முடித்து வைக்கப்படுகிறது-இது சொந் தப் பகையில் விளைந்த சாதிகளின் பகையாகிய, எதார்த்தத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறது மாரி செல்வரா ஜின் ஒளிப்பதிவுக் கருவி!              

இசை, ஒளிப்பதிவுக் கருவியைப்போல், நம் கைபிடித்து, நாம் போயிருக்காத-  பழக்கப்பட்டிராத- சந்துகளுக் குள் எல்லாம் நம்மை அழைத்துச் சென்று,கேட்டிருக்காத கதறல்களையும் குமுறல்களையும் விரட்டல்களையும் வீறாப்புகளையும் அடிக்கோடிட்டுக் கதை சொல்லவரும் கருத்தியலுக்குக் கனம் சேர்த்திருக்கிறது அல்லது தன்னையும் இன்னொரு கதாபாத்திரமாய், காட்சியின் உணர்வுகளுக்கு வலு சேர்க்க, படத்தின் கூடவே பக்க பலமாய் வந்து கொண்டேயிருக்கிறது. கதையின் விறுவிறுப்பைப் படத் தொகுப்பு எகிற வைத்திருக்கிறது என் பது 100%  உண்மை! தொழில்நுணுக்கர்கள் அத்தனைப் பேரின் ஒற்றைப் பொதுச் சொல்லாய் மாரி செல்வ ராஜ் நின்று, படத்தைப் பெருமிதப்பட வைத்திருக்கிறார். இதில் நடித்திருக்கிற அத்தனைக் கதாபாத்திரங்க ளும், மாரி செல்வராஜ் மனசாய் நம்மைக் கலக்கியிருக்கின்றனர். அத்தனைப் பேர் முகங்களும் அவர்களின் ஏக்கங்களும்,மனசுக்குள்ளே ஓவியமாய்த் தங்கிப் போயிருக்கின்றன. அமீர் (பாண்டியராஜ்), லால் (கந்தசாமி), பசுபதி (வேலுச்சாமி) தவிர, யாரும் எனக்கு முகம் தெரிந்தவர்களில்லை. ஆனால் அத்தனைப் பேரும் மிரட்டி யிருந்தனரென்பது எளிய பாராட்டு மட்டுமே ஆகும்.

ராணி கதாபத்திரம் அற்புதம். கர்ணனின் ’கோழிக் கிழவி’போல், இன்னுமொரு அசாத்தியமான, வெளிச்சொல்லச் சங்கடப்படுகிற பாத்திரம். அந்த ஒல்லி உடம்பு; அதற்குள் ஒளிந்திருக்கும் வைராக்கிய மனம்; வயது மூத்திருந்தால் என்ன என்கிற மதர்ப்பு; கண்களில் தீப்பிழம்பு-அதற்கு முழுக்கவும் தன்னை ஒப்புத் தந்திருக்கிறார் அவர்! அவர் அண்ணனாக வரும் சுந்தரம்-யப்பா, அந்த மண்ணின் உணர்ச்சிகளைக் குழைத்து உருவக்கியிரு ந்த அசாத்தியம் அவர்! பொறாமையின் ஆளுமை அவர்! அத்தனை இயல்பு! மண்ணின் மனிதரென்பது, அவ ரின் அத்தனை அசைவுகளிலும், பீறிட்டெழும் மண்ணின் மொழியிலும் எக்காளமிட்டுக்கொண்டே இன்னமும் இருக்கின்றன. ராஜி கதாபாத்திரம் இன்னொரு அதிசயம். தம்பியின் கனவை நிறைவேற்ற, இல்லாத தன் தாயின் பொறுப்பாய், தம்பிமேல் உயிரையே வைத்துக் கொண்டிருக்கும் ஓர் அழகிய ஜீவன்!-அதற்கு மிக இய ல்பாக நியாயம் செய்திருக்கிறார் அவர்! வாத்தியார் சந்தனராஜ்-அந்தப் பகுதியில் நான் பார்த்திருந்த, எனக் குப் பழக்கப்பட்ட ஒரு முகமாகவே தெரிகிறார். இம்மாதிரி மனிதர்கள்தான், சமூகத்தை நேர்கோட்டில் இயங்க வைத்துக் கொண்டிருப்பவர்கள். அட்சயப் பாத்திரத்தைத் தன் மனசாய் ஆக்கி வைத்திருப்பவர் அவர்! ஆசிரியர்-மாணவர் உறவு என்பது, இப்படித்தான் ஆத்மார்த்தமாக அமையவேண்டியது. மாணவனின் வளர்ச்சியில், இப்படியான ஆசிரியர்களின் பங்கு என்றும் நினைக்கப்படும்! அந்தப் பாத்திரத்தைத் தன் ஆன்மாவாகவே கொண்டிருக்கிற ஓர் அற்புத ஆத்மா என்பதாய், அவர் தன்னை நிறுத்தியிருக்கிறார். இப்படி எல்லோரும், மாரி செல்வராஜ் கனவிற்கு தங்களைச் செதுக்கித் தந்திருக்கின்றனர் அல்லது அவர்களைத் தன் மனசிற்கேற்பப் பட்டை தீட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ்!

அமீர்

பாண்டியராஜ் என்கிற போராளிப் பாத்திரம் யார் என்பதை, அமீரின் தோற்றமும், அவரின் கருத்தியல் கறார்த் தன்மையும், குரலின் கம்பீரமும் நமக்குப் புரிய வைத்துவிடுகின்றன. அவர் ஏற்றதால் மட்டுமே, அந்தப் பாத்தி ரத்தின், எதற்கும் அஞ்சாத துணிவும், உண்மைத் தன்மையும், அமீரின் குணத் தன்மையும் 100% பொருந்திப் போய்விடுகின்றன. பருத்தி விரன் படம் வெளிவந்த சமயத்தில்,  புதிய பார்வைக்காக அமீரின் பேட்டியை (மே 16-31, 2007) நான் எடுத்திருந்தேன். பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டு வருகையில், ஒன்றைச் சொன் னார். அது, ‘என் குணம் என்னன்னா…எந்த வேலெயெச் செய்தாலும், அதெப் பேர் சொல்ற மாதிரி சிறப்பாச் செய்யணுங்றது! என்னெயெக் கொண்டுபோய் ஒரு ஓட்டல்லெ மேஜையெத் தொடைக்க விட்டாக்கூட அது லெயும் நாந்தான் முதல்தரமா மேஜையெத் தொடைக்கணும்னு நெனைப்பேன். அதுலெ என்னெல்லாம் வித்தி யாசம் செய்ய முடியும்னு யோசிப்பேன்….இதுதான் என் செயல்பாடுகளுக்கெல்லம் அடிப்படை’-வள்ளுவரின் ‘சிறப்பொவ்வா செய்தொழில்’ என்பதன் புதிய பொருளை அது அப்பொழுது விளக்குவதாயிருக்கிறது. படத் தின் கருத்தான இதையேதான்–’வேலியே போட்டுவிட முடியாத உசரம்’- ’சிறப்பொவ்வா செய்தொழில்’ என் கிறார். அதற்காகவேதான் கிட்டன் ஓடிஓடித் தன்னை உருவேற்றிக் கொண்டிருந்திருக்கிறான். என்ன இயல் பான பொருத்தம்!  லால், எந்தப் படத்தில் எந்த வேடம் ஏற்று வந்தாலும், அது புதிதாகவே, இயல்பாகவே தோன்றும் -அதற்குரிய சிறுசிறு அசைவுகளில்/ பார்வைகளில் அழகுபடுத்தி விடக்கூடியவர். அவருடைய முக வாகு அப்படியானது. கந்தசாமியாக வந்து, அவருடைய நடிப்பால், அந்தக் கதாபாத்திரத்தைக் கம்பீரமாக்கித் தந்திருப்பவர். அவரின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவே, கதையில், எதிரிகளிடம் மோதிக் கொண்டி ருப்பவர்–அருமையாகச் செய்திருக்கிறார் லால்! என்ன ஒன்று, பாண்டியராஜ் சமூகத்து ஆட்களைச் சார்ந்தே கதை நகர்வதால், அவர்களின் பார்வையில் கந்தசாமி பார்க்கப்படுவதால், அவரின் விஸ்தீரணம், கதைக்குள் மட்டுப்பட்டே வருகிறது. ஆசிரியர் (சந்தனராஜ்)- மாணவர் (கிட்டான்) உறவைப்போல், கந்தசாமி-கிட்டான் உறவும் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் தரையில் வைப்பதுபோல், மிக நிதானமாகவும், பொறுமையாகவும் வைத்துக் காட்டப்பட்டிருப்பதற்குப் படத்தின் நெறியாளுநருக்கு நன்றி சொல்லவேண்டும். இது, சாதிய மேலாண்மையைச் சொல்லுகிற படமல்ல என்பதற்கான எளிய உதாரணம், பாண்டியராஜும், கந்தசாமியும் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணம், அவர்களின் சொந்தச் சாதி ஆட்களால் மட்டுமே என்பது முக்கியம்! இன்னொன்று, கிட்டான், தமிழ்நாடு அணிக்குத் தேர்வாகிறபோதும், இந்தியா அணிக்குத் தேர்வாகிறபோதும், அங்கெல்லாம் சாதி என்பது மட்டுமே தடையாயில்லை. உதவுவதற்கு வேறுவேறு நபர்கள் வரவேண்டியதிருக்கிறது. மாவட்டம், மாகாணம் என்பதும்கூட தடுப்பதற்கான காரணங்களாய்ப் பேசப்படுகின்றன.  ஆக, திறமையை மீறி, பாகுபாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற, ஆதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கும்  சனாதனம்தான், எல்லா இடங்களிலும், நீறுபூத்த பிரச்சினையாய் வெளியே தெரிகிறது.

வேலுச்சாமி என்கிற பசுபதி-படத்தின் இன்னொரு கதைநாயகனாய் அவர் ஜொலிக்கிறார். மற்றைய கதாபாத் திரங்கள் எல்லாம் நூல் பிடித்தது மாதிரி, சேணம் கட்டிய குதிரையாக வேகமெடுத்துவிட முடியும். ஆனால் இந்தக் கதாபாத்திரம், எல்லாவித உணர்ச்சிகளையும், அதன் ஆரோகண அவரோகண நிலைகளில், உடனுக் குடன் மாற்றிமாற்றி, தவிப்பில் ஜாலவித்தை செய்துகொண்டிருக்கிற,  மந்திர விசையை உட்செரித்த ஒரு பாத் திரம்! அதற்கு ஜீவிதம் கொடுத்திருக்கிறார் பசுபதி! வாழ்த்துகள். அடுத்து கதையின் நாயகன், கிட்டான் என் கிற துருவ் விக்ரம்! மொத்தப் படத்திலும் அவர் பேசுகிற உரையாடல்கள், அரைப் பக்கம் இருந்தால், அது அதிகம்! ஆனால் உடம்பும் மனசும், இந்தப் படத்தின் குவிமையத்தைச் சுற்றியே அலைந்து கொண்டிருப்பதை, அவரின் உடல்மொழி நமக்குக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அவர் கண்கள், அந்த வெறியைக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. பட்டறையில், பட்டை தீட்டப்பெற்றிருக்கிற அவரின் உழைப்பு, அவரின் உடலுக்கான தேஜஸைத் தந்திருக்கிறது. அவரின் உடம்பிற்கும் மனதிற்கும் ஏற்ற, மிகச் சரியான பாத்திரம்! கடைசி வரையும் எந்த இடத்திலும் அவர் சடைத்துப் போய்விடவில்லை என்பது அவரின் உடம்பின்-மனசின் மந்திரமாயிருக்கிறது-அவர் உண்மையில் பைசனேதான்! ‘நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும்’ என்கிற வாலியின் பாடல் வரிகளைக் கொண்டு, இதை இப்படி முடிக்கலாம்:- சனாதனத்திற்கு எதிரான படிப்பினையை, சமூகத்திற்கு இப்படியும் உணர்த்தலாம் என்பதை உணர வைத்திருக்கிற படம்- பைசன் என்கிற காளமாடன்! படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!